Shahjahan R
மின்சாரம் தூக்கி அடிக்குமா?
(இது அறிவியல்-தகவல் சார்ந்த பதிவு மட்டுமே. கமென்ட்களில் அரசியல் கலக்க வேண்டாம்.)பலருக்கும் இப்போது ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. “கரன்ட் ஷாக் அடிச்சு அப்படியே தூக்கி எறிஞ்சிருச்சு” என்கிறார்களே...? சில திரைப்படங்களில் மின்சாரம் தாக்கியவர் பறந்து போய் விழுகிறாரே? மின்சாரம் தாக்கினால் தூக்கி அடிக்குமா? பல்லால் கடிக்கும்போது தூக்கி எறிந்திருக்காதா?
பள்ளிப்படிப்பு முடித்து சில காலம் எலக்டிரீசியனுக்கு ஹெல்பராக வேலை செய்த அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிந்ததை விளக்குகிறேன். விவரம் அறிந்தவர்கள் மேலும் தகவல் தரலாம்.
சில காலத்துக்கு முன்னால் ஒரு வீடியோ இங்கே சுற்றிக்கொண்டிருந்தது. ரயில் நிலையத்தில் ஒரு மின்சார ரயில் நின்றிருந்தது. பைத்தியக்காரன் ஒருவன் ரயிலின் கூரையில் ஏறி விட்டான். கிறுக்குத்தனமாக சிரித்துக்கொண்டே மேலே நடந்து போனவன், சட்டென்று மேலே இருந்த வயரைப் பிடித்தான். பிறகு கையை எடுக்க முடியவில்லை. முதலில் அவன் தலைமயிர் திகுதிகுவென எரிந்தது. ஓரிரு நொடிகளுக்குள் அப்படியே கருகி விழுந்து விட்டான். தூக்கி அடிக்க வேண்டும் என்றால் அவன் கீழே விழுந்திருக்க வேண்டும்.
அப்படியானால் தூக்கி அடிப்பதாகச் சொல்வது தவறா? ஆமாம். மின்சாரம் தூக்கி அடிக்காது. நாமே நம்மைத் தூக்கி அடித்துக் கொள்ளலாம். அதாவது, மின்சாரம் தாக்கும்போது ஏற்படும் ரிஃப்ளக்ஸ் ஆக்சனால் அதிர்ச்சியில் தூரப்போய் விழலாம்.
இங்கே தரப்படுகிற விளக்கத்தில் மின்சாரம் என்பது நாம் பொதுவாக வீடுகளில் பயன்படுத்தும் 220 வோல்ட் மின்சாரம் என்பதை கவனத்தில் கொள்ளவும். உயர் அழுத்த மின்சாரம் தாக்கினால் நொடியில் மரணம் நிகழும்.
எலக்டிரீசியன் வேலை செய்வதைப் பார்த்திருப்பீர்கள். ஒரு வயரில் மின்சாரம் வருகிறதா என்று பார்க்க வேண்டும். அவர் டெஸ்டர் கொண்டு வரவில்லை. அப்போது என்ன செய்வார்? விரலின் மேல் பகுதியால் - அதாவது, நகம் இருக்கும் பகுதியால் சட்டென்று தொட்டுப் பார்த்துவிட்டு எடுத்துக் கொள்கிறார். ஏன் என்றால், விரல் பின்பக்கமாக மடங்காது. ரிஃப்ளக்ஸ் ஆக்சனில் சட்டென விரலை மீட்டுக்கொள்ள முடியும்.
அதையே விரலின் உள்பக்கத்தால் – உள்நோக்கி வளைக்கக்கூடிய மென்மையான பக்கத்தால் தொட்டுப் பார்த்தால், மின்சாரம் படும்போது தசைகள் விரைவாக சுருங்கி விரியும்போது சட்டென்று பிடித்துக்கொள்ளும். எனவேதான் மின்சாரத்தில் வேலை செய்பவர்கள் விரலின் பின்பக்கத்தால் - நகமிருக்கும் பக்கத்தால் தொட்டுப் பார்ப்பார்கள். அதுவும் கண நேரத்துக்கு மட்டுமே.
ஒரு படத்தின் மூலம் விளக்கியிருக்கிறேன்.
கறுப்பு வெள்ளையில் இருக்கும் படம், மின்சாரம் உள்ளதா என்று சோதிக்க சரியான முறை. (இது விளக்கத்துக்காகத்தானே தவிர, இதை நீங்கள் யாரும் செய்து பார்த்துவிடக்கூடாது.) வண்ணப்படத்தில் இருப்பது தவறான முறை. அதுவும் இரண்டு விரல்களால் பிடிப்பது மிகவும் ஆபத்தான முறை.
வயரை வாயில் வைத்துக் கடிக்கும்போது மின்சாரம் பாய்ந்தால் என்னவாகும்? தசைச் சுருக்கம் காரணமாக வாய் இறுகிக் கொள்ளும். மின்சாரத்தின் பிடியிலிருந்து விலக முடியாது.
மின்சார இணைப்புகளில் முறையாக எர்த்திங் தரப்பட்டு, ELCB எனப்படும் Earth-leakage circuit breaker அமைப்பு பொருத்தப்பட்டிருந்தால் மட்டுமே யாராவது மின்சாரம் தாக்கும்போது தானாகவே மின்இணைப்பு துண்டாகும். எல்லா வீடுகளிலும்/கட்டிடங்களிலும் ELCB இருக்காது.
எந்த வயராக இருந்தாலும், குறிப்பாக சில்க் வயர், காலப்போக்கில் இறுகி வலுவிழந்து விடும். சில இடங்களில் வெடிப்பும் இருக்கும். இன்னும் சில இடங்களில், கொஞ்சம் உருகி, உள்ளிருக்கும் உலோகக் கம்பி நீட்டிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட வயர்களில் வேலை செய்யும்போது எச்சரிக்கை அவசியம்.
No comments:
Post a Comment