Thursday, April 3, 2014

''நான்'' பிறந்த கதை- 01

கவிஞர் அஸ்மின்
--------------------------------------

எனது வாழ்க்கை பயணத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்த நிகழ்ச்சி சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள்.ஊரறிய இருந்த என் திறமைகளை உலகறியச் செய்ய அடிகோலியது இந்த நிகழ்ச்சி.இன்று நான் தென்னிந்திய சினிமாவில் பாடல் எழுதுவதற்கு ஆரம்ப விதை தூவியது இந்த நிகழ்ச்சிதான்.

இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இப்போது முகாமையாளராக பணிபுரியும் சகோதரர் ஷியா இருந்தார்.பின்னாளில் வந்த என் ஒவ்வொரு வெற்றியிலும் அவருக்கும் அதிகமான பங்கு இருக்கிறது.அவரை இந்த நிமிடத்திலும் நன்றியுடன் நினைவுகூறுகின்றேன்.

2008ம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்ச்சி ஒரு வருடகாலமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.இந்த நிகழ்ச்சியின்வாயிலாக பல புதிய கலைஞர்கள் இலங்கையில் உருவானார்கள்.போட்டியில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில் இருந்து 3 சுற்றுத் திறந்த தேர்வுகளின் பின் 16 பாடலாசிரியர்கள், 16 இசையமைப்பாளர்கள், 16 பாடகர்கள், 16 பாடகிகள் 16 ராகங்களுக்கு  ஏற்ப தெரிவு செய்யப்பட்டனர்.



இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களா இசையமைப்பாளர் கருப்பையா பிள்ளை பிரபாகரன், கனிவுமதி ஆகியோரும் இருந்தனர்.இந்த போட்டியில் தெரிவாகிய அனைவருக்கும் இந்திய சென்று திரைத்துறை கலைஞர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பினை சக்தி ஏற்படுத்தி தந்திருந்தது.எனது முதலாவது வெளிநாட்டுப்பயணமும் இதன் மூலமே நிகழ்ந்தது.பத்து தினங்கள் நாம் சென்னையில் இருந்து பல கலைஞர்களையும் சந்தித்தோம்.

நான் பாடலாசிரியராக இருந்த எமது குழுவின் பெயர் ''ஹம்சத்வனி'' எமது குழவின் இசையமைப்பாளராக மோகன் என்பவர் இருந்தார்.அவர் இப்போது எங்கே இருக்கின்றாரோ தெரியவில்லை.பாடகராக சகோதர மொழியை சேர்ந்த ஜிதேந்திரா, பாடகியாக சுவர்ணியா இருந்தனர்.எமது குழு சந்தித்த இயக்குனர் ஏ. வெங்கடேஷ் அவர் சொன்ன கதைக்கு ஏற்ப நான் பாடலை எழுதினேன்.என்னோடு சேர்ந்து பயணித்த 16 பாடலாசிரியர்களுள் யாருமே பாடலை எவ்வாறு எழுதுவது என்று  பதற்றத்தோடு யோசித்துக்கொண்டிருக்கும்போது
அவர்கதை சொல்லி இரண்டு மணித்தியாலங்களுக்குள் நான் பாடலை எழுதிவிட்டேன்.இதனை கவிஞர் செல்வா, கவிஞர் முள்ளிப்பொத்தானை ரியாட் ஆகியோர் அறிவர்.

அதன் பின்னர் 'வித்த கவிஞர்'' பாடலாசிரியர் பா.விஜய் அவர்களை 16 பாடசிரியர்களும் அவரது இல்லத்தில் சந்தித்தோம் அவர் இன்முகத்தோடு எம்மை வரவேற்றார்.அவரிடம் எல்லோரும் பாடலியற்றல் பற்றி சந்தேகங்களை கேட்டுக்கொண்டிருக்கும்போது ''நான் இயக்குனரின் கதைக்கு பாடல் எழுதி இருக்கிறேன்'' என்று  சொல்லி அவர் முன்னே நானே மனதுக்குள் போட்ட  மெட்டோடு எழுதிய பாடலை பாடிக்காட்டினேன். என் பாடல்வரிகளை பற்றி வெகுவாக சிலாகித்து பேசிய அவர் ஒரு திரைப்பட பாடலுக்கான அனைத்து தகுதிகளும் இந்த பாடலுக்கு இருக்கிறது  ஆனால் ''உன் டாவின்சி பார்வையினால் நான் ஓவியனாகிவிடடேன்'' என்ற ஆங்கிலம் கலந்த  வரியை தவிர்த்துவிடுங்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

அந்த பாடல் வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது. ஆனால் எமது குழுவின் இசையமைப்பாளர் மோகன் என்னோடு முரண்பட்டு ஒத்துழையாமை காரணமாக அந்த பாடல் இசையமைக்கப்படமாலே தவிர்க்கப்பட்டது.
அந்தப்பாடல் ஒருவருடத்துக்கு பின்னர் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொண்டது. இருவருக்கும் இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.அந்தப்பாடல்தான் ''எங்கோ பிறந்தவளே...''எங்கோ பிறந்தவளே... -கவிஞர் அஸ்மின்

போட்டியின் நிமித்தம் நாம் அனைவரும் நீர்கொழும்புக்கு செல்லும் வழியில் ஓடும் பஸ்ஸில்வைத்து பாடகி சுவர்ணியாவின் தந்தை அசோகனால் போடப்பட்ட மெட்டை அவசர அவசரமாக சிறிய வோக்மேனில் கேட்டு என்னால்  எழுதப்பட்ட பாடல்தான் ''வாவா அன்பே நீவா'' -Vaa Vaa Anbe Nee Vaa என்ற பாடல்.அதன் இசை எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் அந்த பாடலை விரும்பியோ விரும்பாமலோ எழுதவேண்டிய சூழலில் நான் இருந்தேன்.

எமது குழவின் இசையமைப்பாளர் மோகனால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பது மெட்டுக்களில் எதுவும் தெரிவாகமல் போகவே அவர் அந்த போட்டியில் இருந்து தானாகவே நின்றுவிட்டார் நாங்கள் மீகாமன் இல்லாத கப்பல்போல் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தோம். எமது குழு பாடலை உடனே சமர்ப்பிக்காவிட்டால் உடனே போட்டியில் இருந்து நிறுத்தப்படுவோம் என்ற அந்த இக்கெட்டான சூழலில்தான் திரு.அசோகனால் போடப்பட்ட மெட்டுக்கு பாடல் எழுதியிருந்தேன்.

இறுதிப்போட்டியில் இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்த தாய் பாடல் (srilankan tamil songs issai ilavarasargall songs) பெறும் வரவேற்பினை பெற்று முதலிடம்பெற்றது.அந்த பாடலுக்கு கதை சொல்லியிருந்தார் இயக்குனர் அமீர்.பாடல் வரிகள் ஜோசப் எழுதியிருந்தார்.பாடலை மனோஜ் பாடியிருந்தார்.பாடல் காட்சியில் காட்சியில் சக்தி தொலைக்காட்சியின் முகாமையாளரான அறிவிப்பாளர் கஜமுகன் நடித்திருந்தார்.

அந்தப்போட்டியின் இறுதியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை சுதர்ஷன் பெற்றுக்கொண்டார் சிறந்த பாடகருக்கான விருதினை ஷிப்னாஸ் பெற்றுக்கொண்டார்.
சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை கவிஞர் புசல்லாவ கணபதி அல்லது ஜோசப் பெற்றிருக்க வேண்டும் ஆனால் ஏனோ தெரியவில்லை அந்த விருது யாருமே எதிர்பார்க்காத ஒருவருக்கு வழங்கப்பட்டது. அதில் கிடைத்த 50,000 பணத்தோடு அந்தப் பாடலாசிரியை திருமண வாழ்வில் நுழைந்து விட்டதாக பின்னாளில் அறிந்தேன்.

இந்த நிகழ்ச்சி பற்றி பதிவு செய்ய வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன.ஒருவருட இசைப்பயணத்தில் சிலர் இந்த நிகழ்ச்சி மூலம் காதலாகி கசிந்து கல்யாணம்வரை சென்றனர்.

இன்று இலங்கையில் பிரபல இசையமைப்பாளராக மிளிரும் கந்தப்பு ஜெயந்தன், ஷமீல், சுதர்சன், மூன்று பேரையும்தான்  இசைத்துறையில் காணமுடிகிறது.அப்போட்டியில் தெரிவான இசையமைப்பாளர் ''சங்கீத் சுதா'' ஓரிரு குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அவர் பிரபல எழுத்தாளர் மு.சிவலிங்கத்தின் மகன்.

அதுபோல் இப்போட்டியில் இசையமைப்பாளராக அறிமுகமான சிவனேசராசா நளிந்தவின் இசையில் ஒரு பாடல் எழுதியிருந்தேன். அரச இசை விருது விழாவில் ''நான்பாடினேன் தேவதை நீ கேட்கவே''இலங்கை தமிழ் பாடல் - 2011  என்ற அந்தப்பாடல் மூன்றாமிடம்  பெற்றிருந்தது. அவர் நன்றாகவே கிட்டார் வாசிப்பார்.இப்போது அவரையும் காணவில்லை.ஏனையவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை.

16 பாடலாசிரியர்களில் அடியேனையும்  கவிஞர் புசல்லாவ கணபதியை தவிர ஏனையவர்கள்  இந்த துறையில் இருக்கின்றார்களா இல்லையா என்பதுகூட தெரியவில்லை.பாடலாசிரியை தர்சானா ஆறுமுகம்  தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இப்போது இருக்கின்றார்.
பாடகர்களில் சுதர்சன், மனோஜ்,  மனோ, ஹிஜாஸ், சிப்னாஸ் பாடகிகளில் இந்துவை தவிர சிலர் இந்த துறையைவிட்டு ஒதுங்கிக்கொள்ள பலர் முயற்சி இல்லாமையினால் அடையாளம் பெறாமலே போய்விட்டனர்.

என்னோடு இறுதிச்சுற்றுவரை முன்னேறி இறுதி சுற்றில் வாய்ப்னை இழந்த ''ஹரன் ஜிதேந்திரா'' இன்று வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிகின்றார்.
அதுபோல் இறுதிச்சுற்றில் வாய்ப்பினை தவறவிட்ட சதீஸ்காந்த் இன்று இலங்கையின் பெயர் சொல்லக்கூடியாக பாடலாசிரியர்களில் ஒருவராக அடையாளம் பெற்றுள்ளார்.அரச இசை விருது விழாவில்  சிறந்த பாடலாசிரியருக்கான ஜனாபதிவிருதினை அவர் பெற்றுள்ளார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை எமது தொலைக்காட்சிகள் உருவாக்கினால் இலைமைறை காயாக இருக்கின்ற இன்னும் பலரது திறமைசாலிகள் வெளியுலகுக்கு தெரியவரும். 2008ம் ஆண்டு தட்டியும் திறக்காத  தென்னிந்தி சினிமா உலகை சேர்ந்த பிரபல கலைஞரின் வீட்டு வாயில் கதவு 2012 இல் தானாகவே வழிவிட்டு என்னை வரவேற்றது அது பற்றி பிறகு பார்ப்போம்
நினைவுகள்  தொடரும்.....

கவிஞர் அஸ்மின்

No comments: