Saturday, September 20, 2014

முகிலுக்கும் பரிதிக்கும்

முகிலுக்கும் பரிதிக்கும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால்
மெலிதாகக் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்

பிரபஞ்ச வெளிகளில்
பிளக்கப்படாத அணுக்களின் பேரடர்வாய்
மௌனத்தால்
மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்

பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது

அது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை
வசதியாய் வளைக்கும்
அபிலாசையில்
மூர்க்கர்கள் சொல்வது

புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுள்ளம்

இவையாவும் அவளின்
ஆசீர்வதிக்கப்பட்ட இயல்புகளல்லவா

அவகாசம் கேட்கும் விண்ணப்பங்களாய்ச்
சட்டுச் சட்டென்று மொட்டாகும்
பெண்ணின் மௌனப் பூக்கள்

சரியான சாவிதேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அவசரப்படுத்தாமல்
அமைதி காப்பதே ஆணுக்கழகு

மௌனம் கலைத்து அவள் உனக்குச்
சம்மதமகுடம் சூட்டியபின்னும்
இன்னொரு மௌனத்தை
உடுத்திக்கொண்டுவிட்டால்

அடடா
அது நிகழ்ந்தே விட்டது
ஆம்
உன் நம்பிக்கை மரம்மீது
கூர் கோடரி ஒன்று
உறுதி செய்யப்பட்டுவிட்டது

விடை பெற்றுக்கொள்
விரைந்து வேற்றிடம் பார்
வெதும்பிச் சாகாதே

பெண்ணின்
விருப்பத்தின் திருப்பத்தை
வாழ்த்திப் பாட
வாயற்றுப் போனாலும்
அவள்
வாழும் வழிவிட்டுப்போ

இன்னொரு பெண்மனம்
உனக்காக எங்கோ
மௌனம் கலைக்கக்
காத்திருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: