Tuesday, September 6, 2016

இது ஊனம்இல்லை ...

Abu Haashima

மழைச் சேற்றையும்
சாக்கடை சகதியையும்
சந்தனமாய் விரித்துக் கொண்டும்
பக்கத்து பூக்கடைகளின்
வாசத்தை
காற்றின் கரங்களால்
களவாடி பூசிக்கொண்டும்
கலகலப்பாய்
கச்சோடம்
நடத்திக் கொண்டிருந்தது
கம்பளம் பஜார்!

பேருந்துகளும்
எண்ணற்ற வாகனங்களும்
ஊர்ந்து செல்லும்
கம்பளக் கடைவீதியில்
மேனகாவின்
செல்ல நாய்கூட
நாலு கால்களால்
நிமிர்ந்துதான் நடந்தது!

இடுப்புக்குக் கீழே
எதுவுமில்லாத
ஒருவன்
கம்பளத்து
சகதிகளில்
தவழ்ந்து வருவதைப் பார்த்து
"ஐயோ பாவம்...
இவன்...
நாயைவிட பாவம்"
என்று
வருத்தப்பட்டது மனது!

சாயாக் கடையில்
காசு கொடுத்து
சாயா குடித்து விட்டு
கைகளால்
கம்பீரமாக
நடந்து சென்றான் அந்தக்
காலில்லாதவன்!

"கால்கள் இல்லாவிட்டால் என்ன ?
இறைவன் தந்த
கைகளிருக்கிறதே"

சலனமில்லாத பார்வையால்
என்னைச் சலனப் படுத்திவிட்டு
நிதானமாக என்னைக்
கடந்து சென்றான்
ஞானி!

ஊனப்பட்ட மனதோடு
நகரமுடியாமல்
நின்றேன் நான்...
இரு சக்கர வாகனத்தோடு....


  Abu Haashima

No comments: