Wednesday, August 8, 2018

*புரட்சிகள் செய்த பூமான் நபி!*


 
*பூமான் நபிபோல் புரட்சிகள் செய்தவர் பூமியில் யாருமில்லை*
*புதுமைக் கருத்தால் உலகை மாற்றிய புண்ணியர் எவரும் இல்லை*
*சாமான்யருக்கும் சமத்துவம் தந்த தலைவர் எவருமில்லை*
*சாதிகள் பேதங்கள் தகர்த்தே எறிந்த சாதனை எங்குமில்லை*

*உழைப்பவர் கைக்கு முத்தம் தந்து உழைப்பின் உயர்வைச் சொன்னார்கள்*
*ஊழியர் வியர்வை உலரும் முன்னே ஊதியம் அளிப்பீர் என்றார்கள்*
*தாயின் காலடி சுவர்க்கம் என்று தாய்மைக்கு மதிப்பு தந்தார்கள்*
*முதன் முதலாக விதவையை மணந்து விதவைக்கு விடியல் கண்டார்கள்*



*கருத்தவர் வெளுத்தவர் நிறவேற்றுமையை காலில் போட்டு மிதித்தார்கள்*
*கல்வி உங்கள் காணாமல்போன பொருள் தேடிப்படிப்பீர் என்றார்கள்*
*ஒவ்வொரு மனிதனும் இறைவனின் குடும்ப உறுப்பினர் என்றே உரைத்தார்கள்*
*அடுத்தவர் பசிக்க தான் மட்டும் உண்பவர் முஸ்லிமே அல்ல வெறுத்தார்கள்*

*பாவங்களுக்குத் தலையைப் போன்றது பாழும் குடிதான் என்றார்கள்*
*கோபத்தை அடக்கும் மனிதன் அவனே உண்மை வீரன் என்றார்கள்*
*பதவியைக் கேட்கும் பதர்களுக்குத்தாம் பதவியை தராதீர் என்றார்கள்*
*மருந்தே இல்லா நோயும் இல்லை மருத்துவம் தேடுவீர் என்றார்கள்*
*மருத்துவம் தேடுவீர் என்றார்கள்*

*யோகாசனத்தின் பலனை எல்லாம் தொழுகைக்குள்ளே வைத்தார்கள்*
*வர்மக் கலையின் தொடு சிகிச்சையின் விளைவை உளூவில் அமைத்தார்கள்*
*அரவயிறுணவு கால்வயிறு நீர் ஆரோக்கிய இலக்கணம் வகுத்தார்கள்*
*ஓயாது இயங்கும் உறுப்புகள் ஓய்ந்து உயிர் பெற நோன்பைக் கொடுத்தார்கள்*

*வறுமைக் கோட்டை அழித்திட ஏழை வரியாம் ஜக்காத் விதித்தார்கள்*
*உலகமனைத்தும் ஒரு கிராமம்எனும் உணர்வை ஹஜ்ஜில் விதைத்தார்கள்*
*தீவிரவாதம் வன்முறையெல்லாம் தீனில் இல்லை தடுத்தார்கள்*
*எங்கும் சாந்தி அமைதி தவழ இஸ்லாம் எனும் பெயர் வைத்தார்கள்*

*அறிவியல் விஞ்ஞான உண்மைதன்னை ஆன்மிக வடிவில் படைத்தார்கள்*
*துறவறம் பேணும் முனிவர்கள் தவத்தை இல்லறவாழ்வில் சமைத்தார்கள்*
*உள் மணசாட்சி சொல்வது எதுவோ அதுவே உண்மை என்றார்கள்*
*உனக்கு விரும்பும் அதையே நீதான் பிறருக்கு விரும்பு என்றார்கள்*

*தண்ணீர் காற்று நெருப்பு, மனிதர் அனைவரின் உரிமை என்றார்கள்*
*போரில் முதியவர், குழந்தை, பெண்களை பூப்போல் காப்பீர் என்றார்கள்*
*தீயதைக் கண்டு தடுக்காதோர்க்கு தீமையில் பங்கு கொடுத்தார்கள்*
*பாவங்கள் மிகைக்கும் போது இயற்கை பழிவாங்கும் என்றே உரைத்தார்கள்*

*மனிதனுக்காக எல்லாம் படைத்தான் மாபெரும் இறையோன் என்றார்கள்*
*மனிதனை மட்டும் தனக்காய் படைத்தான் மாபெரும் வல்லோன் உரைத்தார்கள்*
*உலக வாழ்க்கை சத்திரம் போன்றது உணர்வு பெறுவீர் என்றார்கள்*
*மறுமை வாழ்வே நித்தியமானது மனதில் வைப்பீர் என்றார்கள்*

*சகுனம் பார்ப்பவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல அறிவீர் என்றார்கள்*
*காலத்தை நேரத்தை சபிக்காதீர் அந்த காலமும் இறைவன் என்றார்கள்*
*அடுத்தவர் வணங்கும் தெய்வத்தைப் பழித்து அலைத்திட வேண்டாம் என்றார்கள்*
*அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு நம்மார்க்கம் நமக்கு என்றார்கள்*

*அடுத்தவர் துன்பம் கண்டு மனதால் ஆனந்தம் கொள்வதைத் தடுத்தார்கள்*
*உண்மை கசப்பாயிருப்பினும் அதனை உரக்க உரைப்பீர் என்றார்கள்*
*கோபம் கொண்ட நிலையில் தீர்ப்பு கொடுக்காதீர் என தடுத்தார்கள்*
*இறைவன் மென்மையானவன் அதையே விரும்புகிறான் எனப் பகர்ந்தார்கள்*

*காரணமின்றி தலாக் கொடுத்தால் அர்ஷே நடுங்கும் என்றார்கள்*
*பெண்கள் கண்ணாடிப் பாத்திரம் போன்றோர் பத்திரம் பத்திரம் என்றார்கள்*
*மனைவிக்குப் பிடித்தவர் எவரோ அவரே மனிதரில் நல்லவர் என உரைத்தார்கள்*
*குழந்தைகளுக்கு நாம் தரும் சொத்து கல்வியும் ஒழுக்கமும் என்றார்கள்*

*நேர்மையான வணிகர் சுவனத்தில் நபிமார்களுடனே என்றார்கள்*
*இலஞ்சம் பதுக்கல் ஊழல் சமூக குற்றம் என்றே தடுத்தார்கள்*
*குழப்பம் செய்வது கொலையைவிட ஓர் கொடிய குற்றம் உரைத்தார்கள்*
*பாதிக்கப்பட்டவர் மன்னித்தால்தான் பரமனும் பொறுப்பான் என்றார்கள்*

*சிந்தனை செய்வது வணக்கத்தை விடவும் சிறந்தது என்றே சிலிர்த்தார்கள்*
*அறிஞரின் மைத்துளி தியாகியின் குருதியைவிட மேலானது என்றார்கள்*
*அறிஞர்கள் தவறு செய்தால் இரண்டு தண்டனை என்றே உரைத்தார்கள்*
*கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசம் ஆக்கியே வைத்தார்கள்.*

பாடலாசிரியர் : *கலீஃபா ஆலிம் புலவர் S. ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பயீ அவர்கள்.* (மறைஞானப்பேழை "ஆன்மிக" மாத இதழ் ஆசிரியர்).

குரல் : *பாடகர் தாஜுத்தீன் பைஜீ அவர்கள்.*http://www.emsabai.com/nov14-article12.html

No comments: