Sunday, August 19, 2018

அரபா தினமும் அரபா நோன்பின் சிறப்புகளும்


​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

புனிதமான துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பதாம் நாளான அரஃபா தினத்தின் மாண்புகளும், அரஃபா நோன்பின் சிறப்புகளும் பற்றிய நினைவூட்டல்

​​
♣ அரஃபா என்றால் என்ன?

சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு அனுப்பப்பட ஆதம் அலைஹிஸ் ஸலாம் அவர்களும், ஹவ்வா அலைஹஸ்ஸாம் அவர்களும் முதன் முதலாக சந்தித்த இடம் அரஃபா ஆகும். இதனால்தான் இந்த இடத்திற்கு அரஃபா என்று பெயர் சொல்லப்படுகிறது, வேறு பல கருத்துக்கள் இருந்த போதும் இக்கருத்தே பிரபல்யமான கூறப்படுகின்றது.


அரஃபா நாள் என்பது சங்கையான நான்கு மாதங்களில் உள்ள துல்ஹிஜ்ஜா மாதமாகிய ஒன்பதாம் நாளைக் குறிக்கும் இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த நாளாகிய இந்நாள்தான் அரஃபா தினமாகும். அன்றைய நாளில்தான் ஹாஜிகள் அரஃபா எனும் இடத்தில் ஒன்று கூறுகின்றார்கள். அரஃபா மைதானத்தைப் பொருத்தவரை எப்போதும் வெறுமனே வெட்ட வெளியாகக் காட்சி தரும். ஆனால் துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் ஹாஜிகள் ஒன்று கூடும் போது அந்த அரஃபா மைதானம் முக்கியத்துவம் பெறுகிறது.

​​
♣ அரஃபா தினத்தின் மாண்புகள்

அரபா தினம் என்பது ஹிஜ்ரி ஆண்டின் பனிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அது வரலாற்று சிறப்பு மிக்க தினம். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் எனும் வாழ்வியல் நெறியை முழுமைப்படுத்தினான்.

‘இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்.’ (திருக்குர்ஆன் 5:3)

இந்த வசனம் ஹிஜ்ரி 10–ம் ஆண்டு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போதும், துல்ஹஜ் பிறை 9–ம் நாளான அரபா தினத்தின் போதும் தான் இறங்கியது.

​​இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கூறும் போது, ‘நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்கள். அதற்கு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரபா (துல்ஹஜ் 9–ம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீது ஆணை! நாங்கள் அப்போது அரபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள்.

​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் தாரிக்பின் ஷிஹாப் ரலியல்லாஹு அன்ஹு
​நூல்: புகாரி 4606

♦ அரபா தினத்தை விட சிறந்தநாள் வேறெதுவும் கிடையாது. மற்ற தினங்களைவிட அன்றைய தினத்தில் அதிகமான நரக கைதிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடுதலை அளிக்கிறான். அன்று அல்லாஹ் அடியார்களிடம் நெருங்கி வந்து, அவர்களின் மாண்பு குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்.

​​அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா
​நூல்: முஸ்லிம்


​​
♣ அரஃபா மைதானத்தின் முக்கியத்துவம்

அரபா என்பது மக்காவிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு மைதானம். ஹாஜிகள் துல்ஹ்ஜ் 9 ம் நாள் காலையிலிருந்து மாலை வரை அங்கு தங்கிருப்பது கட்டாய கடமையாகும், இஹ்ராம் உடையோடு ஹாஜிகள் அல்லாஹ்விடம் கையேந்தி பிரார்த்தனை செய்து கொண்டிருக்க வேண்டும்.
​   
அரபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்கவேண்டும் என்பதில்லை. அரபா மைதானத்தின் எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் தங்கலாம். துல்ஹஜ் 9–ம் நாளின் அதிகாலை ‘சுபுஹ்’ எனும் தொழுகையை முடித்துவிட்டு, சூரியன் உதயமான பின்பு ‘மினா’ எனும் இடத்திலிருந்து அரபாவை நோக்கி புறப்படவேண்டும். அரபாவிற்கு வந்து சேர நண்பகலாக ஆகிவிடும். இந்த நண்பகலில் இருந்து மறுநாள் அதிகாலை வரைக்கும் அரஃபா மைதானத்தில் தரிபடுவதன் மூலம் புனித ஹஜ் நிறைவேறிவிடும்.

‘அரபா தான் ஹஜ்’ ஹஜ் என்பதே அரபா (வில் தங்குவது) தான். துல்ஹஜ் பத்தாம் இரவில் அதிகாலைக்கு முன்பு ஒருவர் (அரபாவுக்கு) வந்துவிட்டால், அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் பின் யஃமுர் ரலியல்லாஹு அன்ஹு
​நூல்கள்: அஹ்மது, அபூதாவூத், நஸயீ, திர்மிதி

​​♣ அரபாவில் என்ன செய்ய வேண்டும்?
உலகின் பல பாகங்கலிருந்தும் ஹஜ் கடமையை செய்ய மக்காவுக்கு வருகை தரக்கூடிய அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு ஒப்பற்ற தினம்தான் ‘அரபா தினம்’. அன்றைய தினத்தில் ‘அரபா திடலில்’ அனைவரும் ஒன்று திரண்டு, நிறம், மொழி, குலம், நாடு, பணம், பதவி, சாதி, அமைப்பு அனைத்தையும் துறந்து, வேற்றுமையை குழிதோண்டி புதைத்து, தீண்டாமையை வேரோடு சாய்த்து உலக ஒற்றுமையை நிலைநாட்டி வைக்கிறார்கள்.
உலக ஒற்றுமையை வலியுறுத்தும் உலக மகாநாடு அரபா தினம் ஆகும். அரபாவில் உலக அமைதிக்காகவும், உலக நன்மைக்காகவும், தாய் நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமய நல்லிணக்கத்திற்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், மனித வளத்திற்காகவும், பசியிலிருந்து விடுதலை பெறவும், பயத்திலிருந்து விடுபடவும், நோயிலிருந்து நிவாரணம் பெறவும், கடனிலிருந்து நிம்மதி பெறவும், மனிதவளம் மேம்படவும், மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
சுருக்கமாக செல்வதாக இருந்தால் அரஃபா முஸ்லிம்களுக்கு கற்பிக்கும் பாடம் என்னவென்றால் இஸ்லாமிய அடிப்படை தவறாது, கட்டொழுங்கை மீறாது வாழ வேண்டும். முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு சகோதரத்துவ உணர்வோடு சண்டை  சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும். சைத்தான் அவர்களைப் பார்த்து ஏமாற்ற மடைய வேண்டும்.
நான் அரபாவில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள்.

​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் உஸாமா பின் ஸைத் ரலியல்லாஹு அன்ஹு
​நூல்: நஸயீ

♣ அரஃபா நோன்பின் சிறப்புகள்
அரஃபா தினத்தில் ஹஜ்ஜிக்கு செல்லாதவர்கள் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தான காரியமாகும். புனித ஹஜ்ஜில் ஈடுபடும் ஹாஜிகள் அரஃபா தினத்தில் அதிகமதிகம் நன்மைகள் பலவற்றை புரிவதற்கும், உத்வேகத்துடனும், விவேகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படுவதற்கும் ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு சுன்னத் இல்லை.

♣ ஹாஜிகள் அல்லாத மற்றவர்கள் துல்ஹிஜ்ஜா ஒன்பதாம் நாளில் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்.

அரபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அது கடந்துபோன ஓராண்டு மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறு பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ என கூறினார்கள்.’

​​அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு
​நூல்: முஸ்லிம் 2151

♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாவது தினத்திலும், ஆஷீரா தினத்திலும், ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்களிலும் நோன்பு நோற்கக் கூடியவராக இருந்தார்கள்.

​​நூல் : அஹ்மத், அபுதாவுத்

♦ கண்மணி நாயகம் சல்லல்லாஹு  அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: அரஃபா நோன்பானது கடந்து போன வருடத்தினதும் பிறக்கவுள்ள வருடத்தினதும் பாவங்களுக்கான பிராயச் சித்தமாக அமைந்து விடுகின்றது.

​​நூல்கள்: புகாரி, அபூதாவூத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா

♣ அரஃபாவில் ஹாஜிகள் கூடும் போது அவர்கள் நோன்பு நோற்பது சுன்னத் இல்லை.

உம்முல் ஃபழ்லு பின்த் ஹாரிஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். ”நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அரஃபா தினத்தில் நோன்பு வைத்திருக்கிறார்களா?” என்று என்னிடம் சிலர் சர்ச்சை செய்தனர். சிலர் ”அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். மற்றும் சிலர் ”நோன்பு வைத்திருக்கவில்லை” என்றார்கள். அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் குடித்தார்கள்.

​​நூல்: புகாரி 1988

மைமூனா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். அரஃபா நாளில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குடித்தார்கள்.

​​நூல்: புகாரி 1989

ஆகவே அரஃபா தினத்தின் மாண்புகளை, முக்கியத்துவத்தை உணர்ந்து துல்ஹிஜ்ஜா மாதம்  பிறை ஒன்பதாம் நாளான சுன்னத்தான  அரஃபா நோன்பை நோற்று  அந்நாளில் பாவங்களுக்கு மன்னிப்பும், நரகவிடுதலையும் கிடைக்க எல்லாம் வல்ல ரஹ்மானாகிய அல்லாஹ் நமது பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பானாக! இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

No comments: