ஒரு ஒட்டகம் வழி தவறி காட்டுக்குள் வந்துவிட்டது. காட்டுக்குள் இருந்த நரி, அதை சிங்க ராஜாவிடம் கூட்டிச் சென்றது. சபையில் இருந்த அனைத்து விலங்குகளும் ஒட்டகத்தை அதிசயமாகப் பார்த்தன. ஒட்டகம் தன்னுடைய சோகமான ஃப்ளாஷ் பேக்கைச் சொன்னவுடன் சிங்கம் மனமிரங்கி "இனி நீ என் காட்டில் வாழலாம், உனக்கு தீங்கு வராமல் நான் காப்பேன்" என்று உறுதியளித்தது. ஒட்டகமும் நம்பிக்கையுடன் சந்தோஷமாக அங்கேயே தங்கி விட்டது.
சில காலம் சென்று, சிங்கத்திற்கு வயதாகிவிட்டது. முன்போல் வேட்டைக்குச் செல்ல முடியவில்லை. அதையே அண்டி வாழ்ந்த நரிக்கும் கஷ்டமாப் போச்சு. "அந்த ஒட்டகத்த அடிச்சு சாப்டா என்ன?" என்று நரி ராஜாவிடம் கேட்டது. "கூடாது அதை நான் காப்பதாக வாக்களித்திருக்கிறேன்". நரி ஒரு திட்டம் தீட்டியது. "ஒட்டகமே வந்து என்னை சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் என்ன செய்வீர்கள் ராஜா" என்றது. "ஹ்ம்ம் அப்படியென்றால் சாப்பிடலாம்".
நரி தன்னுடைய சகாவான சிறுத்தையையும் கூட்டிக் கொண்டு ஒட்டகத்திடம் சென்று, "நம்ம ராஜா பாவம், பசியால வாடுறாரு, நாம நம்ம உயிரக் குடுத்தாவது காப்பாத்தலாம்" என்றது. வேறு வழியில்லாமல் ஒட்டகமும் அவர்களுடன் சென்றது. முதலில் சிறுத்தை, சிங்கத்திடம் சென்று "என்னைக் கொன்னு சாப்டுக்கோங்க ராஜா" என்றது. சிங்கம் முடியாது என்று மறுத்துவிட்டது. பிறகு நரியும் சென்று கேட்டது. சிங்கம் மறுத்துவிட்டது. நம்ம ஒட்டகம் "அப்பாட நம்மையும் விட்ருவாரு" என்று நினைத்து ராஜாவிடம் கேட்டது. சிங்கம் அடித்துக் கொன்றுவிட்டு, நரி, சிறுத்தையுடன் சேர்ந்து ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது.
நீதி: நயவஞ்சகர்களிடம் யோசனை கேட்கும் நல்ல தலைவனையும் நம்பாதே!!!
No comments:
Post a Comment