ஒரு மனிதன்
- எப்படி வாழ்வது
- எப்படி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது
- மற்றவர்களுடன் நெருங்கிப் பழகும் பொழுது ஏற்படும் பிசரச்சனைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது.
- அரசியலில் எவ்வாறு ஈடுபடுவது
- ஓர் ஆட்சியை எவ்வாறு நடத்திச் செல்வது
- வாழ்வில் எத்தகைய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது.
- எவ்வாறு உண்பது, உழைப்பது, திருமணம் புரிவது
இப்படிப் போன்ற எல்லா விடயங்களிலும் இஸ்லாம் முன் வைக்கும் இறையாணைகள் பொருத்தமான வழிவகைகளை நமக்குக் காட்டித் தருகின்றன.
இஸ்லாம், மனிதர்கள் தமது பெற்றோர், சகோதர சகோதரிகள், கணவன், மனைவி, அண்டைவீட்டவர், உற்றார். உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உள்ளோருடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதையும் சொல்லித் தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் நடந்து காண்பித்து விட்டுச் சென்றார்கள்.
அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதர் (ஸல்) அவர்களும், பெற்றோருடன் எவ்வாறு நடந்து கொள்வது? அவர்களுக்கு எவ்வாறு மரியாதை செய்வது என்பன பற்றி என்ன மொழிந்துள்ளனர்.
வல்லமைமிக்க அல்லாஹ் தனது பரிசுத்த குர்ஆனில் பெற்றோருக்குப் பணிந்து நடப்பது பற்றி பெருமளவில் குறிப்பிட்டுள்ளான். ''பெற்றோருடன் பேணுதலாக நடந்து கொள்ளுங்கள், அவர்களை துன்புறுத்தாதீர்கள், அவர்கள் கூறுபவற்றை மிக்க மரியாதையுடன் செவிமடுங்கள், அவர்கள் செய்த உதவிகளுக்கு நன்றி செலுத்துங்கள்'' என்பன அவற்றுள் சில.
முஹம்மத் (ஸல்) அவர்கள் பெற்றோருக்குக் கண்ணியம் அளிப்பது பற்றி மொழிந்தவை இவ்விறை பேதனைகளுக்கு முற்றிலும் இணக்கமானவை.
ஒருமுறை, ஒருவர் வந்து ''யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்.
''உரிய வேளையில் தொழுவது!'' என நபி (ஸல்) அவர்கள் பதில் மொழிந்தார்கள்.
''அதற்கு அடுத்த, அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான செயல் எது?'' என மீண்டும் அவர் வினவினார்.
''பெற்றோருடன் கண்ணியமாக நடந்து கொள்ளல்!'' என அல்லாஹ்வின் தூதர் பதில் மொழிந்தார்கள்.
மற்றொரு முறை, வேறொருவர் வந்து நபி (ஸல்) அவர்கனைச் சந்தித்து, ''யா ரசூலுல்லாஹ்! தாய் நாட்டையும், பிறந்த மண்ணையும் விட்டுவிட்டு அல்லாஹ்வுக்காகப் புனிதப் போரில் ஈடுபடுவதாக உங்கள் கரங்களில் சத்தியம் செய்கிறேன். அதற்காக வெகுமதிகளை அவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்'' எனக் கூறினார்.
இதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் மிக அமைதியாக ''உங்கள் பெற்றோர் இருக்கின்றனரா?'' எனக் கேட்டார்கள்.
அதற்கவர், ''அல்லாஹ்வின் அருளால் அவ்விருவரும் நலமாக இருக்கின்றனர்'' என பதில் அளித்தார்.
''அப்படியா? நீங்கள் அவர்களுக்குப் பணிவிடை செய்யுங்கள், அப்பணிவிடைகளாவன, 'அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத்தும் ஜிஹாதும்' செய்த நன்மையை அவனிடமிருந்து பெற்றுத் தரும்'' என்பது ரசூல் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமாக இருந்தது.
(ஹிஜ்ரத் - அல்லாஹ்வுகாக தான் வாழுமிடத்தைத்த துறந்து செல்வது) (ஜிஹாத் - அல்லாஹ்வுக்காகப் புனிதப் போரில் ஈடுபடுவது).
நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
''உங்கள் சுவனமும் நரகமும் உங்கள் பெற்றோரின் பாதத்தடியில்தான்!'' என்று.
இந்த நபிமொழியின் கருத்து இதுதான்.
தமது பெற்றோருக்கு அடிபணிந்து, அவர்களுக்குப் பணிவிடைப் புரிந்து, அவர்கள் செய்த உதவி ஒத்தாசைகளுக்கு நன்றி பகர்ந்து, அவர்களுக்கு நல்லன செய்தால் சுவனம் கிட்டும். அவ்வாறின்றி, அவர்களைத் துன்புறுத்தி, தொல்லைகள் பல கொடுத்து வாழும் ஒருவர், நரகில் கொழுந்து விட்டெரியும் நெருப்புக்கு இரையாவார் என்பதாகும்.
பிள்ளைகள், தம் பெற்றோருடன் மிக நல்ல விதமாக நடந்து கொள்ளல் வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பல கட்டங்களில் மொழிந்துள்ளார்கள்.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
''அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்களில் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை 'உஃப்' (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம். (அல்குர்ஆன்: 17-23).
அல்லாஹ் என்ன கூறுகின்றான் என்பதைக் கவனித்தீர்களா? தாயையோ தந்தையையோ அடித்துத் துன்புறுத்துவது, மிகவும் வெறுக்கத்தக்க முறையில் பேசுவது என்பன எப்படிப் போனாலும், அவர்களுடைய மனதுக்கு வருத்தத்தைத் தரும் மிகச் சிறிய சொல்லொன்றைச் கூட பேச வேண்டாம் என்பது இறைவன் இடும் கட்டளையாகும்.
''சில வேளை உங்களுக்குத் திருப்தியைத் தராக ஏதேனும் சொற்கள் உங்கள் பெற்றோரின் நாவிலிருந்து வெளிப்பட்டால் கூட நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறின்றி, அவர்களைக் கோபமுறச் செய்யாதீர்கள். எப்பொழுதும் அவர்கள் திருப்தியுடன் இருக்க வழி செய்யுங்கள்'' என்பன போன்ற கட்டளைகளும் இறைவனிடத்திலிருந்து வந்துள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:
''அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியில் தங்கி இருக்கிறது, அதுபோல அல்லாஹ்வின் கோபம் தந்தையின் வெறுப்பில் தங்கியிருக்கிறது''.
அன்பே உருவான தந்தைக்குக் கீழ்படிந்து, அவரது சொற்படி நடந்து, அவருக்குத் திருப்யை அளித்தால் அல்லாஹ்வும் திருப்பியுறுவான். தந்தைக்குக் கீழ்ப்படியாது, அவரது அன்புக் கட்டளைகளைப் புறக்கணித்து, தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டால் அருக்குக் கோபமும் வெறுப்பும் ஏற்படும், அது அல்லாஹ்வின் வெறுப்பைத் தேடித்தரலாம்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
''யாரேனும் ஒருவர் தனது பெற்றொருக்குப் பணிவிடை புரிந்தால் அவருக்கு ஈருக நன்மைகள் கிடைக்கும், பெற்றோருக்கு உதவுவதால் அவரது ஆயுள் நீடிக்கும், உணவில் அபிவிருத்தி ஏற்படும்''.
இதிலிருந்து பெற்றோருக்குப் பணிவிடைப் புரிந்து வருவது எத்தகைய மபெரும் பொறுப்பு என்பதை நாம் உணரலாம். அவர்களை மிகுந்த இரக்கத்துடன் பார்ப்பதும், உதவி ஒத்தாசை புரிந்து இன்புறச் செய்வதும் பிள்ளைகளின் கடமையாகும்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு மொழிந்தார்கள்:
''பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள், நீங்கள் ஏதோனும் பணியொன்றினை ஆரம்பிக்கும் பொழுது, அது எத்தகையதாயினும் பெற்றோரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் அவர்களுடன் இணக்கமாக இருப்பீர்களாயின், அது உங்களுக்கான சுவனவாசலைத் திறந்து கொள்வதற்கான ஓர் அம்சமாக இருக்கும்.''
மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததாவது:
''ஒருவர் மனப்பூர்வமாகப் பெற்றோருக்குப் பணிந்து நடந்தால், அவருக்காக சுவனவாசல் திறந்திருக்கும், பெற்றோரின் சொல்லுக்கு மரியாதைத் தராது பணிவின்றி நடப்போர் நரகுக்குச் செல்லத் தயாராக வேண்டும்.''
''பெற்றொருடன் மிக நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள், அவர்களை அவமரியாதையாகவோ, நிந்தனையாகவோ பேசாதீர்கள், அவர்கள் எதிரில் மிகுந்த பணிவன்புடன் கண்ணியமாகக் காரியமாற்றுங்கள், அவர்கள் மத்தியில் நீங்கள் பெரிய மனிதராகப் பார்க்காதீர்கள்'' என்பன இறைமறை வடித்துத்தரும் இனிய கருத்துக்கள்.
நபி (ஸல்) அவர்களின் நண்பர்களுள் ஒருவரான கீர்த்திமிக்க ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் தமது நண்பர்களை விளித்துக் கூறினார்கள்:
''உங்கள் தாயுடன் மிகப் பணிவுடன் பேசுவதும், அவருடைய உணவுத் தேவையைக் கவனிப்பதும் உங்களுக்குச் சுவனத்தைச் சொந்தமாக்கிவிடும். ஆனால் ஒரு நிபந்தனை - நீங்கள் பாவச் செயல்களில் ஈடுபடாது இருக்க வேண்டும்''
நபி (ஸல்) அவர்களின் மற்றுமொரு முக்கிய நண்பரான ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
''நீங்கள் உங்கள் தந்தையின் பெயர் சொல்லி அழைக்காதீர்கள். அவருக்கு முன் நடக்காதீர்கள், அவர் அமருமுன் அமராதீர்கள்.''
நபி (ஸல்) அவர்கள் பெற்றோர் மீது கருணை காட்டுவதன் அவசியம் பற்றி வெகுவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
அதே போல மற்றும் பலரும் பல்வேறு கட்டங்களில் பெற்றோருக்குக் கண்ணியம் அளித்தல், கருணை காட்டல், அவர்கள் மீது இரக்கம் கொள்ளுதல் பற்றி கூறிய கருத்துக்கள் ஏராளமுண்டு.
'நல்ல பிள்ளைகள் தம் பெற்றோரை நிறைந்த அன்புடன் நோக்குவதும் கூட பரிபூரணமான 'ஹஜ்' ஒன்றை செய்த நன்மையை அல்லாஹ்விடம் இருந்து பெற்றுத்தர வல்லதாகவுள்ளது. ஒருவரின் சொத்து சுகம் என்பவற்றின் மூல சொந்தக்காரர்கள் அவரின் பெற்றோர் ஆவார்கள்' என்பன இஸ்லாம் முன்வைக்கும் இதமான கருத்துக்களாகும்.
மனிதன் தனது சொத்து செல்வங்களைப் பல வழிகளில் செலவு செய்கிறான். அந்த செல்வங்கள் அனைத்திற்கும் மூலச் சொந்தக்காரர்கள் பெற்றோரே. எனவே, அவற்றின் மூலம் முதலில் பெற்றொரின் தேவைகளே கவனிக்கப்பட வேண்டும். அதற்கு அடுத்துத்தான் மற்றவைகள் தொடர்பான செலவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் தனது பெற்றோருக்காக திறந்த மனதுடன் ஆர்வத்துடனும் செலவழித்தல் அவசியம். அதில் கஞ்சத்தனம் வரவே கூடாது.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிகழ்ந்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி ஒன்றினைக் கேளுங்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, 'யாரசூலுல்லாஹ்! என் தந்தை நினைக்கும் பொழுதெல்லாம் வந்து எனது செல்வத்திலிருந்து எடுத்துச் செல்கிறார்!' என்ற முறையிட்டார், இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரது தந்தையை அழைத்து வரும் படி பணித்தார்கள். சற்று நேரத்தில் அவரது தந்தை அழைத்து வரப்பட்டார். ஊன்று கோலின் உதவியுடன் வந்த அவர் முதிய வயதை உடையவர்.
அவர் வந்தவுடன் அவரது மகனின் முறையீடு பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அப்பொழுது அந்த முதியவர், 'யா ரசூலுல்லாஹ்! ஒரு காலத்தில் எனது இந்த மகன் ஆதரவற்றவராக, எத்தகைய உதவிக்கும் வழியின்றி இருந்தார், அப்போழுது நான் நல்ல சரீர சுகத்துடனும், செல்வத்துடனும் இருந்Nதுன். என் செல்வத்திலிருந்து இவருக்கு உதவி ஒத்தாசைப்புரிவதை நான் தடுத்துக் கொள்ளவில்லை. இன்று இவர் ஒரு செல்வந்தர். எனினும், இவர் தனது செல்வத்தின் மூலம் எனக்கு உதவுவதிலிருந்து என்னை ஒதுக்கி வைக்கின்றார்' என்று வேதனையோடு தன் பரிதாப நிலையை விவரித்தார்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களின் கண்கள் கலங்கி விட்டன, அவர்கள் அந்த வயோதிகரின் மகனை பார்த்து, ''நீங்களும் நீங்கள் பெற்றுள்ள செல்வமும் ஆகிய எல்லாமே உங்கள் தந்தைக்குரின''! என்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றிலிருந்து நாம் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். உண்மையில், மனிதனின் சொத்து, செல்வம், திறமைகள் என்பனவெல்லாம் பெற்றோரின் பெரும் தியாகத்தின் விளைவுகளே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இதன்படி பிள்ளைகளும் அவர்களது செல்வங்களும் அவர்களின் தந்தைக்குரியன. எனவே, தந்தையின் சொற்படியே அவர்கள் செயற்பட வேண்டும். அவர்களது செல்வத்தைக் தந்தை அனுபவிப்பதை ஒருபோதும் தடுக்கக்கூடாது. அது மிகவும் தகாத செயலாகும். மேலும், பெற்றோருக்கு நன்மை நாடி பிரார்த்தனை செய்வதை இஸ்லாம் வெகுவாகக் கூறியுள்ளது.
அல்லாஹ் தனது திருமறையில் கூறிகின்றான்:
''இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் வாழ்த்துவீராக, மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்ததுபோல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக!'' (அல்குர்ஆன் 17:24).
ஒரு தந்தையைவிட தாய் பல கஷ்டங்களை அனுபவிப்பவர், தன் பிள்ளைகளுக்காக எப்பொழுதும் தியாகத்துடன் பணி புரிபவர். எனவே, எல்லா வகையான கண்ணியங்களுக்கும் உரிய முதலாமவராக, அவரைக் கருதுவது அவசியம் அல்லவா!
அல்குர்ஆனும் நபிகளார் அறிவுரைகளும் இது பற்றி மிகத் தெரிளவான விளக்கங்களைத் தருகின்றன.
''தந்தைக்காக செய்யும் பணிவிடைகளை விட தாய்க்காக செய்யும் பணிவிடைகள் மிக சிறப்பானது!'' என ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'யாரசூலுல்லாஹ்! நான் அடிபணிந்து நிற்பதற்கு மற்றவர்களை விடவும் சிறப்பானவராகக் கருதுவதற்கு உரியவர் யார்?' எனக் கேட்டார்.
'உங்கள் தாய்!' என நபி (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
'அதன் பின் யார்?' அவர்; மீண்டும் கேட்டார்.
'உங்கள் தாய்' மீண்டும் அதே பதில் வந்தது.
'அதன் பின் யார்?' வந்தவர் மீண்டும் கேட்டார்.
'உங்கள் தாய் தான்!' நபி (ஸல்) அவர்கள் நாவிலிருந்து பதில் வந்தது. நான்காவது முறையாக, 'அடுத்தவர் யார்?' எனக் கேட்ட பொழுது, 'உங்கள் தந்தை' என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
மற்றொரு முறை, 'தாயின் பாதத்தடியில் சேயின் சுவனம் உண்டு!' என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னைக்கு அன்புடன் பணிவிடைசெய்து, அவரை மிக நல்ல முறையில் கவனித்து வந்தால் உங்களுக்கு சுவன பாக்கியம் கிட்டும் என்பது இதன் கருத்து. இத்தகைய எண்ணற்ற போதனைகள் தாய்க்குப் பணிவிடை செய்வதை பெரும் கடமை எனக் கூறி நிற்கின்றன.
பெற்றோரில் ஒருவரோ இருவருமே மரணித்துவிட்டால், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனைப் புரிய வேண்டும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், அவர்களுக்கு மறுவுலக இன்பங்கள் கிட்டுவதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைப் புரிய வேண்டும் என்பது இறை தூதரின் இதயம் நிறைந்த கட்டளை.
பெற்றோருக்கு கண்ணியமனித்து, மிகுந்த கீழ்ப்பணிவுடன் நடந்து, அவர்கள் வயது முதிர்ந்துவிட்டால், அவர்களைத் திருப்தி படுத்தும் விதத்தில் பணிவிடைப் புரிவதை அல்லாஹ் போற்றியுள்ளான். அப்படி நடந்து கொள்வதைக் கட்டாயப்படுத்தியுள்ளான்.
ஆனால், ஒரு முக்கிய விஷயம்:
அல்லாஹ் தடுத்துள்ள, 'செய்யக் கூடாது' என விலக்கியுள்ள எதையும் தமது அன்புப் பெற்றோர் செய்யும்படி பணித்தால், அவற்றைச் செய்யக் கூடாது. அத்தகையவற்றை தவிர்த்து நடக்க வேண்டும் என்பதுதான் இறை கட்டளை.
பெற்றோராயினும் தவறான (இஸ்லாத்திற்கு முரணான) செயல் ஒன்றைச் செய்யும்படி வேண்டினால் எப்படிச் செய்வது? எனினும் அவர்களது (இஸ்லாத்திற்கு முரணில்லாத) நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தவறு இல்லை. இதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment