Saturday, November 21, 2020

வணிகமும் தமிழ் இஸ்லாமிய சமூகமும்..! பகுதி 3 #நிஷாமன்சூர்

வணிகமும் தமிழ் இஸ்லாமிய சமூகமும்..!


#நிஷாமன்சூர்

பகுதி 3

"நாலுபேத்துக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்ல"

நமது சுய நலத்துக்காக இந்த வாசகத்தை பலமுறை நாம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இதன் ஆதார நோக்கம் மக்கட்சமூகம் பயனுற உழைப்பதுதான் அறம் என்கிற உலகளாவிய நீதியைச் சொல்லுவதுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு மூத்த வணிகர் பேக்கரிகளுக்கான மூலப்பொருள் வணிகத்தை நடத்திக் கொண்டிருந்தார். மிகச்சிறப்பாக வணிகம் நடந்தது. இவரைப் பொறுத்தவரை பெரிய திறமைசாலி என்று சொல்லமுடியாது. ஆனாலும் அடிப்படை வணிக தர்மத்தைப் பேணி நடந்து கொள்வார். இவரது வீடு எப்போதுமே கலகலப்பாக இருக்கும். இரவு உறங்கச்செல்லும் முன் அவரது தாயாரிடம் பத்து நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் உறங்கச் செல்வார். வீட்டிலும் சாப்பாட்டு நேரத்துக்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போக முடியாது. ஆதரவற்ற உறவுக்காரப் பெண்கள்  பலரையும் வீட்டில் வைத்துப் பராமரித்து அவர்களின் திருமணத்தையும் பிரதிபலன் எதிர்பாராமல் முன்னின்று நடத்தினார். இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் ஹஜ்ஜுக்குச் சென்றபோது ஊரே திருவிழாக்கோலம் பூண்டு ஊர்வலமாகச்சென்று ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தது.

மிகச் சமீபத்தில் அந்த வணிகரை சந்தித்து  உரையாடிக் கொண்டிருந்தபோது குடோனில் பழைய கலகலப்பு இல்லாமற்போனதை உணர்ந்தேன். பணியாட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டிருந்தது.

"வியாபாரம் எப்படி இருக்குங்க மாமு" என்று மெல்ல வினவியபோது அவர் மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தார்.

"அப்பல்லாம் அம்மா இருந்தாங்க அதனால வீட்டுக்கு எப்பவும் நிறைய கூட்டம் வரும்.அதுவும் இல்லாம எத்தீமான புள்ளைங்க இருந்தாங்க.அவங்களுக்கு எல்லாம் சேத்து அல்லாஹ் நிறைய படியளந்தான். இப்போ நானும் உங்க மம்மாணியும் ரெண்டு பிள்ளைகளும் மட்டுந்தான் இருக்கோம்.அல்லாஹ் அதுக்கு ஏத்தமாதிரி அளவா படியளக்கறான். அல்ஹம்துலில்லாஹ் குறை ஒண்ணுமில்ல. அப்பல்லாம் ஒருவேளை சாப்பாட்டு நேரத்துக்கு குறைஞ்சபட்சம் பதினைஞ்சு பேர் சாப்பிட்டோம். அதுக்கேத்த மாதிரி கொடுத்தான். இப்ப நாலு அஞ்சுபேர் சாப்பிடறோம் அதுக்கேத்த மாதிரி கொடுக்கறான்" என்று.

இதிலிருந்து நாம் உணரும் செய்தி,

பயனுறும் நபர்களின் எண்ணிக்கை அதிகமானால் அந்த வணிகத்தில் இறையருள் பொழியப் படுகிறது.

நாமும் ஏன் பயனுறும் நபர்களை அதிகப்படுத்தி இறைவனின் பேரருளுக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ளக்கூடாது ?

ஒரு மனிதனுக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் ஒரு உடம்பும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும்தான் இருக்கிறது. ஆனால் அளப்பரிய ஆற்றல் வாய்ந்த மூளையும் சிந்திக்கும் திறனும் உள்ளது. இதன் மூலம் நம் திட்டப்படிப் பணிபுரியும் ஆயிரம் கரங்களை உருவாக்க முடியும். இந்திய தேசத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்ட ரிலையன்ஸ் நிறுவனமே ஆனாலும் அதன் தலைவர் முகேஷ்அம்பானி  பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தாலும்  அதன் பிரதிநிதிகள் தமது பொருட்களை அல்லது சேவையை விற்க நமது அலுவலக வாசலில்தான் காத்துக்கிடக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சரி,

நமது நிறுவனத்தின் கிளைகளைப் பரப்பி விட்டோம்.ஒவ்வொரு கிளைக்கும் ஒரு மேலாளரையும் கண்காணிப்பாளர்களையும் ஃப்ளோர் மேனேஜர்களையும் நியமித்து விட்டோம். ஒவ்வொருவருக்கும் நல்ல சம்பளமும் நிர்ணயித்து விட்டோம். தானாக எல்லாம் நடந்து விடுமா ???

வருடாவருடம் விற்றுமுதலை உயர்த்தி லாபத்தை அதிகரித்துக் கொண்டு வந்து நம்மிடம் சேர்த்து விடுவார்களா ??

ஒருக்காலும் நடக்காது.

ஒரு வணிகத்தின் மொத்த வளர்ச்சியின் சாவியே முடிவெடுக்கும் திறன்தான். நாம் சிந்திப்பதைச் செயல்படுத்தும் ஆட்களை நம்மால் உருவாக்க முடியுமே அன்றி நம்மைப்போலவே சிந்திக்கும் ஆட்களை நம்மால் உருவாக்கவே முடியாது. ஒருவேளை மிக அபூர்வமாக அப்படி ஒருவர் சிந்தித்தார் எனில் அவரும் ஒரு முதலாளியாகி விடுவாரே அன்றி நம்மிடம் பணிபுரிந்து கொண்டிருக்க மாட்டார்.

எனவே ஓரளவு திறமை வாய்ந்த ஆட்களை பொறுக்கி எடுத்து உரிய பொருப்புகளை அளித்து அதனைச் சிறிதும் தொய்வின்றி கவனிப்பதன் மூலம் ஒரு முழுமையான வேகமும் துடிப்பும் மிகுந்த குழுவை நம்மால் உருவாக்க முடியும். தினமும் பல்துலக்குவது போல தினம்தினம் குளிப்பதுபோல ஒரு நொடியும் இடைவேளை இன்றி அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் சமூகத்தில் உன்னிப்பாக கவனித்துப் பார்த்தீர்கள் எனில் பல்துறை விற்பன்னர்கள் என்று அறியப்பட்ட பலரும் எந்த ஒரு காரியத்தையும் உருப்படியாகச் செய்திருக்க மாட்டார்கள். மகாகவி அல்லாமா இக்பால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்,

"ஒற்றைச் சிந்தனையுடன் இயங்கும் மனிதனே இலக்குகளை அடைகிறான்.' நாம் ஊன்றி கவனித்தோமெனில் ஒரு துறையில் பெரும் சாதனையைப் படைத்தவர்கள் இன்னொரு துறையில் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்களாக இருப்பார்கள். தமிழ்த்தாத்தா என்று புகழப்படும் .வே.சாமிநாதய்யர் ஆங்கிலத்தில் பாஸ்மார்க் கூடப் பெறாமல் தோல்வியடைந்தவர் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? பல்துறை விற்பன்னர் என்பதெல்லாம் சும்மா சீன் காண்பிக்கத்தான் உபயோகப்படும். தமது துறை/தொழில்/இலக்கு எதுவென்று ஆராய்ந்து அறிந்து அந்த ஒற்றை இலக்கை நோக்கி நகர்பவர்களே பெறும் சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள்.

தலைமைப் பண்பு என்பது வெறுமனே கிரீடங்களைச் சுமந்துகொண்டு திரிவது அல்ல.

ஒரு அமைப்போ இயக்கமோ நிறுவனமோ துவங்கும்போது அனைவருக்குமே ஒரு உத்வேகம் இருக்கும்.லட்சிய இலக்கு இருக்கும்.அதனால் எவ்வித மனவேறுபாடுகளுமின்றி உழைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வந்து நிற்கும்போது சில வெற்றிகளுக்கான கிரீடத்தை  யார் சுமப்பது என்கிற அளவில் கருத்து வேறுபாடுகள் தலையெடுக்கும்.

அந்த நேரத்தில் பக்குவமாகவும் அரவணைப்புடனும் தலைமைப் பண்புடனும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஒரு தலைவனுக்குத்தான் உள்ளதுதோல்விகளை சுமைமாற்றி வைப்பதும் வெற்றிகளை தன் தலையில் சூட்டிக்கொள்வதும் ஒரு நல்ல தலைவனுக்கு அழகல்ல.

வெற்றியைப் பகிர்ந்தளித்தும் தோல்விகளை சிரமேற்றியும் உண்மையான நேசத்துடனும் பரந்த சிந்தனையுடனும் அணுகி அரவணைப்பவனே வெற்றியைநோக்கி முன்னகர்பவன் ஆவான்.

அதையும்மீறி ஒரு சிக்கல் வந்துவிட்டாலோ நிறுவனமோ இயக்கமோ இரண்டுமூன்று பட்டாலோ புலம்பித் தள்ளாமலும் நான் அப்படிச் செய்தேனே இப்படிச்செய்தேனே என்று அழுது அரற்றிக் கொண்டிருக்காமலும் அடுத்த கட்டத்தை நோக்கி தீர்க்கமான சிந்தனையுடன் நகர்பவனே தலைமைக்கு மிகப்பொருத்தமான ஆளாக இருக்க முடியும்.

#இன்னும் சிந்திப்போம்

#இந்தக் கட்டுரைத் தொடரை முன்வைத்து வணிகம் சார்ந்த உரையாடலை முன்னெடுக்கலாம் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது. ஆர்வமுள்ளோர் தங்கள் கேள்விகளை எழுப்பலாம்.

நிஷா மன்சூர்


No comments: