ஏரி மீன்கள் ....
உகாண்டா தேசத்தை நீர்த் தொட்டிலில் சுகமாய் தாலாட்டுகிற விக்டோரியா ஏரியில் வாலாட்டுகிற திலாபியா (Tilapia) மற்றும் நைல் பர்ச் (Nile Perch) என்கிற இரு பெரு வகை மீன்கள் வேகமாய் நீந்துகிறது ....
உகாண்டா மீனவர்கள் மீன் பிடிக்கிற வலைகளோடும் மீன்கள் கிட்டுமா என்கிற கவலைகளோடும் தினமும் படகுகளை இயக்கி ஏரியின் முக்கிய பகுதிக்கு சென்று சிக்கிய மீன்களை கரைகளுக்கு கொண்டு வந்து விற்கிறார்கள் ...
மீன் பிடி ஏரிமுகமான 'GABA Beach' என்றழைக்கப்படும் பிராதான ஏரிக் கரைக்கு நம்மவர்கள் பலர் விடுமுறை நாட்களில் தவறாமல் விஜயத்து வீட்டு தேவைகளுக்கு துள்ளி நெளிகிற மீன்களை ஏலத்தில் அள்ளி வாங்குவார்கள் ...
மேலும் உகாண்டாவின் சில்லறை வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கி நகரில் ஆங்காங்கே அமைந்திருக்கும் கடைகளிலும் பரப்பி விற்பார்கள் ...
இன்னும் சில உகாண்டா வாசிகள் நமதூரைப் போல் குடியிருப்புகளுக்கும் நேரடியாக விற்பனை செய்வார்கள் ...
பிரம்மாதமான ருசியினில் முதலிடம் பிடித்திருக்கும் திலாபியா மீன்கள் உகாண்டா மக்களுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் ...
இந்த மீன்களை பெரும்பாலோர் விரும்பி சாப்பிடுவது மட்டுமல்ல எத்தனை ஆண்டுகள் தினந்தோறும் தின்றாலும் திகாட்டாது அலுக்காது ....
இந்த மீனின் தோலை உரித்து சதைப் பகுதிகளை மட்டும் கூடுதல் விலைக்கு பில்லட் (Fillet) என்ற பெயரில் விற்பார்கள் ...
ஆனால் நைல் பர்ச் மீனை சமைத்த (அ) பொரித்த உடனே சூடு ஆறுவதற்கு முன்னர் சாப்பிடணும் இல்லையேல் ஜவ்வு மாதிரி இழுக்கும் என்பதாலும் கொழுப்பு படலம் அதிகம் மற்றும் ருசியும் கொஞ்சம் குறைவு என்கிற காரணத்தாலும் நம்மில் பலர் விரும்பி திண்பதில்லை ....
ஆயினும் நைல்பர்ச் மீன்களின் அனைத்துப் பகுதிகளையும் பிரித்தெடுத்து உலர்த்தி விற்று சதைப் பகுதிகளை பதப்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கும் சில நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து தங்களை பலப்படுத்தி வாழுகிறார்கள் ....
கடல் தேசங்களான நைரோபி மம்பாசா மற்றும் தன்சானியாவில் நமதூர்களைப் போல் எல்லா வகையான மீன்களும் கிடைக்குமென்றாலும் ஆப்பிரிக்காவின் நீளமான விக்டோரியா ஏரியில் இந்த வகையான நல்ல மீன்கள் தொடர்ந்து கிடைத்திட வல்ல இறைவன் அருள்வானாக ....
அப்துல் கபூர்
No comments:
Post a Comment