Thursday, January 14, 2021

ராபியா பஸ்ரி ரலியல்லாஹு அன்ஹா வரலாறு

 

ராபியா பஸ்ரி ரலியல்லாஹு அன்ஹா

அரபு நாட்டிலே, ஈராக் மாகாணத்திலே, பஸ்ரா நகரிலே, ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ஆதி என்னும் கோத்திரத்திலே, ஓர் ஏழை முஸ்லிம் குடும்பத்திலே, இஸ்மாயில் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீல் இறைநேசம் நிறைந்தவர். ஆண்டவன் மீது அளவு கடந்த நம்பிக்கை யுள்ளவர். ஆனால் அவர் மிகவும் ஏழை. நற்குடியில் பிறந்த மங்கையை மணந்து இல்லறம் நடத்தி வந்தார். அந்த இல்லறச் சோலையிலே பூத்த நான்காம் பொன்மலர் ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) ஆவார்கள்.

குழந்தை பிறந்தது. குடும்பத்தில் அது நான்காம் குழந்தை. ஆகையால், அதற்கு ராபியா (நான்காவது) என்று பெயரிடப்பட்டது. உண்ண உணவும், அணிய ஆடையும் இல்லத்திலே இல்லாத அளவுக்கு வறுமை. பிறந்த குழந்தையின் உடலை மறைத்து, அதைக் குளிரினின்றும் காப்பாற்ற வீட்டில் கந்தைத துணியும் இல்லை. இரவில் இருளை நீக்க விளக்கும் இல்லை. குழந்தையின் தொப்புளில் தடவ எண்ணையும்இல்லை. குழந்தை ராபியா பிறந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிந்தன. குழந்தையின் தாயும், தகப்பனும் இறையடி சேர்ந்தார்கள்.

பஸ்ரா நகரில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அனாதைக் குழந்தைகளைக் காப்பாற்றுவார் ஒருவருமில்லை. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு திசையில் சென்றுவிட்டது. ராபியா என்கிற குழந்தையும் பஸ்ரா நகரை விட்டுப் புறப்பட்டது. வழியில் ஒரு மனிதன் ராபியாவைப் பிடித்தான். பிடித்து அந்த அனாதையை விற்றுவிட்டான். குழந்தை ராபியா அடிமை ராபியாவாக காலங்கழிக்கும் துயரமான நிலைமை ஏற்பட்டு விட்டது!

அன்பின் வடிவமும் அருளின் உறைவிடமான ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அல்லாஹ் ஒருவனையே நம்பி இருந்தார்கள். பணிப் பெண்ணாக அமர்ந்தாலும், தமது கடமையை உணர்ந்து கடுமையாக வேலை செய்து வந்தார்கள். எஜமானுடைய கருத்தறிந்து பணியாற்றுவார்கள். கூரிய மதியும், சீரிய ஒழுக்கமும் நிறைந்தவர்கள். உலகாளும் அல்லாஹ் ஒருவனையே நம்பி உள்ளம் உடையாமல் வாழ்க்கை நடத்தினார்கள். நல்லுள்ளமும், மெய்யறிவும் உள்ளோர் நரகவேதனைகளையும் இன்பமாக மாற்றிக் கொள்வாரல்லவா? எனவே, ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் மிகப் பொறுமையுடனும், திறமையுடனும் எஜமான் மனதை அறிந்து வேலை செய்து வந்தார்கள்.

அனாதைக் குழந்தை ராபியா இவ்வாறு சில காலம் அடிமையாகக் காலம் கழித்தார்கள். இறைவன் வழிபாடு, அவனது திருநாமங்களை உச்சரித்தல், இறையச்சம், நள்ளிரவில் எழுந்து தனியாக உட்கார்ந்து தியானித்தல் முதலான பண்புகள் சிறு வயது முதலே ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் குடிக்கொண்டிருந்தன. அடிமையாயிருப்பினும் அடிமை வாழ்வினை அமர வாழ்க்கையாக மாற்றும் இயல்புள்ளவர்கள். அல்லாஹ்வின் அன்புக்கு ஆளாவதற்காக உலக இச்சைகளைப் புறக்கணிக்கும் தன்மை வாய்ந்தவர்கள்

நடு இரவில் ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் எழுந்திருப்பார்கள். பகலெல்லாம் ஓயாமல் வேலை செய்த களைப்பு. உடலிலுள்ள உறுப்புக்களெல்லாம் நோவு. உடல் உழைப்புள்ளோர் இரவில் நிம்மதியாக நித்திரையின் இன்பம் அனுபவிக்கும் நேரம். அவ்வேளையிலே, ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் எழுந்து வீட்டின் மேல் தளத்தின் மீது சென்று, தனிமையாக உட்கார்ந்து இறைவனது தியானத்தில் ஈடுபடுவார்கள்.

என் இறைவனே! இந்த நேரமானது உன்னை அடைந்து மன்றாடிக் கேட்போருக்கெல்லாம் நீ உனது அருளை சொரியும் நேரம். ஆனால், நான் தன்னந்தனியாக உன்னுடன் இருக்கிறேன்.” என்று உள்ளம் உருகி, கண்ணீர் வடித்து இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி, நாதன் நாமத்தில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு, தினந்தோறும் நடந்து வந்தது. ஆனால், வீட்டு எஜமானுக்கு இவ்விஷயம் ஒன்றுமே தெரியாது. ஓர் இரவில், எஜமான் தூக்கத்திலிருந்து நள்ளிரவில் விழித்தார்! ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் எழுந்து செல்வதை கண்டார்! பின் தொடர்ந்தார்!

இரவின் நடுநேரம். மையிருட்டு. எட்டுத் திக்கிலும் இருள். உலகமே தூங்கிக்கொண்டிருந்தது. உலகம் விழுங்கப்பட்டது போலவே இயக்கமற்றிருந்தது. அமைதியை இரவு அதிகரித்துக் கொண்டிருந்தது. காற்று சலனமற்றிருந்தது. மரங்களின் இலைகள் அசையாமல் மெளனமாக இருந்தன.

வீட்டின் மேல் தளத்திலே ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் சென்று, தனிமையான இடத்தில் உட்கார்ந்து, “அல்லாஹ்வே! நீ கொடுத்த இந்த வாழ்க்கையை எப்பொழுதும் உனது கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடத்த வேண்டுமென்பதும், உனது வணக்கத்தில் சிறிய குறையும் ஏற்படாமலிருக்க வேண்டுமென்பதும் எனது உள்ளத்திலிருந்து பிறக்கும். பேராவல் படைக்கப்பட்ட ஒரு மனிதனுடைய அடிமையாக இருக்கிறேன். ஆகையால்தான், உனது திருச்சமூகத்திற்கு வரத் தாமதமாகி விடுகிறது. என் இறைவா! எனக்கு வேறொன்றும் வேண்டாம். உன்னுடைய இன்பம் (ரிலா) ஒன்றையே நாடுகிறேன். நீ என்னை எந்த நிலைமையில் வைப்பாயோ அதற்கு முழுமனதுடன் தலைசாய்ந்து நடப்பேன்என்று பணிவுடன் இறைவனிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எஜமான் இந்தக்காட்சியைக் கண்டார்! “களங்கபாடில்லாத இந்தப் புனிதவதியை நான் இதுவரை அறிந்து கொள்ள முடியவில்லையேஎன்று மனம் நொந்தார்.

அச்சமயம், இன்னொரு காட்சியையும் அந்த எஜமான் கண்டார்! இருண்ட இரவிலே, ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் தலைக்கு மேல் திடீரென்று ஓர் அற்புதத் தீபம் தோன்றி ஒளி வீசிக் கொண்டிருந்தது! “ஆத்மீக உயர்வுபெற்ற இந்தப் பரிசுத்தமான பெண்ணை நான் இன்றுவரை ஒரு சாதாரண அடிமையாக மதித்தேன்! இந்தப் புண்ணியவதிக்கு மரியாதை செய்யத்தவறி விட்டேன்! பணிப்பெண் என்றல்லவோ இது வரை நான் நினைத்தேன்! மாந்தர்க்கு இறைநெறி கற்பிக்கும் மாதை நான் மதிக்கத் தவறிவிட்டேன்என்றெல்லாம் மனம் நொந்தார்

உடனே, அந்த அம்மையாருக்குத் தெரியாமல், மெல்ல மெல்ல நடந்து வந்து தமது படுக்கையில் படுத்துக்கொண்டார். மறுநாள் காலையில் எழுந்தார்: ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களை அழைத்தார்.

அம்மையே! நான் நேற்றுவரை உங்களை அறியவில்லை. இரவில் இறைவணக்கம் செய்து, அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்தனை புரிவதை என் கண்ணாரக் கண்டேன். என் மனம் மாறிவிட்டது. உங்களை போன்ற உயர் பெண்ணை பணிமகளாக வைத்துக் கொள்ளல் ஆகாத காரியாமாகும். நான் உங்களை விடுதலை செய்துவிட்டேன்! இனி, உங்கள் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் நீங்கள் செல்லலாம். ஆனால், ஒரு வேண்டுகோள். நீங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கினால், அது எங்களுக்குப் பெரும் பாக்கியமாகும். மேலும், நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.” என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அதற்கு அப்பால் அந்த வீட்டில் தங்க விரும்பவில்லை. வீட்டாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள். வழிச் செலவுக்கும் கொடுத்து, அந்த வீட்டார் மரியாதையுடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.

விடுதலை கிடைத்த பிறகு, ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அங்கிருந்த ஹஸ்ரத் ஹஸன் பஸரீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுடைய தோழமையிலும் பணியிலும் காலம் கழித்தார்கள்.

அந்த அம்மையார் ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத் நபில் தொழுகை தொழுவார்கள். பகலில் நோன்பு வைப்பார்கள். இரவெல்லாம் தொழுவார்கள். சில சமயம், ஒரு வார காலம் வரை தொடர்ச்சியாகத் தண்ணீரால் நோன்பு திறந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்து விடுவார்கள். சுருங்கக் கூறுமிடத்து, அல்லாஹ்வின் பாதையிலே, இறைநேச நெறியிலே, இறைவனுடைய அன்பையும், அருளையும் பெரும் முயற்சியிலே பற்பல கஷ்டங்களை மேற்கொண்டார்கள்

இந்த நிலையில் ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அடிக்கடி கண்ணீர் வடித்துக் கொண்டும், பெருமூச்சு விட்டுக் கொண்டும், இறைவனிடம் அடிக்கடி மன்றாடி மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டுமிருப்பார்கள்

இதைக் கண்ட ஒரு மனிதன், “அம்மா! உங்கள் உடல் நன்றாயிருக்கிறதே! வியாதி இருப்பதாகத் தெரியவில்லையே! அவ்வாறிருக்க, நீங்கள் ஏன் கண்ணீர் வடிக்கிறீர்கள்?” ஏன் பெருமூச்சு விடுகிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “என் அகநிலை (பாதின்) சம்பத்தமாக உனக்கென்ன தெரியும்? மருத்துவர்களால் சுகமாக்க முடியாத அகநோய் என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது. இதன் மருந்து என்னுடைய மெய்யான நேசனான அல்லாஹ்விடமே இருக்கிறது. அதனால் தான், நான் அவனிடம் அந்த வியாதியைப் போக்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்என்று மறுமொழி கூறினார்கள்.

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் தமது காலத்தை அல்லாஹ் ஒருவனுக்காக அர்ப்பணித்து விட்டார்கள். குடும்ப வாழ்க்கையில் இச்சையில்லாதிருந்தார்கள். இதை அறியாத ஒருவர் அந்த அம்மையாரிடம் வந்து தம்மை மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “உலகினை விரும்புவோன் ஆணும், பெண்ணுமில்லாத அலி ஆவான். மறு உலகில் சுவர்க்கத்தை விரும்புவோன் பெண்ணாவான். இறைவனை விரும்புவோன் ஆணாவான். என்னை விரும்பி வந்த நீர் உலகினை விரும்புவோரானால், நீர் அலி, நான் பெண். அலியுடன் திருமணம் செய்து கொள்ளல் முடியாத காரியமாகும். இனி, நீர் மறு உலகை விரும்புவோராயின் நீரும் பெண் நானும் பெண். பெண்ணுடன் பெண்ணுக்கு எவ்வாறு திருமணமாக முடியும்? நீர் இறைவனையே விரும்புவீராயின் நீரும் ஆண். தெய்வீகக் காதலிலே இருந்து, அல்லாஹ்வை மட்டுமே விரும்புகின்றேன். அதனால் நானும் ஆண். ஆடவனை ஆடவன் எப்படி கல்யாணம் செய்ய முடியும்?” என்றார்கள். வந்த மனிதர் இதற்கு மறுமொழியொன்றும் கூற முடியாமல், நாணமுற்று வந்த வழியே திரும்பி விட்டார்.

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் புனித வாழ்க்கையாலும், நல்லுபதேசங்களாலும் பல மக்கள் தங்கள் வாழ்க்கையை சீரிய முறையில் திருத்தியமைத்து பாவச் செயல்களை விட்டு, இறை நெறியிலே ஈடுபட்டார்கள். அவர்களில் ஏழைகள் பலர் எனினும், சில சீமான்களும் இருந்தார்கள். எனவே, அந்தச் சீமான்கள் ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு அவ்வப்பொழுது தங்களாலான உதவி செய்து அந்த அம்மையாரின் உலக வாழ்க்கையில் தேவையொன்றுமின்றி நடத்த முன்வந்தார்கள். இவ்வாறு தமக்கு உள்ளன்புடன் உதவிசெய்யும் நோக்கத்துடன் பல தனவான்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் அந்த அம்மையாருக்குத் தெரியும். எனினும், அதைப் பொருட்படுத்தாமல் பிறருடைய உதவியை எதிர்பாராமல் உலக இச்சைகளை உதறித் தள்ளிவிட்டு அம்மையார் வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

ஹஸ்ரத் ஹஸன் பஸரீ (ரலியல்லாஹு அன்ஹு) என்னும் பெரியாரே ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் ஞானாசிரியர். அப்பெரியார் ஒருநாள் அந்த அம்மையாரை நோக்கி, “நீர் திருமணம் செய்து கொள்ளல் நன்றுஎன்று கூறினார்கள். அதற்கு அம்மையார், “தனக்கென ஒரு தனி ஜீவனும், தனி வாழ்க்கையும் வைத்திருப்போருக்கு திருமணம் வேண்டும். ஆனால், நானோ என்மீது ஆதிக்கமில்லாதவள். என் பிரியப்படி நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் அல்லாஹ்வின் அடிமை. என்னைப் பற்றி ஏதாவது கேட்க வேண்டுமானால் எனது எஜமானான அல்லாஹ்விடமே கேட்பீர்களாக!” என்று கூறிவிட்டார்கள்.

ஓர் இரவில் ஹஸ்ரத் ஹஸன் பஸரீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சில நண்பர்களுடன், அம்மையாரின் இருப்பிடத்திற்கு சென்றார். ஆனால், அங்கு இருட்டாக இருந்தது. அச்சமயம் அம்மையார் தமது விரலில் ஊதினார். உடனே, விரலில் பிரகாசம் உண்டாகிவிட்டது. மறுநாள் காலை வரையில் விளக்கிற்குப் பதிலாக அந்த விரல் சுடர் கொடுத்துக் கொண்டிருந்தது.

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் இருப்பிடத்திலே ஓர் உடைந்த கோப்பை இருந்தது. அதை உபயோகித்து அம்மையார் வுழு செய்வார்கள். தண்ணீரும் குடிப்பார்கள். ஒரு பழைய பாயும் இருந்தது. ஒரு செங்கல்லும் இருந்தது. இந்தச் செங்கல்லை அம்மையார் தமது தலையணியாக உபயோகிப்பார்கள். இந்த நிலைமையைக் கண்டு நண்பர்கள் மனம் நொந்தார்கள்.

ஒருநாள் ஹஸ்ரத் மாலிக் பின் தீனார் (ரலியல்லாஹு அன்ஹு) அங்கு வந்தார்கள். அம்மையாரின் மிக எளிய வாழ்க்கையைக் கண்டார்கள்! துக்கம் மேலிட்டது! கண்ணீர் வடித்தார்கள்! அப்பொழுது அவர்கள் இருவருக்குமிடையே நடைப்பெற்ற சுவாரஷ்யமான உரையாடல் இதோ:

ஹஸ்ரத் மாலிக் பின் தீனார் (ரலியல்லாஹு அன்ஹு): “ராபியாவே! எனக்கு அநேக பணக்கார நண்பர்கள் இருக்கிறார்கள் நீங்கள் விரும்பினால் அவர்களிடமிருந்து உங்களுக்காக நான் ஏதாவது வாங்கிக் கொடுக்கிறேன்.”

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்:

மாலிக்! நீங்கள் பெரும் பிழை செய்து விட்டீர்கள்! எனக்கும் அந்தப் பெரும் பணக்காரருக்கும் உணவு அளிப்பவன் அல்லாஹ் என்று உங்களுக்குத் தெரியாதா?

ஹஸ்ரத் மாலிக் பின் தீனார் (ரலியல்லாஹு அன்ஹு):

ஆம், தெரியும்.”

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்:

 ஏழைகள் என்ற எண்ணத்திற்காக இறைவன் ஏழைகளை மறந்திருக்கிறானா? மேலும் பணக்காரர்களை அவர்களுடைய பெரும் பணத்திற்காக இறைவன் மறக்காமல் இருக்கிறானா?”

ஹஸ்ரத் மாலிக் பின் தீனார் (ரலியல்லாஹு அன்ஹு): “இல்லை! இல்லை!”

 ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்:

நமது நிலைமை அல்லாஹ்வுக்குத் தெரியும், ஆகையால், அதைப் பற்றி அவனுக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியமென்ன? அவனுக்கு எதில் பிரியமோ, அதிலே நமக்கும் பிரியம்.”

 ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், ஞான மார்க்கத்தில் உயர் நிலை (கமாலியத்) அடைந்த பிறகு குர்ஆனுடைய வசனங்களைத் தவிர, தமது நாவால் வேறொன்றையும் உச்சரிப்பதே இல்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கு குர்ஆன் வசனங்கள் மூலமாகவே மறுமொழி கூறுவது வழக்கம்.

இந்தப் புனித அம்மையாரின் வாழ்க்கை முடிவடையும் சமயத்திலே, தம்மைச் சூழ்ந்திருந்த மக்களை நோக்கி, “இங்கிருந்து எல்லோரும் வெளியே போய் விடுங்கள். இறைவனுடைய தூதருக்கு இடம் விட்டுவிடுங்கள்என்றார்கள்.

உடனே அங்கிருந்தோர் அனைவரும் வெளியே சென்று விட்டார்கள். கதவுகள் தாளிடப்பட்டன. அப்பொழுது,

யா அய்யுஹன் நப்ஸுல் முத்மயின்னா! அர்ஜிஇலா ரப்பிகாஇளைப்பாறுதலில் அமைதியாயிருக்கும் திருப்தி கொண்ட ஆவியே! உனது கர்த்தாவிடம் திரும்புவாயாக.”

என்று ஓர் அழைப்புக் குரல் கேட்டது! அப்பால் சிறிது நேரம் அமைதி நிலவியது. வெளியே இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தார்கள். ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அம்மையாரின் உயிர் இறைவனிடம் சென்று விட்டது!

ஹிஜ்ரி 135 (கி.பி. 752) இல் அம்மையாரின் உலக வாழ்க்கை இவ்வாறு முடிவடைந்தது. அமரச்சுடர் அணைந்தது. அன்றுவரை எலும்புக்கூட்டில் சிறைப்பட்டிருந்த உயிரானது அன்று, விடுதலைபெற்று எல்லையற்ற இன்ப பெருவெளியில் கலந்தது. பைத்துல் முகத்திஸின் கிழக்கிலுள்ள ஸைதா என்னும் குன்றில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கையானது ஆத்மீக உயர்வு பெற்றதாகும். அம்மையார் வரும்வரை ஹஸ்ரத் ஹஸன் பஸரீ (ரலியல்லாஹு அன்ஹு) தங்களது சன்மார்க்கப் பிரசங்கங்களை ஆரம்பிக்கமாட்டார்கள். ஹஸ்ரத் ஸுல்தான் இப்ராஹீம் பின் அத்ஹம் போன்ற உயர் நிலையில் இருந்த அவ்லியாக்கள் இந்த அம்மையாரைச் சந்திப்பதைத் தமக்கு ஒரு பெரும் பேறாக எண்ணினார்கள். இருளடைந்த எத்தனையோ உள்ளங்கள், அம்மையாரது தொடர்பினால், ஆத்மீக ஒளிவீசும் வாழ்க்கையினால், ஒரு புனிதப் பார்வையால், மெய்யொளியில் மிதக்க ஆரம்பித்து ஆத்ம சுகம் பெற்றன.

ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் புனித வாழ்க்கையானது நமது பெண்மணிகள் ஆன்மீக உயர்வடைவதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. “தாயின் பாதத்தில் சுவர்க்கம் இருக்கிறதுஎன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் திருவாய்மலர்ந்தருளினார்கள். ஓர் இனம் முன்னேற்றமடைய வேண்டுமானால் அதன் தாய்மார்கள்பின்வரும் சந்ததியைப் பெற்று வளர்த்துப் பக்குவப்படுத்தும் அன்னைமார்கள்நல்லவர்களாய் இருத்தல் வேண்டும்.

பட்டாடைகளும், பவுடர் பூச்சும், சீப்பும், சிங்காரமும், ஆபரணங்கள் அணியும் ஆசையும் மாதரை நல்ல தாய்மார்களாக மாற்றிவிடமுடியாது. அல்லது திருக்குர்ஆனையும், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களது புனித வாழ்க்கை நெறியையும் அறியாமலும், அவற்றைத் தினந்தோறும் தமது வாழ்க்கையில் செயலளவிலே பின்பற்றாத மேல் நாட்டு நடையுடை பாவனைகளைக் குருட்டுத்தனமாய் காப்பியடிக்கிற கல்வி முறையாலும் மாந்தர் உயர்வுபெற முடியாது.

குர்ஆனும், ஸுன்னத்தும் கலந்த, ஆத்மீகக் கல்வியே மாந்தருக்கு மிகமிக அவசியமாகும். அல்லாஹ்வின் அருள் பெறுவதற்கும், இறை நேசச் செல்விகள் ஆவதற்கும் ஏற்றதாக நமது பெண்களின் கல்வி அமைய வேண்டும். அத்தகைய கல்விபெற்ற தாய்மார்களுடைய குழந்தைகள் தங்கள் தாய்மார்களைப் போலவே இறைநேசராவார்கள்.

வருங்கால மக்களுக்குத் தாய்மார்களாக அமைந்த நமது மாதர்கள் ஹஸ்ரத் ராபியா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை வரலாற்றால், தமது ஆன்மாக்களை உயர்வு பெறும்படி செய்து, வருங்கால மக்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்வார்களா?

அல்லாஹ்விடம் கலப்பில்லாத விசுவாசங்கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டு, பக்தி வணக்கமுள்ளவர் (முத்தகீன்)களாக இருப்பவர்களே அல்லாஹ்வின் நண்பர் (அவ்லியாக்கள்) ஆவார்கள்.

இறைவா! இத்தகைய பாதையிலே உன் அடியார் அனைவரும் நடக்கும்படி அருள் புரிவாயாக! ஆமீன்.

http://www.mailofislam.com/rabiya_basri_history_tamil.html

No comments: