Thursday, February 13, 2014

காதல் தோழி !

காதல் தோழி !

தோட்டத்து
ரோஜாச்செடி நான் !
அவள் என் தோழி !

தாயின் வயிற்றில்
அவள் கருவானபோது
அவள் தோட்டத்து மண்ணில்
நான் பயிரானேன் !

சிறுமியாய் அவள்
துள்ளித் திரிந்தபோது
நான்
பூப் பூத்தேன் !
சின்னத் தோழி கூந்தலுக்கு
என் செல்லப் பூக்களால்
மணம் கொடுத்தேன் !

மாலைப்பொழுதொன்றில்
காதல் கொடியவள்
என் செடியின்
பூவிதழ் ஒன்றை
கிள்ளி எடுத்தபோது
நானும் அவளைக் கிள்ளிப் பார்த்தேன் !
என் முள் மேனி பட்டு
அவள் பட்டு விரலில்
குங்குமப் பொட்டாய்
ரத்தத்துளியொன்று
துள்ளி வந்து
என் இதழில்
தேனாய் சொட்டியது !

அவள் உதிரம் உண்ட
நாள் முதலாய்
அவள் வண்ணம் போலவே
ஜோஜாச் செடி நான்
பூப்பூக்க ஆரம்பித்தேன் !

பருவப் பெண்ணாய்
பூப்படைந்த
அவள் பூவிதழ்களுக்கு
முதல் முத்தம் தந்தது
என் இதழ்கள்தான் !

பெண் பார்க்கும் நாள்
அவளுக்கு வந்தபோது
என் தேகம் பூத்த
பிள்ளைப் பூக்களை
தோழிகளாய்
அனுப்பி வைத்தேன் !

பூவையவளை
பூவாகப் பார்க்கத்
தெரியாதவர்கள்
பணத்தால் அவளை
எடை போட்டு
நிறுத்தார்கள் !
எடை இல்லை என்பதால்
வெறுத்தார்கள் !

இரவுநேரக் கண்ணீரில்
கரைந்தவள்
வேதனைத் தாழாமல்
என் பூக்களைத்தான்
கசக்கி எறிந்தாள் !
பூ மிதித்து
பூவுக்கு வலிக்குமா ?

மொட்டாகவே இருந்த
கன்னிப் பூவை
மலர வைக்க
அத்தை மகன்
ஒருநாள்
அரேபியாவிலிருந்து வந்தான் !

அவளைப் பார்த்தவன்
அவளையே பார்த்தான் !
காதல் கொண்டான்
உன்னையே கட்டுவேன் என்று
கட்டியம் கொண்டான்
என் செடியில்
ஒரு பூப்பறித்து
காதல் பரிசு என்றான் !
தோழியவள்
நாணி நின்றாள் !

அன்று -
மணப்பெண் கோலத்தில்
அவள்
தேவதையாய் ஜொலித்தாள் !
மணப்பெண்ணின்
தோழியாய்
ஒற்றை மலராய்
நானே
அவள் கூந்தலோடு
ஒட்டிக் கொண்டேன் !

வாழ்க்கைத் தோட்டத்தில்
ஒரே ஒருமுறை மட்டுமே
மலர்கின்ற
முதலிரவில்
குளிராய் வந்தத் தலைவன்
காதல் சூட்டில் நெருப்பானான் !

சூடான அவன்
தீண்டலில்
அவளோடு நானும்
கசங்கிப் போனேன் !

என் வாழ்க்கையின்
கடைசி சுவாசத்தை விடும்
வேளையில்
நான் இருந்தாலும்
பிறந்த பலனை
பெற்றுவிட்ட
மகிழ்ச்சி எனக்கு !

ஆம் !
பூக்க ஆரம்பித்து விட்டாள்
என் அன்புத்தோழி !

Abu Haashima Vaver

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! ரசித்தேன் ஐயா...

Abu Haashima Vaver அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

அன்பு தினம் - என்றும் வேண்டும்...
தினம் என்றும் - அன்பாக வேண்டும்...