Tuesday, April 8, 2014

முடிவுக்கு வந்தது அமெரிக்க அத்தியாயம்

ஒரு நாடு இன்னொரு நாட்டை விழுங்கி ஏப்பம் விடுவதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் நடக்கிற விஷயமில்லை என்று உலகம் நம்பிக் கொண்டிருந்தது.

ஏன் நடக்காது? இதோ பார், என்று அண்டை நாட்டின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சொந்தமாக்கி கொண்டிருக்கிறது ரஷ்யா.

அய்யோ அய்யோ என்று அலறுகின்றன ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகள். பிடித்த இடத்தை மரியாதையாக திரும்ப கொடுத்துவிட்டு போய்விடு என அமெரிக்கா எச்சரிக்கிறது. இதோடு நிறுத்திக் கொள்; இல்லையென்றால் விபரீதம் ஆகிவிடும் என்று ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுக்கின்றன. மனதில் இருப்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது சீனா.

ரஷ்யாவின் அண்டை நாடு உக்ரைன். முன்பு சோவியத் யூனியன் என்ற பெயரில் கம்யூனிச வல்லரசு கொடி பறந்த காலத்தில் அதன் ஓர் அங்கமாக இருந்தது. இன்றைய மொத்த ஐரோப்பாவிலும் பெரிய நாடு அதுதான். சோவியத் யூனியன் என்ற அமைப்பே பல நாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது போல, உக்ரைனும் வெவ்வேறு இனங்களின் ஆட்சி மண்டலங்களை கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று க்ரீமியா. உக்ரைனின் தென்கோடி தீபகற்பம். அங்கு வசிக்கும் மக்களில் முக்கால்வாசி பேர் ரஷ்யர்கள்.

க்ரீமியாவுக்கு சோவியத் யூனியனில் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டிருந்தது. ரஷ்ய குடியரசின் அங்கமாக இருந்த க்ரீமியா, 1954ல் உக்ரைன் குடியரசின் அதிகார வரம்புக்கு மாற்றப்பட்டது. எல்லாமே சோவியத் குடையின் கீழ் இருந்ததால் பிரதமர் குருஷேவின் நடவடிக்கை பெரிதாக யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. 1991ல் சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பின் ஆளுமை முடிவுக்கு வந்ததை அடுத்து, உக்ரைனில் தன்னாட்சி அமைப்பாக க்ரீமியா சுய பிரகடனம் செய்தது. அப்போது முதலே க்ரீமியாவின் பெரும்பான்மை ரஷ்யர்களுக்கும் உக்ரைன் அரசுக்கும் ஆகவில்லை. எனினும், 1995ல் க்ரீமியாவை உக்ரைனின் ஒருங்கிணைந்த பிரதேசமாக அங்கீகரித்து ரஷ்யா ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உக்ரைனின் எல்லைகளை – க்ரீமியா உட்பட- பாதுகாப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் உறுதிமொழி அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதுதான் இப்போது மீறப்பட்டுள்ளது. உக்ரைன் கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பாவுடன் ஐக்கியமாகி வருவதாக ரஷ்யாவுக்கு கவலை ஏற்பட்டது. இப்படியே போனால், அன்றைய சோவியத் யூனியனின் செல்வாக்கை தடுக்க அமெரிக்கா தலைமையில் மேலைநாடுகள் உருவாக்கிய நேட்டோ அமைப்பின் அங்கமாக உக்ரைன் மாற்றப்படும்; அவ்வாறு நிகழ்ந்தால் அது ரஷ்யாவுக்கு பெரிதும் பாதகமாக அமையும் என்று ரஷ்ய அதிபர் புடின் நம்பினார். உக்ரைன் அதிபராக தேர்வு செய்யப்பட்ட ரஷ்யருக்கு எதிராக வெடித்த உள்நாட்டு போரை சாதகமாக்கிக் கொண்டு க்ரீமியாவுக்கு படைகளை அனுப்பி, ரத்தம் சிந்தாத ஒரு யுத்தம் நிகழ்த்தி க்ரீமியாவை இம்மாதம் முதல் வாரத்தில் சொந்தமாக்கினார் புடின். மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி அதற்கு அங்கீகாரமும் பெற்றார்.

மின்னல் வேகத்தில் புடின் எடுத்த நடவடிக்கைகள் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஓட்டெடுப்பு செல்லாது; க்ரீமியவை ரஷ்யாவுடன் இணைத்த்து செல்லாது என அதிபர் ஒபாமா அறிவித்தார். ஐ.நா சபையும் அவ்வாறு அறிவிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரான சீனா அந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. ரஷ்யாவும் நிரந்தர உறுப்பினர். அந்த அடிப்படையில் தடுப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை முடக்கிவிட்டது. எனவே ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார் ஒபாமா.

புடின் அசரவில்லை. உன்னால் ஆனதை பார் என்று கூறிவிட்டார். அமெரிக்காவின் செல்வாக்கு இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் அறிவிப்பாளராக நிற்கிறார் அவர். மிக்கேல் கார்பசேவ் ஆட்சிக் காலத்தில் சோவியத் யூனியன் வீழ்ந்து மறைந்த்து போல பரக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் அத்தியாயத்துக்கு ’முற்றும்’ போடப்படுகிறது என ஐரோப்பிய ஊடகங்கள் எழுதுகின்றன.

'க்ரீமியாவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் ரஷ்யர்கள். அவர்கள் உக்ரைன் அரசில் ஓரங்கட்டப்படுவதாக நினைத்தார்கள். உரிமைகள் மறுக்கப்படுவதாக குமுறினார்கள். ஆகவே ரஷ்யாவுடன் இணைய விரும்பினார்கள். அவர்களின் நியாயமான விருப்பத்தை ரஷ்யா நிறைவேற்றியது. இதில் மேலைநாடுகளுக்கு கவலை ஏற்படுவது அனாவசியமானது' என்று புடின் கூறுகிறார்.

ஒபாமா எடுத்துள்ள நிலைப்பாடு மிகவும் பலவீனமானது என்று உலகம் நினைக்கிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு உலகின் ஒரே வல்லரசாக மிஞ்சியிருக்கும் அமெரிக்கா, எங்கே எப்போது எந்த நாட்டுக்கு பிரச்னை ஏற்பட்டாலும் காப்பாற்ற ஓடிவரும் என்ற நம்பிக்கை க்ரீமியா விவகாரத்தால் தகர்க்கப்பட்டு விட்டதாக பல நாடுகள் கருதுகின்றன. உலக போலீஸ்காரன் என்ற அமெரிக்காவின் இமேஜ் தரைமட்டம் ஆகிவிட்டதாக அதன் அபிமானிகளே கவலைப்படுகிறார்கள்.

’உனது எல்லைகளை நான் பாதுகாத்து தருகிறேன்’ என்று உக்ரைனுக்கு எழுத்து மூலம் கொடுத்த உறுதிமொழியைக்கூட அமெரிக்காவால் காப்பாற்ற முடியவில்லை என்றால் இனிமேல் எந்த சுண்டைக்காய் நாடும் அதை நம்பப்போவதில்லை என ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

அமெரிக்காவின் செல்வாக்கு சரிவதால் சர்வதேச அரசியலில் பல மாற்றங்கள் நிகழக்கூடும். வல்லரசு என்ற அந்தஸ்தை இழந்த சோகத்தில் இருந்து மீள விரும்பும் ரஷ்யா தவிர, அந்த கவுரவத்தை பெற ராணுவ பலத்தை பெருக்கிவரும் சீனாவும் இனி பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறலாம். சீனாவுக்கு அதை சுற்றியுள்ள அனைத்து நாடுகளுடனும் நில எல்லை அல்லது கடல் எல்லை தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றன. ரஷ்யா ஸ்டைலில் சீனாவும் பலத்தை காட்டி அண்டைநாடுகளை பணிய வைக்க முயற்சி செய்யலாம். தென் சீன கடலில் ஏற்கனவே அதற்கான ஒத்திகையை சீனா தொடங்கி விட்டது. ரஷ்யாவை தடுக்கமுடியாத அமெரிக்காவால் சீனாவை மட்டும் என்ன செய்துவிட முடியும்?

எதிரிகளிடம் இருந்து அமெரிக்கா நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில், சொந்த ராணுவத்தை பலப்படுத்த பெரிதாக முயற்சி செய்யாத சிறுநாடுகள் திகைத்து நிற்கின்றன. ’எதிரியிடம் சரணடைந்து விடுவோம்; அல்லது அணுகுண்டுகள் தயாரித்து ரெடியாக வைப்போம்’ என்ற நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இந்த எண்ணம் வலுவடைந்து வருகிறது.

அமெரிக்கா அப்படியொன்றும் யோக்கியமான நாடு அல்ல. வேறு எந்த நாட்டைகாட்டிலும் பொருளாதார பலமும் ராணுவ பலமும் இருப்பதால் அனாவசியமாக அடுத்த நாடுகளின் சொந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்து நிறைய தப்பு செய்திருக்கிறது. வியட்நாம், ஆப்கானிஸ்தான், இராக் போன்று சில தலையீடுகள் பெரிதாக பேசப்படுபவை. உண்மையில் கடந்த 150 ஆண்டுகளில் அமெரிக்க படைகள் ஏறத்தாழ 80 நாடுகளில் கால் பதித்துள்ளன.

உலகெங்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நேர்வதை தடுக்கவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும் அமெரிக்கா தன் படைபலத்தை பயன்படுத்த தயங்காது என்று கென்னடி சொன்னார். ஆனால், ஒரு சில சந்தர்ப்பங்கள் தவிர அமெரிக்க படையெடுப்புகள் எல்லாமே சுயநலன் அடிப்படையில் அமைந்தவை. அதே சமயம், அமெரிக்கா தலையிடுமோ என்ற அச்சம் சில ரவுடி நாடுகள் வாலை சுருட்டிக் கொண்டிருக்க உதவியதையும் மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் பார்க்கும்போது, அமெரிக்காவின் செல்வாக்கு அடக்கம் செய்யப்பட்ட பிறகு தட்டிக் கேட்க ஆளில்லாத உலகில் பலம் மிகுந்த நாடுகள் மற்ற நாடுகளை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கும் என்பதை சுலபமாக ஊகிக்கலாம்.

(இழு தள்ளு 17 / கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 10.04.2014)
(4 photos)


                                                                 Kathir Vel

No comments: