பண்டு தொட்டு இன்று வரை
பாரிலுள்ளோர் கடைபிடிக்கும்
பகட்டில்லாப் பொக்கிசமாம்
தொன்று தொட்டுச் செய்து வந்த
தொழில் தொய்ந்து போனாலும்
நிகழவிருந்த காரியமும்
நிற்கதியாய் ஆனாலும்
பரம்பரையாய் பேணிவரும்
பாரம்பரியம் நிலைத்திடுமே
ராஜவளி வம்சத்தையும்
ரகம் பிரித்துக் காட்டுமிது
ராகம் பாடும் கவிஞரையும்
ரசிக்கும்படி வைக்குமிது
உறவுக்குள் ஒளிந்திருக்கும்
உயிருக்கும் மேலாக
உணர்விலும் கலந்திருக்கும்
உள்ளத்தின் உறவாக
பாரமேற்றும் பண்ணை மாடும்
பாரம்பரியம் பார்த்துப் பழகும்
பாசம் காட்டும் மனத்தினையும்
பாரம்பரியம் பறைசாற்றும்
பரவிவரும் நோயும் கூட
பாரம்பரியம் பார்த்துவரும்
பகையோரைப் பகைமறந்து
பாசத்தில் ஒன்று சேர்க்கும்
குணத்தினில் சிறப்பது
கொடுப்பினையன்றோ
மனத்தினில் வளர்வது
பாரம்பரியமன்றே
நாட்டுக்கொரு பாரம்பரியம்
நம்முன்னோர் காட்டியதே
நாளெல்லாம் பாதுகாக்க
நம் மீது கடமையன்றோ
அதிரை மெய்சா
இந்தக் கவிதை கடந்த [ 30-01-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது
நன்றி http://nijampage.blogspot.ae/
No comments:
Post a Comment