Monday, September 5, 2016
மண்ணுலக மாந்தர் ....!
ராஜா வாவுபிள்ளை
குற்றங்குறை காணவே எத்தனிப்பர்
நிறைதனை முப்பொழுதும் நிந்திப்பர்
குறுகுறுக்கும் மனதுடன் அலைந்திடுவர்
உற்றாரென்றே உதட்டளவில் இயம்பிடுவர்
உறவுக்கு தோள்கொடுக்காதே தட்டிக்கழிப்பர்
பேராசைகொண்ட மண்ணுலக மாந்தர்
பொய்புரட்டு செய்வதிலே வல்லவர்
பொறுப்பின்றியே பொல்லாங்கு பேசிடுவர்
பொறாமையில் புரண்டு உழண்டிடுவர்
உண்மைக்கு புறம்பாகவே சென்றிடுவர்
குறுக்குவழியே பயணிக்க விரும்பிடுவர்
சொரணையில்லா மண்ணுலக மாந்தர்
தீராத்துன்பங்கள் விரும்பியே செய்திடுவர்
மற்றுள்ளோர் மனமகிழ்வு வெறுத்திடுவர்
தன்செயலொன்றே சரியென வாதிடுவர்
வரம்பில்லா வார்த்தைகள் பேசிடுவர்
குணமில்லா மனதினை கொண்டிருப்பர்
அறிவிலிகளான மண்ணுலக மாந்தர்
மகாபாவம் செய்திடவும் மடித்திடார்
துன்புறும் ஏழைக்கும் இரங்கிடார்
பணம்படைத்தோர் காலடியில் தவமிருப்பார்
நன்மைகள் செய்திடாது காலம்கடத்திடுவார்
இன்னல்கள் இழைப்பதற்கு இயங்கிடுவார்
இருந்துமில்லாத மண்ணுலக மாந்தர்
இதயமின்றி இக்கட்டில் இறக்கிவிடுவார்
இறுமாப்புடனே இன்னலை விதைத்திடுவார்
ஏழைக்கிரங்காது ஏளனம் செய்திடுவார்
தன்னிலை நிலைக்குமென்றே எண்ணிடுவார்
இறையோனின் நினைவின்றி வாழ்ந்திடுவார்
இரக்கமில்லா மண்ணுலக மாந்தர்
ராஜா வாவுபிள்ளை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment