Monday, May 19, 2014

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதை போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள் கொடுத்திருப்பது, இந்நூலை எழுதியவருக்கு தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சி உண்டு என்பதைக் காட்டுகிறது!’
தமிழில், முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா, 21 வயதில், “காதலா, கடமையா?’ நாவலை எழுதினார். மூன்றாம் வகுப்பு வரை தான் படிப்பு. அனுபவப் படிப்பே படைப்புத் திறனுக்கு காரணம் என்று எழுதி வைத்திருக்கிறார். அன்றாடம் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர் இவர்.

சித்தி ஜுனைதா, 1917ல் நாகூரில் பிறந்தார். 16 வயதில் எழுதத் தொடங்கினார். “காதலா, கடமையா?’ 18 அத்தியாயங்களைக் கொண்ட சரித்திரப் புதினம். மதுரை பின்னணியில் எழுதப்பட்ட, இந்த நாவலை, எழுத்தாளர் புதுமைப்பித்தன் விமர்சித்து எழுதியுள்ளார். “முஸ்லிம் பெண்டிர் எழுத முன் வருவதை நாம் வரவேற்கிறோம்…’ என்று அவர் பாராட்டினார்.

இந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, “நாடோடி மன்னன்’ திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது. அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார். நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன். சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத் தென்றல், சித்தி ஜுனைதா எழுதிய விறுவிறுப்பான குறுநாவல். 1947 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு சுருக்கமான முன்னுரையை எழுதியிருக்கிறார்.

“சரிதைகளையும் சமூகச் சீர்திருத்த நவீனங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் முதலியவைகளையும் புதுமுறையில் எழுதி வெளியிட முயற்சிக் கிறோம். இத்தகைய பணி, ஆண் மக்களை விட, பெண் மக்களுக்கே ஏற்புடையது. ஆண் மக்கள் ஜாதி சமயத்தால் தூண்டப்பட்டு, சரித்திர உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதலாம். பெண் மக்கள் இயல்பாகவே ஆழ்ந்து சிந்திக்கும் மனத்தன்மையும், இரக்கமும் உடையவர்கள். எனவே, புத்துலகம் – புது மாற்றம் விழையும் முஸ்லிம் உலகம் – மறுமலர்ச்சி விரும்பும் தமிழர் தம் நாடு பெண் எழுத்தாளர்களை வரவேற்குமாக!’

மகிழம்பூ நல்ல வரவேற்பைப் பெற்ற மற்றொரு நாவல். மலைநாட்டு மன்னன், ஹலீமா அல்லது கற்பின் மாண்பு, வனஜா அல்லது கணவனின் கொடுமை, பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம் முதலான தொடர்கதைகளையும், சிறுகதை களையும், அவர் காலத்துக்கு ஏற்ற பாணியில் பத்திரிகைகளில் எழுதினார்.

பல பத்திரிகைகளில் கட்டுரை களையும் எழுதிக் குவித்தார் சித்தி ஜுனைதா. பெண்கள் சினிமா பார்க் கலாமா, பாராளப் பிறந்தவள் பேயாட் டம் போடுவதா, இஸ்லாமும் பலதார மணமும், முஸ்லிம் பெண்மணி களும், விவாக விலக்கும் போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகளும், அவற்றில் அடங்கும். பல கட்டுரைகளின் தொகுப்பு நூலாக, “இஸ்லாமும், பெண்களும்’ வெளிவந்தது.

திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு வரலாற்று நூலை, 1946ல் அவர் வெளியிட்டார். பல மகான்களின் வரலாற்றை கட்டுரைத் தொடராக பத்திரிகைகளில் எழுதி வந்தார்.
அவருடைய சொந்த வாழ்க்கை எப்படி?
அவரின், 12 வயதில் திருமணம். கணவர் பகீர் மாலிமாருடன் நான்கைந்து ஆண்டுகளே வாழ்ந்தார். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, விதவையானார். பிறகு, எழுத்தும், படிப்பும், பிள்ளை வளர்ப்புமே சித்தி ஜுனைதாவின் வாழ்க்கையாகி விட்டது.

இவருடைய தம்பிகளும் பிரபலமானவர்கள். ஒருவர், இன்றைய கவிஞர் நாகூர் சலீம்.




பிரபல மான எழுத்தாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக விளங்கிய


                                        ( எம்ஜியார் கையால் தங்க மெடல்) 
தூயவன் – அக்பர்  இன்னொரு தம்பி.
ஆட்டுக்கார அலவேலு, மனிதரில் மாணிக்கம், பொல்லாதவன், வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த், கேள்வியும் நானே பதிலும் நானே, உள்ளம் கவர் கள்வன் போன்ற திரைப் படங்களுக்கு வசனம் எழுதி தயாரிப் பாளராகவும் அவர் இருந்தார். தூயவனின் துணைவியே எழுத்தாளர் கே.ஜெய்புன்னிசா.

“காதலா, கடமையா?’ நாவலையும், மற்ற படைப்புகளையும் ஒரு தொகுப்பாக வெளி யிட்டுள்ளார்  
சித்தி ஜுனைதாவின் தங்கை மகன் நாகூர் ரூமி.

 82 வயதில், (19.3.1998) காலமாவதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரை, சித்தி ஜுனைதா சலிப்பில்லாமல் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தார்.
***

ஜே.எம்.சாலி
Source: http://mudukulathur.com/

-----------------------------------------------------------------------
                                        நீடூர், S.E.A.முகம்மது அலி &ஜே.எம்.சாலி

No comments: