பிரதமருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு. அந்த ஜனாதிபதிக்கே பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு வழங்கியிருக்கிறது நமது அரசியல் சாசனம்.
சதாசிவம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கவில்லை. அந்த பதவியின் பெயரே இந்தியாவின் தலைமை நீதிபதி என்பதுதான். சீஃப் ஜஸ்டிஸ் ஆஃப் இந்தியா. சொல்லும்போதே எவ்வளவு பெருமையாக இருக்கிறது. அதற்கு மேல் வகிக்க இந்த நாட்டில் பதவிகள் கிடையாது.
மிக உயர்ந்த அந்த ஆசனத்தை அலங்கரித்த நமது சதாசிவம் ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்படுவது விசித்திரம், வேடிக்கை மட்டுமல்ல. அரசியல் சாசனத்துக்கு பொருத்தமானதாகவும் தெரியவில்லை. கேரள ஹைகோர்ட் நீதிபதி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அது அத்தனை கவுரவமானதா?
உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஃபோனில் கூப்பிட்டு, ‘உங்கள் ராஜினாமா கடிதத்தை உடனே ஃபேக்ஸில் அனுப்புங்கள். நீங்களாக விலக மறுத்தால் கண்காணாத வடகிழக்கு மாநிலத்துக்கு உங்களை டிரான்ஸ்ஃபர் செய்வோம். அதற்கும் கலங்காமல் அங்கே போய் நீங்கள் பதவி ஏற்றுக் கொண்டால், சில நாட்களில் ஒரு பியூனை போல உங்களை டிஸ்மிஸ் செய்வோம்’ என்று மிரட்டும் நிலையில்தான் இன்றைய கவர்னர் பதவி இருக்கிறது.
ஆட்டுக்கு தாடி போல அரசுக்கு ஆளுனர் பதவி என்று அண்ணா சொன்னார். கவர்னர் பதவி ஒரு அரசியல் நியமனம். மத்திய அரசின் ஏவலை செய்ய வேண்டிய பதவி. நியமனம் செய்பவர்களுக்கும் சரி, நியமிக்கப்படுவோருக்கும் சரி வெட்கமே கிடையாது. ஆட்சி மாறும்போது அட்வகேட் ஜெனரல் மாதிரியான நியமனங்கள் ராஜினாமா செய்தாலும் கவர்னர்கள் செய்வதில்லை. பதவி சுகம் விடுவதில்லை. ஊர் என்ன சொல்கிறது என்பதை பற்றி கவலையே படாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னை நீக்க சதி என்று கூச்சமே இல்லாமல் வழக்கு போடவும் செய்கிறார்கள். நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்து பெருமை பெற்ற ஒரு சட்ட மேதைக்கு இதெல்லாம் தேவையா?
அடுத்து கேரளாவில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் அமித் ஷா குறியாக இருக்கிறார். கவர்னரின் உதவி இல்லாமல் அது சாத்தியம் இல்லை. உண்மையிலேயே சதாசிவம் அதற்கெல்லாம் வளைந்து கொடுக்காவிட்டாலும் நடப்பதெல்லாம் அவர் ஆசியோடுதான் நடக்கிறது என்று ஊர் நம்பும். மக்கள் தேர்ந்து எடுத்த அரசுக்கும் தேர்தலுக்கு சம்பந்தமே இல்லாத கவர்னருக்கும் முட்டல் மோதல் உருவாக அல்லது உருவாக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. அதிலெல்லாம் நமது அரசியல்வாதிகள் கை தேர்ந்தவர்கள்.
ஒரு போலீஸ் கமிஷனர், ஒரு துணை வேந்தர் நியமனத்தில் தொடங்கி ஒரு கிரிமினல் வழக்கை ஊத்தி மூடுவது வரை கவர்னரின் பெயரால் மத்திய ஆட்சியாளர்கள் சாதித்துக் கொள்ள முடிகிற விஷயங்களுக்கு பஞ்சமே இல்லை. சதாசிவம் போன்ற அரசியல் தெரியாத அறிஞர்களுக்கு அந்த விஷயங்கள் ஒருக்காலும் புரியாது. தான் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறோம் என்பதை உணரும் அளவுக்குக்கூட நமது அரசியல் சாரா அறிஞர்களுக்கு அனுபவம் போதாது. இதனாலேயே அவருக்கு இந்த பதவியை கொடுக்கிறார்களோ என்றுகூட எண்ண தோன்றுகிறது.
சதாசிவம் நம்மூர்காரர். எனக்கு அவர் மேல் ரொம்ப மரியாதை உண்டு. ஏனைய முன்னாள் தலைமை நீதிபதிகள், ஜனாதிபதிகளை போல ஆள், அம்பு, சேனை புடைசூழ தலைநகரில் பங்களா வாசம் செய்ய பிடிக்காமல், சொந்த கிராமத்துக்கு திரும்பி விவசாயத்தில் ஈடுபட போவதாக அவர் சொன்னபோது உலகமே மெச்சியது. அப்பேர்ப்பட்ட எளிமையான மனிதரான சதாசிவம் ஜுஜுபி கவர்னர் பதவியை ஏற்கக்கூடாது என்பது என் பிரார்த்தனை.
(ஒன்றும் ஒன்றும் மூன்று 01.09.2014)
Kathir Vel
நன்றி: கதிர் வேல் Kathir Vel அவர்களுக்கு
No comments:
Post a Comment