Monday, February 24, 2014

லேனா ஓர் ஆச்சரியம்

கொஞ்ச நாளைக்கு முன்பு திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் அறுபதாம் கல்யாண விழாவுக்கான அழைப்பு வந்தது எனக்கு. இன்றும் கமகமவென மணத்துக்கொண்டிருக்கும் பத்திரிக்கை. ரொம்பக் குறைவாக ஆயிரம் பேரை மட்டும் அழைத்திருப்பதாகவும் (!) நான் அந்த ஆயிரத்தில் ஒருவன் என்றும் அறிந்து ஆனந்தம்கொண்டேன்! லேனாவோடு சில முறை பேசியிருக்கிறேன். ரொம்ப எளிமையாகவும் அன்பாகவும் பழகுவார். ஒருமுறை எங்கள் கல்லூரியில் பேசியிருக்கிறார். காரைக்குடியில் சில கூட்டங்களில் நானும் அவரும் பேசியிருக்கிறோம். தமிழ் நாட்டில் கையில் ஸ்டாப் வாட்ச் வைத்துக்கொண்டு பேசும் ஒரே நபர் அவர்தான்! நான் அவருக்கு நேர் மாறான ஆள்! ஆனாலும் ’ஸ்டாப்’ என்று அடுத்தவர் சொல்லும் முன் அல்லது நினைக்கும் முன் நிறுத்திவிடுவேன்!


கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த விஷாவுக்கு நானும் நண்பர் ராஜேஷும் சென்றிருந்தோம். விழா மைதானத்துக்குள் செல்ல ஒரு விமானத்தினுள் ஏறுவதற்கு முன் மேலே மூடப்பட்ட ஒரு பாதை வழியாகச் செல்வோமில்லையா, அந்த மாதிரி ஒரு அமைப்பைச் செய்திருந்தார்கள். அதில் வழியெங்கும் லேனாவின் பெரிய பெரிய நிழல்படங்கள். பார்க்க ரொம்ப அழகாக இருந்தது அந்த அமைப்பு.

உள்ளே போனால் மக்கள் வெள்ளம்! குறைந்தது ஐயாயிரம் பேராவது இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேடையில் மனைவியோடு நின்ற லேனாவுக்கு வாழ்த்துச் சொல்ல, பரிசுகள் கொடுக்க என்று குறைந்தது 100 பேராவது வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள்!


கூட்டத்தைப் பார்த்து அசந்துபோய் நானும் நாராயணனும் நண்பர் சோம வள்ளியப்பனோடு நின்றுகொண்டிருந்தோம். ஸ்டாலின் வருவதாக அறிவித்தார்கள். வந்தார். அவரை அப்போதுதான் அவ்வளவு நெருக்கமாக நின்று பார்த்தேன். அவர் பரிசுகொடுத்துவிட்டுச் சென்றார். நிறைய விஐபிகள் வந்திருந்தனர். மாலனைப் பார்த்தேன். பேசினேன். இயக்குனர் தயாரிப்பாளர் எஸ்.பி.முத்துராமன்தான் மேடையில் நின்று உத்தரவுகள் கொடுத்துக்கொண்டு, ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.

நான் என்னுடைய நூல் ஒன்றை லேனாவுக்குப் பரிசாக எடுத்துச் சென்றேன். ஆனால் வரிசையில் நின்று காத்திருந்தெல்லாம் எனக்கு பழக்கமில்லை. எப்போதுமே நான் வரிசையில் நிற்க விரும்புவதில்லை. யாரையும் முந்திச் செல்லவும் நாட்டமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது.


லேனாவின் மகன் அரசு என்னைப் பார்த்தார். ‘சார்’ என்று கூறிக்கொண்டே என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். அதுமட்டுமா, நான் சற்றும் எதிர்பார்க்காத விதமாக என் காலில் விழுந்தார். எனக்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது.

அவர் என் ’இந்த விநாடி’ நூலின் பரமரசிகர். அவர் அமெரிக்கா சென்றுகொண்டிருந்தபோது விமானத்தினுள் என்னுடைய நூலை –வேறுவழியில்லாமல் பொழுது போவதற்காகப் – படிக்க ஆரம்பித்தவர் அதை ஒரே மூச்சில் முடித்துவிட்டு  உடனே அது பற்றி தன் அன்னைக்கு ஒரு கடிதம் எழுதினார். நூலைப்பாராடோ பாராட்டென்று பாராட்டி. நூலின் அடுத்த பதிப்பில் அந்த கடிதத்தையும் சேர்த்தே பிரசுரித்துள்ளார் அழகப்பர் பதிப்பக உரிமையாளர் திரு நாராயணன்.

அந்த கடிதம்

தமிழர்களுக்குக்  கிடைத்த பொக்கிஷம்

சென்னையிலிருந்து சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு விமான பயணம். பயண  நேரம் 22 மணி நேரம். என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் கைப்பையில் வள்ளம் அழக்கப்பர் பதிப்பக உரிமையாளர் அண்ணன் நாராயணன் கொடுத்த இந்த விநாடி புத்தகம் தென்பட்டது. சும்மா மேலோட்டமாக ஒரு புரட்டு புரட்டுவோம் என்று நினைத்து புரட்ட ஆரம்பித்தேன்.

சில மணி நேரம் கழித்து Hongkongல்  transit-க்காக விமானம் நிற்கிறது. பயணிகள் விமானத்தை விட்டு இறங்கத் தொடங்கினார்கள்.அனைவரும் இறங்கியும்விட்டார்கள். நான் மட்டும் இறங்க முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தேன். இறங்கும்போது கையில் இருக்கும் இந்த விநாடு புத்தகத்தின் வாசிப்பு தடை பட்டுவிடுமே என்பதே தவிப்பிற்குக் காரணம்.

விமான சான்பிரான்சிஸ்கோ வந்தடைந்தது. வழக்கமாக சென்னையிலிருக்கும் அம்மாவுக்கு phone போட்டு, ’நல்லபடியா வந்து சேந்துட்டேன்’ என்று சொல்லுவேன். இம்முறை அதைச் சொல்லியபிறகு, ’முதல் வேலையா நம்ம எல்லா நெருங்குன சொந்தக்காரங்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த விநாடி புக்கை வாங்கிக் கொடுத்துரு. பணத்தை அனுப்பி வைக்கிறேன் என்றேன். இப்புத்தகம் தமிழர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம். நமது வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ள, பயனுள்ளதாக்கிக்கொள்ள, அமைதியை நிலைநாட்டி, பேரின்பம் பெற்றிட அத்தனை பயனுள்ள தகவல்கள் உள்ளன. எதுவும் நாம் இதுவரை அறிந்திராத தகவல்கள்.

இந்த புத்தகத்தின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு ’மூச்.’ என் வாழ்க்கையின் கடைசி மூச்சு இருக்கும்வரை, இந்த புத்தகமும், இதன் கருத்துக்களும் என்னுடன் இருக்கும். உலகத்தரம் வாய்ந்த அண்ணன் ரூமியின் எழுத்துக்களுக்கு என்றும் தலை வணங்குகிறேன். இப்புத்தகத்தை வெகு சிறப்பாக வெளியிட்ட அண்ணன் நாராயணனுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

படித்த நெகிழ்ச்சியுடன்

அரசு ராமநாதன்

San Francisco

Son of Lena Tamilvanan

அரசுதான் என்னை மேடைக்குக் கொண்டுபோனார். காத்திருக்கவிடாமல். என்னைப் பார்த்த லேனா புன்னகைத்துக்கொண்டே, “என் மகன் உங்களது ரசிகர்” என்றார். “தெரியும் சார். உங்க பத்திரிக்கையைப் பார்த்துவிட்டு, “அறுபதாம் கல்யாணம் யாருக்கு? இந்த ஃபோட்டொவில் உள்ளவர்களின் பெற்றோருக்கா?” என்று கேட்டார்கள் என்று சொன்னேன்! சிரித்தார். லேனாவின் புகழ் அவரது தந்தையார் தமிழ்வாணன் கொடுத்த கொடையின் தொடர்ச்சி. அதைத் தக்க வைத்துக்கொண்டது லேனாவின் திறமையும் உழைப்பும். லேனா உண்மையில் ஒரு ஆச்சரியம்தான். இவ்வளவு ஸ்லிம்-மாக, இவ்வளவு இளமையாக…எப்படி! முப்பதுக்கு மேல் அவரை சொல்லமுடியாது! நிச்சயம் அவர் மனதிலும் இளமை இருக்க வேண்டும்.

நான் பரிசு கொடுத்துக்கொண்டிருந்தபோது மேடையேறினார் நடிகர் சிவகுமார். என்னை அவருக்குத் தெரியாது. ஆனால் என்னோடு அலைபேசியில் பேசியுள்ளார். நாராயணன் அறிமுகப்படுத்தினார். கைகுலுக்கிவிட்டுச் சென்றார். இந்த விநாடி நூலுக்கு அவர் ஒரு சிறு பின்னுரை கொடுத்திருந்தார்.

செட்டி நாட்டுச் சமையல், உணவு சாப்பிட்டுப் போகலாம் என்று நாராயணன் அழைத்தார். சோமவள்ளியப்பனும் காத்திருந்தார். எனக்காக. முதலில் தயங்கிய நான் பின்பு சென்று சாப்பிட்டேன். ஆஹா, அருமையான இட்லி சட்னி. அதோடு  அல்வா மாதிரி ஒன்று வைத்தார்கள். என்னவென்று கேட்டேன். கூழ் என்றார்கள். எஸ் ஆர் எம் பல்கலையின் மாணவர்கள்தான் உணவுப் பகிர்வுப் பொறுப்பாளர்கள். சற்று கட்டியாக இருந்த கூழ்! ஆனால் அதன் சுவை ரொம்ப அலாதி. நான் மூன்று முறை வாங்கிச் சாப்பிட்டேன்!

லேனா வாழ்க! அரசு வாழ்க! கூழ் வாழ்க!

Nagore Rumi
நன்றி Source:http://nagoorumi.wordpress.com/
-----------------------------------------------------------------------------------------------------------
லேனாதமிழ்வாணன் மயிலாடுதுறையில் உறவு கொண்டவர் .அவர் தந்தை தமிழ்வாணன் எங்களுக்கு நெருக்கமாக இருந்தவர் . நான் கல்லூரியில் சேர அவருடன் அவரது காரில்தான் போனோம் .
அவர் எங்கள் வீட்டிற்க்கு வந்தபோது எங்கள் தோட்டத்தில் எடுத்த படம் . நான் அவர் பக்கம் மற்றும் எங்கள் சகோதரர்கள்
அப்துல் ஹக்கீம் ,முகம்மது அலி ஜின்னா , தமிழ்வாணன், முகம்மது சயீத்,அப்துல் லத்தீப்,பெரிய அண்ணன் சபீர் அவர்கள் மகன் முபாரக் 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...

rajamelaiyur said...

உங்கள் தளத்தை அறிமுக படுத்தியுள்ளேன் :

பதிவர்கள் அறிமுகம்

mohamedali jinnah said...

@ RAJATRICKS - RAJA மிக்க நன்றி திரு ராஜா அவர்களே!தங்கள் அன்புக்கு .
எனது கட்டுரையை இதிலும் அவசியம்
தயவு செய்து anbudanseasons அன்புடன் சீசன்ஸ் பாருங்கள் .அன்போடு அழைக்கின்றேன் http://anbudanseasons.blogspot.in/ எனது வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி திரு ராஜா அவர்களே!