''இதெல்லாம் ஒரு தொழில்னு...''
ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி!
''வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!''
- மன உறுதி வார்த்தைகளில் தெறிக்கிறது... திருச்சி பெண், ஆஷா சுல்தானாவுக்கு.
சானிட்டரி நாப்கின்ஸ், சிசேரியன் பெட் போன்றவை தயாரிப்பதில் முன்னிலை வகுக்கும் ஆஷா, இன்று ஒரு லாபகரமான தொழில் முனைவோர்.
''நான் பிறந்து, வளர்ந்தது மணப்பாறை. அப்பா ஒரு விவசாயி. சொந்தமா ரைஸ் மில்லும் வெச்சுருந்தார். பி.ஏ முடிச்சதும் திருமணமாச்சு. கணவருக்கு வெளிநாட்டில் வேலை. கொஞ்ச நாள்லயே சொந்தமா தொழில் தொடங்குறேன்னு வெளிநாட்டில் இருந்து திரும்பினதோட, திருச்சியில தொழில தொடங்கினவர், சக்திக்கு அதிகமாவே முதலீடு போட்டார். தொழில் நஷ்டத்தில் முடிஞ்சுது. என் அப்பாவும் இறந்துட்டதால பொருளாதாரச் சிக்கல் எங்களை வாட்டி வதைச்சுது. கொஞ்ச நாள் உறவினர்கள் அடைக்கலம் தந்தாங்க. ஆனா, என் மன வேதனையை வெளியில சொல்ல முடியாம தவிச்சுட்டிருந்தேன். ஒரே மகனோட எதிர்காலத்துக்காகவும், அவன் சுயமரியாதையோட வாழணும்ங்கிற வைராக்கியத்தாலயும்... நான் வேலைக்குப் போற முடிவை எடுத்தேன். அப்போ, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கு தொழில் பயிற்சி சொல்லித் தர்றதா பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்'' என்றவருக்கு, அங்குதான் கஷ்டங்கள் தீர வழி கிடைத்திருக்கிறது.
''பல்கலைக்கழகத்தில் பயிற்சி தந்த மணிமேகலை மேடம், கடமைக்காக இல்லாம... உள்ளார்ந்த அக்கறையோட பெண்களை அங்கே பட்டை தீட்டிட்டு இருந்தாங்க. பயிற்சிகளைக் கத்துக்கிட்டாலும், அவங்களோட வார்த்தைகள்தான் எங்களுக்கு தொழில் ஆரம்பிக்கறதுக்கான முழு தைரியத்தைத் தந்துச்சு. மேடையில் பேச வெச்சு, கைதட்டி, 'தொழிலாளியா இல்ல, நீ முதலாளியா இருக்கணும்’னு சொல்லி பல வழிகள் காட்டினாங்க. அதில் நான் தேர்ந்தெடுத்ததுதான்... சானிட்டரி நாப்கின்ஸ் தயாரிப்பு.
வீட்டுலயே செய்து விற்கலாம்னு ஆர்வமா தொழிலை ஆரம்பிச்சேன். எடுத்தவொடனயே லாபம் கிடைச்சுடல. சுற்றி இருந்தவங்க எல்லாம், 'நல்ல தொழில் செய்றா பாரு’னு கேலி பேச, அது எனக்கு இன்னும் வேகத்தைக் கொடுத்துச்சு. வாடிக்கையாளர்கள்கிட்ட குறைகளைக் கேட்டு சரிசெய்தேன். திருச்சியில இருக்கற பெரும்பாலான மருத்துவமனைகளுக்கும் போய், நாப்கின்ஸ் ஆர்டர் எடுக்க மருத்துவர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன். அப்போ, 'மெட்டர்னிட்டி பெட் செய்து கொடுக்க முடியுமா..?’னு ஒரு பெண் டாக்டர் கேட்ட கேள்வி, இன்னொரு வாசலையும் திறந்துவிட்டுச்சு.
அதுக்கான மூலப் பொருட்களைத் தேடினேன். வெளியுலக அனுபவம் இல்லாததால, டீலர்கள் மூலமா அவங்க சொன்ன விலைக்கே வாங்கினேன். தொழிலின் ஒவ்வொரு கட்டத்திலும் என் தைரியமும், திறமையும் கூடுறத நானே உணர்ந்தேன். அப்படித்தான் ஒரு நாள், 'படிச்சுருக்கோம்... ஏன் மத்தவங்களையே நம்பியிருக்கணும்..?’னு முடிவெடுத்து, டீலர்களைத் தவிர்த்து, மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும், எப்படி மார்க்கெட்டிங் செய்றதுனு எல்லா விஷயத்தையும் இணையதளம், புத்தகங்கள்னு படிச்சு கத்துக்கிட்டேன். இப்போ அந்தப் பொருட்களை நேரடியாவே வாங்குறேன். தொழிலோட நெளிவு சுளிவுகள் கசடற புரிஞ்சிடுச்சு!'' என்று குளுக்கோஸ் வார்த்தைகள் பேசும் ஆஷா, நாப்கின்ஸ் மற்றும் மெட்டர்னிட்டி பெட் ஆகியவற்றைத் தொடர்ந்து சிசேரியன் பெட், பிரசவகாலத்தில் ரத்தக்கழிவுகளை சேகரிக்கும் பெட், படுக்கைப்புண் வராமல் தடுக்கும் படுக்கை விரிப்பு, தலையணை உறை என்று மருத்துவம் சார்ந்த பொருட்களாக தயாரித்து, பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
''இந்த பெட் எல்லாம் மார்க்கெட்ல கிடைக்கும். ஆனா, அதெல்லாம் குறிப்பிட்ட அளவில்தான் இருக்கும். நான் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அவங்களுக்குத் தோதான அளவுகள்ல செய்து கொடுக்கிறேன். தரம் நிறைவாவும், விலை குறைவாவும் இருக்கறதால ஆர்டர்கள் கொடுக்கறாங்க. ஒரு மேட் செய்ய 15 நிமிடங்களாகும். மாதம் சுமார் 1000 பெட் மற்றும் மேட்கள் தயாரிப்பேன். இந்தத் தொழிலில் மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாபம் ஈட்ட முடியுது. இதில் என் ஆரம்பகட்ட முதலீடு வெறும் 1,000 ரூபாய்தான். உதவிக்காக என்னை மாதிரி கஷ்டப்பட்ட உறவினர்கள் சிலரையும் இந்தத் தொழிலில் இணைச்சுருக்கேன். திருச்சி மட்டுமில்லாம மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்றேன்!'' என்று ஆச்சர்யப்படுத்திய ஆஷா,
''ரெண்டு வருடங்கள் ஆச்சு தொழில் ஆரம்பிச்சு... வீட்டோட பொருளாதார நிலை நிமிர்ந்திருக்கு; பையன் இன்ஜினீயரிங் படிக்கிறான்; கணவர் சொந்தமா மொபைல் கடை வெச்சுருக்கார்; தொழிலை விரிவுபடுத்த வலைதளம் தொடங்கியிருக்கேன்; தைரியமா பல மேடைகள்ல பேசுறேன்; பெண்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன். இந்தளவுக்கு நான் எழுந்து வந்ததுக்கு, எனக்கு ரோல் மாடலா இருந்து பயிற்சி தந்த மணிமேகலை மேடத்துக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்!'' என்றார்.
நிறைவாக, ''சுய வருமானம் தேடுற பெண்கள்... நம்பிக்கையோட இந்த நாப்கின், பெட் தயாரிப்பு தொழிலை எடுத்துப் பண்ணுங்க. வாழ்வாதாரத்துக்காக உங்ககிட்ட வாய்ப்பு கேட்டு வரும் பெண்களையும் கைதூக்கி விடுங்க!'' என்று கோரிக்கையுடன் முடித்தார் ஆஷா சுல்தானா!
நன்றி: விகடன்
நன்றிhttp://www.satyamargam.com
1 comment:
என்னவொரு தன்னம்பிக்கை...!
ஆஷா சுல்தானா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
Post a Comment