மழலையெனும் மருந்து
(இன்னிசை வெண்பாட்டுகள்)
====================================
(இன்னிசை வெண்பாட்டுகள்)
====================================
====================================
அஞ்சுதலோ மிஞ்சுதலோ ஏதுமற்ற நன்மழலைக்
கொஞ்சுமொழிக் கோலம்! கொடுமை யறியாத
பிஞ்சுமலர் பொக்கையிதழ் புன்சிரிப்பால் நெஞ்சினிலே
வஞ்சமிலா இன்னமிழ்தா மூற்று!
கொடியிற் சிரித்திடும் கொன்றையின் தேனாய்,
மடியில் முகிழ்ந்திடும் மல்லிகைப் பூவாய்,
நொடியில் நமையே நுகர்ந்திட வைக்கும்
வடிவெழில் வண்ண மலர்!
அன்னையர் தீட்டும் அழகொளிர் ஓவியமாய்க்,
கன்னற் சுவைச்சேர் கனிமொழிக் காவியமாய்,
விண்முகிற் கூட்டுநல் வேய்குழற் பாவெனக்,
கண்ணையே கட்டும் கனவு.
சின்னஞ் சிறுவிரலால் தீண்டுமின்ப சில்லிப்பாய்,
கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டின் நாவினிப்பாய்!
மின்னல் ஒளிவீசும் மென்மழலைச் சொற்பதம்நீ
அன்பில் விளைந்த அழகு.
முக்கனியும் சேர்ந்த முழுநிலவாய் முத்தமிழாய்
சொக்குமெழிற் றோய்ந்த தொடுவானச் சித்திரமாய்
புத்தமிழ்தப் பூம்பொழிலாய் பொன்நே ரிலக்கியமாய்
வித்தகம்நீ காட்டும் வியப்பு.
நஞ்சுடன் துன்பமும் நேர்ந்திடும் அச்சமும்
கொஞ்சமு மில்லா குளிருறை காநிகர்
நெஞ்சகச் சோலையின் நெகிழ்க்கும் குயிலிசை,
பிஞ்சது ஆற்றிடும் பேச்சு.
கண்ணைக் கவரும் கனவுப் புதையலாய்
பெண்ணின் வயிற்றில் பிறக்கும் மழலைதம்
வண்ணக் குறுமலர் வாயின் சிரிப்பிலே
நண்ணும் கவலை நசுக்கு.
கவிஞர் இராஜ. தியாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி
No comments:
Post a Comment