Sunday, May 18, 2014

படியாதவன் படித்தப் படிப்பு..!

இதெல்லாம் எப்படி நடந்தது - 36
படியாதவன்
படித்தப் படிப்பு..!


என்னுடைய தாதா தென்காசி மு.ந. அப்துர் ரஹ்மான் சாஹிப். இன்று அவர்கள் இல்லை. தென் தமிழகத்தில் அநேகமாக அனைவருக்கும் அறிமுகம் ஆனவர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மத்தியில் சொன்ன உடனே புரிந்து கொள்ளக்கூடிய பிரபல்யம் பெற்று இருந்தார்.

பேணுதலான இஸ்லாமிய நெறிமுறை வாழ்வை இறுதிவரை முடிந்த அளவு கடைபிடித்து வாழ்ந்தவர்கள். தமிழறிவு நன்றாகக் கைவரப் பெற்றவர். அவர் இளமைக் காலத்தில் இண்ட்டர்மீடியட் படித்து இருந்தார். ஆங்கில அறிவும் அவருக்கு நிறைந்து இருந்தது.

முஸ்லிம்களுக்கு அன்று இருந்த தனித்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நெல்லையில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

என் தாதாவுக்கு என்னைத் தமிழ்ப் படிக்க வைக்க தீவிர ஆசை இருந்தது. காரணம், திருக்குறலினுடைய 1330 குறட்பாக்களையும் எந்த இடத்திலும் எவ்விதத்தில் கேட்டாலும் உடனே சொல்லக் கூடிய மனன சக்தி அவருக்கு இருந்தது. நன்னூல் இலக்கண அறிவும், நிகண்டுகள் பரிட்சயமும் நிரம்பப் பெற்றவர்.

எங்கள் தாதாவின் மனைவியார் ஜமால் ஃபாதிமா பீவி. இவர் ஆடுதுறை ஜமால் முகம்மது சாஹிபின் தம்பி ஜமால் அப்துல்லா சாஹிபின் முதல் மகளார். ஆடுதுறையின் அருகில் உள்ள திருவாடுதுறை மடத்தின் புலவர் எங்கள் தாதியின் இல்லத்திற்கு வந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். எங்கள் தாதிக்கும் 1330 குறலும் அத்துப்படி. நன்னூலும் நிகண்டுகளும் நன்கு அறிமுகம். சீறாப்புராணத்தில் முழுமையான பாண்டித்தியம் இருந்தது.

இந்த காரணங்களால் என்னைத் தமிழ்ப் புலவராக்க என் தாதா ஆசைப்பட்டார்.

எனக்கு 5 - வது வகுப்பு படிக்கும் வரை தமிழ் எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கவே தெரியாது. எங்கள் மேனேஜ்மென்ட் ஸ்கூலில் எல்லா வகுப்புகளுமே பாஸ் ஆகிவிட்டேன். இது என் தாதாவின், என் தந்தையாரின் கவனத்திற்கு தெரிந்திருக்கவில்லை.

என் தந்தையார் அ.க.ரிபாயி சாஹிப் இந்தியன் யூனியம் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளராகவும், இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் தமிழ் மாநிலத் தலைவராகவும், இந்தியன் யூனியன் தலைவராகவும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இருந்தார்கள்.

என்னுடைய சிறிய தந்தையார் தென்காசி, பஞ்சாயத்திலிருந்து நகர்மன்றமாக மாறிய பின், அதன் முதல் நகர்மன்றத் தலைவராகப் பதவி வகித்தவர். கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார்.

என்னுடைய தந்தையாரின் தங்கையாகிய எங்கள் மாமி காதர் ஹைருன்னிஷா பேகம் நெல்லை ஹைகிரவுண்டில் உள்ள முஸ்லிம் சிறுமியர் கல்வி நிலையத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் பதவி வகித்து இருக்கிறார்.

என் சிறிய தாதா மு.ந. முகம்மது சாஹிப் இந்திய விடுதலைக்கு முன் இருந்த தமிழ் ராஜ்ய சட்டமன்றத்தில் மேலவை உறுப்பினராக இருந்தார். இவர்தான் நெல்லை ஹைகிரவுண்டு முஸ்லிம் அனாதை நிலையத்தின் நிறுவனத் தலைவர். திருநபி சரித்திர நூலின் ஆசிரியர். இவர் மகனார் எம்.ஜமால் முகம்மது சாஹிப் இவரைத் தொடர்ந்து நெல்லை ஹைகிரவுண்டு முஸ்லிம் அனாதை நிலையத்தின் தலைவராகப் பொறுப்பேற்று வாழ்நாள் முழுவதும் நடத்தி வந்தார். இவர் எங்கள் மாமி ஹைருன்னிஷா பீவியின் கணவருமாவார்.

இவ்விதம் அரசியல், கலாச்சாரம், மொழியியல் சம்பந்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த எனக்கு 5 வது படிக்கும் வரை தமிழ்த் தெரியாதிருந்தது அவமானம் தான்.

சென்னையில் ஆறாவது வகுப்பு படிக்க வரும் பொழுதுதான் என்னுடைய இந்த அறியாமையின் ரகசியம் வெளிச்சத்திற்கு வந்தது. என் அண்ணன் முகம்மது பிலால் என் தந்தையாரிடம் போட்டுக் கொடுத்தான்.

அன்றிலிருந்து தினத்தந்தி பத்திரிகையின் தலைப்புகளை என் தந்தையார் அ.க.ரிபாயி சாஹிப் முன் படிக்க வேண்டும். அநேகமாக ஒரு பக்கத்துக்கு 10ல் இருந்து 15 குட்டுக்கள் என் தலையில் விழும். எத்தனை குட்டு விழுந்தால் என்ன என் தந்தையாரால் என்னை ஒழுங்காகத் தமிழ்ப் படிக்க வைக்க முடியவில்லை.

நான் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளியில் 6வது சேர்க்கப்பட்டு இருந்தேன். எனக்குத் தமிழ்ச் சொல்லித்தர காயல் பட்டினம் வள்ளல் பி.ஏ.காக்கா ( முகையதீன் தம்பி) சிபாரிசினால் மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள இந்து முஸ்லிம் உயர்நிலைப் பள்ளியில் செகண்டு கிரேடாக ஆசிரியராகப் பணி புரிந்து வந்த ஆசிரியர் குருசாமி அவர்களை எனக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

அவரும் வந்து போராடிப் பார்த்தார். அவர் அதுவரை கண்ட மாணவர்களில் என்னிடம்தான் தோற்றுப் போனார். என் தந்தையாரிடம் “ஐயா, இவனுக்கு ட்யூஷன் எடுக்க உங்களிடம் வாங்கும் சம்பளம் விரயம். என் உடலில் ஒட்டாது. இன்றிலிருந்து நான் நின்று கொள்கிறேன்.” என்று தன் தோல்வியால் என் ஆசிரியர் துவண்டு போனார்.

என் தந்தையாருக்கு ஒரு யோசனை வந்து விட்டது. என்னை அவருக்குத் தெரிந்த ஒரு கார் மெக்கானிக் ஷெட்டில் சேர்த்து விடுவது என்று முடிவு கட்டி விட்டார். என் தாயாருக்கு இது பெரும் மன வேதனையைத் தந்து விட்டது. “அவனை அப்படியெல்லாம் சேர்க்க வேண்டாம். அவன் எப்படியும் படித்து விடுவான்” என்று தடுத்து என் மெக்கானிக் தொழிற் கல்வியைக் கெடுத்து விட்டார்கள்.

அதுவரை வராத ஒரு வைராக்கியம் எனக்குள் வந்தது. இந்த காலகட்டத்தில் கவிஞர் தா.காசிம் என்னை அரவணைத்து தமிழ்ச் சொல்லித்தர ஆரம்பித்தார். எனக்கும் கவிஞர் தா.காசிமுக்கும் ஒரு அடிப்படை சமநிலை இருந்தது. கவிஞர் தா.கா வும் 5 வது வரைப் படித்தவர்தான். ஆனால் என் தந்தையாருக்கு 6 வயது மூத்தவர்.

என் பள்ளிப் படிப்பு முடிந்தது. கவிஞர் தா.கா. வின் மாணவனாக இருந்து தமிழ்ப் படிக்கத் தொடங்கினேன். இந்த 4 , 5, ஆண்டுகள் வெறித்தனமானத் தமிழ்ப் படிப்பு. இதுவரை எனக்குத் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர்கள் எல்லாம் என்னிடம் தோற்றுப் போனார்கள். 5 வது படித்த கவிஞர் தா.கா. எனக்கு ஆசிரியராக வெற்றிப் பெற்றார்.

எந்த அளவுக்கு என்றால், இந்த 4, 5, ஆண்டுகளில் சங்க இலக்கியங்களை கற்றுக் கொண்டு இருந்தேன். ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூற்களையும் படிக்கத் தொடங்கி இருந்தேன்.

என்னுடைய தாதா நெல்லையில் இருந்தார்கள். இந்தக் கற்றறிதலோடு என் தாதாவைச் சந்தித்தேன். அவர்களோடே தங்கி விட்டேன். என் தாதாவுக்கு என்னுடைய தமிழ்ப் படிப்புத்தரம் கண்டு பேரானந்தம்.

நெல்லை ஜான்ஸ் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றப் பேராசிரியார் ஆ.ஜெபரத்தினம் ஐயா அவர்களிடம் என்னை எங்கள் தாதா ஒப்படைத்தார்கள்.

எங்கள் பேராசிரியர் அவர்கள் தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.

எலமென்டரி ஸ்கூலிலும் ஒழுங்காகக் கற்றறியாதவன், உயர் நிலைப் பள்ளியைக் கண்டறியாதவன், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவனானேன்.

மூன்றாண்டுகள் புலவர் படிப்பில் முதல் மாணவனாகவும் நான்காம் ஆண்டு பல்கலைக் கழகத் தமிழ்த்துறை முதல் மாணவனாகவும் தேர்வானேன். பல்கலைக் கழகம் ஒரு பவுன் தங்கப் பதக்கம் தந்தது. இந்தப் பதக்கம் எம்.ஜி.ஆர் தந்த பதக்கம்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வெளியே என்னோடு தொடர்பு கொண்ட சிலரைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்.


                                                 ஆக்கம் Hilal Musthafa

No comments: