Sunday, November 22, 2020

#தொட்டால்_தொடரும்_19 #குறுந்தொடர் அபு ஹாஷிமா

 தொட்டால்_தொடரும்_19

                 #குறுந்தொடர்

                 அபு ஹாஷிமா

சவூதி பிளாஸ்டிக் பேக்டரியில் வேலைக்குச் சேர்ந்து ஹவுஸ் கீப்பராக வேலைபார்த்து அதன் பிறகு மெஷின்

ஆப்பரேட்டராக பனி உயர்வு பெற்று

ஒரு மாதமே வேலை செய்து முடித்திருந்த ஏழாவது மாதத்தின் முதல்நாள் ......

அன்றுதான் சம்பள நாளும்கூட .

அந்தநாள் ....

எல்லோர் முகத்திலும் ஒரு சந்தோஷ சிரிப்பு வந்து ஒட்டிக் கொள்ளும் நாள் .

அந்த நாள் வியாழக்கிழமையாக இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.

பெருநாள் மாதிரி கொண்டாட்டமாகத்தான் இருக்கும் .

இந்த நாளும் வியாழக்கிழமையாக

அமைந்து விட்டதில் எல்லோருக்கும்

ஏக குஷி.

சம்பளம் வாங்கும் நாட்களில் அப்பார்ட்மெண்டே குதூகலமாக இருக்கும். எல்லா ரூம்களிலும் கறிமணம் வீசும். புதுப் படங்கள் போட்டு அதகளம் பண்ணிக் கொண்டிருப்பார்கள். வெக்கேசன் போகக்கூடிய ஆட்கள்

நண்பர்கள் சகிதம் தம்மாம் மார்கெட்டுக்குப்போய் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவார்கள். பெற்றோருக்கும் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் புத்தாடைகள் வாங்கி வந்து காட்டுவார்கள்.

வேறுசிலர் பக்கத்திலிருக்கும் ஊர்களில் வசிக்கும் நண்பர்களையோ உறவினர்களையோ பார்க்கக் கிளம்பி விடுவார்கள். வெள்ளிக்கிழமை அங்கேயே தங்கிவிட்டு இரவில்தான்

ரூமுக்கு வருவார்கள்.

அப்போது சவுதியில் அரசுப் பேருந்து அறிமுகமாகி ஓடிக் கொண்டிருந்தது.

எங்கே ஏறி எங்கே இறங்கினாலும் இரண்டு ரியால் கட்டணம்.

கதீப் போன்ற ஊர்களுக்கு அந்த பஸ் வசதிகூட கிடையாது. டேக்சியில்தான்

போக வேண்டும்.

அதற்கு ஏகப்பட்ட பணம் கேட்பார்கள்.

டவுணுககுப்போவதற்கு இரண்டு ரியாலைக் கூட கொடுக்க முடியாமல் நாங்களெல்லாம் கடைவீதிக்கு நடந்து போய் நடந்தே வருவோம்.

அந்த சம்பள நாளும் பல எதிர்பார்ப்புகளோடு  பரபரப்பாக

நகர்ந்து கொண்டிருந்தது.

பகல் பன்னிரண்டு மணியளவில் சூப்பர்வைசர் டோனி ஒவ்வொருவரையாக அழைத்து கம்ப்யூட்டரில் பிரின்ட் செய்யப்பட்ட சம்பளக் கவரைக் கொடுக்க ஆரம்பித்தான்.

சம்பளம் வாங்கி வந்தவர்களுக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏற்கனவே பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட சுய விவரக் குறிப்பின் அடிப்படையில் அவர்களின் சீனியாரிட்டி மற்றும் பணித் தகுதிகளின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருந்தது.

பழைய ஆட்களுக்கு முன்னூறு முதல் நானூறு ரியால்வரை சம்பளம் கூடுதலாக வழங்கப்பட்டது.

சம்பளக் கவரைப்போலவே  அவர்களின் முகங்களிலும் ரொம்பவே பெருமையும் சந்தோஷமும் கனமாக வந்து ஒட்டிக் கொண்டது.

புதிதாக வந்த எங்கள் குரூப்பைச் சேர்ந்தவர்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட்

என்ற பெயரில் கொஞ்சம் சம்பளத்தை

கூட்டித்தந்தார்கள். எல்லோருக்குமே அது ஆச்சரியமாக இருந்தது.

665 ரியால் சம்பளத்துக்குப் போன எல்லோருக்கும் முப்பதுமுதல் ஐம்பது சதவிகிதம்வரை சம்பளம் உயர்த்தப்பட்டது.

ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே ஊதிய உயர்வு தருகிறார்கள் என்றால்

உண்மையிலேயே அது நல்ல கம்பெனிதான் என்று நாங்கள் சந்தோஷப்பட்டோம்.

வேலைக்குச் சேர்ந்து எழு மாதமே ஆன புதிய ஆட்களுக்கு நூற்றைம்பது முதல் இருநூற்றைம்பது ரியால் வரை சம்பள உயர்வு கிடைத்தது.

அதில் ஆப்பரேட்டராக இருப்பவர்களுக்கு

250 ரியாலும்

லேபராக இருப்பவர்களுக்கு 150 ரியாலும் கூடுதலாகக் கிடைத்தது.

எனக்கும் ஏதாவது கூடுதலாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு

நானும் ஆவலோடு காத்திருந்தேன்.

அப்போதுதான் இடிபோன்ற அந்த செய்தியை என்னிடம் சொன்னான்

ஜார்ஜ் வர்கீஸ்.

ஜார்ஜ் வர்கீஸ் என்னுடைய முன்னாள் ஆப்பரேட்டர். அவனது மெஷினில்தான் நான் ஆரம்பத்தில் அவனுக்கு ஹெல்ப்பராக இரண்டு மாதம் வேலை பார்த்தேன். அதன் பிறகு ஹவுஸ் கீப்பராக மூன்று மாதத்திற்கும் மேல் வேலை பார்த்து ஒரு மாதமாகத்தான் மெஷின் ஆப்பரேட்டராக வேலை

பார்த்து வந்தேன்.

" இத்தனை மாசம் கிளீனராயிட்டு இருந்த உனக்கு சம்பளம் கூடுதலாகக் கிடைக்காதுடா . இன்னும் கொறைய மாசங்கள் மெஷினில் வேலை பார்த்து

புரடக்சன் கொடுத்தால் மாத்திரமே சம்பளம் கூடுதலாயிட்டு கிட்டும் " என்று பீதியை கிளப்பினான். நானும் மனசை தேத்திக் கொண்டேன்.

என்னோடு வந்த நண்பர்கள் சம்பள உயர்வு கிடைத்த சந்தோஷத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். நானும் எந்த மன மாச்சரியமும் இல்லாமல் அவர்களோடு சந்தோஷத்தை பரிமாறிக் கொண்டேன்.

எல்லோருக்கும் சம்பளம் கொடுத்து முடித்த பிறகு கடைசியாக என்னை அழைத்தான் டோனி. நானும் போய் சம்பளக் கவரை வாங்கி அதை மடித்து பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும்போது

#கவரைப்பாருடா_என்றான்_டோனி. எடுத்துப் பார்த்தேன் ...

என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.

என்னுடைய சம்பளம் 665 ரியால்தான். இது இப்போது 1150 ரியாலாக

உயர்ந்திருந்தது.

கிட்டத்தட்ட 90% சம்பள உயர்வு..உண்மையிலேயே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

டோனி இருக்கையிலிருந்து எழுந்து வந்து சந்தோஷம்தானே என்றான்.

என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கண்கள் நிரம்ப நீரோடு

அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

அவன் நேசத்தோடு என் தோளில் கையைப்போட்டு

" வா ...வந்து பஸ்ஸாமுக்கு நன்றிசொல் " என்று அழைத்துச் சென்றான்.

இருவரும் பசஸ்ஸாமின் கேபினுக்குச் செல்வதைப் பார்த்த என்னுடைய செக்சன் சகாக்கள் வேறுமாதிரி கற்பனை செய்து கொண்டார்கள்.

அடேய் இங்கே வாடான்னு நீ சொல்லி அனுப்பி இருந்தா நானே ஓடி வந்து இருப்பேனே தெய்வமே... “ என்று வடிவேலு ஒரு படத்தில் டயலாக் பெசுவதைப்போல எண்ணி ...

பஸ்ஸாமிடம் சம்பள உயர்வு கேட்டு கெஞ்சுவதற்காக நான் டோனியை அழைத்துக்கொண்டு சென்றேன் என்று சிலர் பேசிக் கொண்டதாக  நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள்.

பஸ்ஸாமைப் பார்த்து அவருக்கும் நன்றி சொன்னேன். ரொம்ப உற்சாகத்தோடு

என் கையைபற்றிக் குலுக்கி எனக்கு வாழ்த்துக்களைச் சொன்னார் அந்த உயர்ந்த மனிதர்.

செக்சனுக்கு திரும்பி வந்தேன்.

சொல்லி வச்ச மாதிரி ஜார்ஜ் வர்கீஸ் ....  "அடேய் அவன்மாருக்கு நீ என்ன மனியடிச்சாலும் சம்பளம் கூடக் கிடைக்காதுடாஎன்றான்.

நான் ரொம்ப சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கண்களையும் துடைத்துக் கொண்டேன்.

அவனுக்கே மனசு பொறுக்கவில்லை.

" கரையாதடா... செலப்போ ரெண்டு மாசம் கழிச்சு கிட்டும் . சமாதனப்படு " என்று ஆறுதல் சொன்னான்.

அவனது நல்ல மனசுக்கு நன்றி சொல்லிவிட்டு சம்பளக் கவரை அவனிடம்தான் முதலில் காட்டினேன்.

ஜார்ஜ் வர்கீஸ் அரண்டு விட்டான்.

செக்ஷனிலேயே அதிக சம்பள உயர்வு எனக்குத்தான்.

வழக்கம்போல் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி கடுப்படிக்க

நான் சிரித்துக் கொண்டே அவனை கடந்து சென்று விட்டேன்.

மற்ற நண்பர்களோடும் என் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

அவர்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.

நான்குமாதம் நான் கட்டிக் காத்த பொறுமைக்கு இறைவன் தந்த கூலி இது என்று எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன்.

அல்ஹம்துலில்லாஹ் .

அப்புறமென்ன ...

வழக்கம்போல் ரூமுக்கு வந்ததும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.

இரவு உணவு வழக்கத்தைவிட ருசியாக இருந்தது.

ஒரே குறை ...

அந்த சந்தோஷத்தை உடனே போன் பண்ணி வீட்டில் சொல்ல எந்த வசதியும் அப்போது இல்லை என்பதுதான்.

1980 ல் நடந்த இந்த நிகழ்வை நினைக்கும்போதெல்லாம் தானாகவே சந்தோசம் வந்து ஒட்டிக் கொள்ளும்.

சம்பளம் வாங்கிய பிறகு அதை உடனே வீட்டுக்கு அனுப்பவும் முடியாது.

தம்மாம் டவுனில் அல்ராஜி பேங்க் உண்டு. அங்கேபோய் வரிசையில்

கால்கடுக்க நின்று டிராப்ட் எடுத்து அதன்பிறகு போஸ்ட் ஆபிசுக்குப்போய்

அங்கேயும் காத்து நின்று வீட்டுக்கு ரிஜிஸ்தர் போஸ்டில் அனுப்ப வேண்டும் .

வேலை நாட்களில் முதல் ஷிப்ட் வேலை இருந்தால் அந்த வாரம் முழுக்க பணம் அனுப்ப முடியாது. செகண்ட் ஷிப்ட் வேலை நாட்களில்தான்  காலையிலேயே எழுந்துபோய் பேங்கில் டிராப்ட் எடுக்க முடியும். அங்கே வேலை செய்யும் அரபிகள் லேசில் டிராப்ட் தரமாட்டார்கள்.  மற்ற அரபிகளோடு வளவளவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள்.

நாம் நேரம் ஆகிறதென்றால் மிகுந்த கோபத்தோடு நம்மிடம் சண்டைக்கு வருவார்கள். சில அரபிகள் உனக்கு

டிராப்டே தரமாட்டேன் என்று கூறி

ரியாலை எடுத்து வீசி விடுவார்கள்.

அவர்களின் அலட்சியத்தையும்

அவர்கள் தரும் அவமரியாதையையும்

பொறுத்துக்கொண்டு வரவேண்டும்.

நம்முடைய கஷ்டங்களை அங்கேயுள்ள ஒட்டகங்களிடம் சொன்னாலாவது

நமக்காக இரக்கப்படும்.

அவர்களும் ஒரு காலத்தில் நம்மைப்போல் இவர்களிடம்

கஷ்டப்பட்ட ஜீவன்கள்தான்.

அப்படி கஷ்டப்பட்டு எடுத்து வரும் டிராப்டுகளை கவரில் வைத்து

போஸ்ட் ஆபீசுக்குப் போனால் அங்கே

வேலை செய்யும் அரபிகளுக்கு

தாங்கள் ஷேக் என்ற நினைப்பு.

ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள்.

வேலையும் தெரியாது.

ஒரு கடிதத்தை ரிஜிஸ்டர் செய்வதற்கு

ஒருமணி நேரம் ஆகும்.

பத்துபேர் வரிசையில் நின்றால்

ஐந்து பேருக்கு அனுப்பிவிட்டு ஆபீசை

பூட்டி விடுவார்கள்.

நாங்கள் செய்த புண்ணியமோ என்னவோ ...

எங்கள் தங்குமிடத்தின் அருகாமையிலுள்ள போஸ்ட் ஆபீசுக்கு

தேரிழந்தூரிலிருந்து ஒருவர் வேலைக்கு வந்து சேர்ந்தார்.

அவர் பெயர் ஞாபகமில்லை.

என்னுடைய அறைத்தோழர்

ஹாஜிமுகம்மதுவின் சித்தப்பா அவர்.

நாங்கள் அவரிடம் கடிதங்களை ஒப்படைத்து விடுவோம்.

வர் அழகான முறையில் அவற்றை

ரிஜிஸ்தர் செய்து வேலைமுடிந்து போகும்போது எங்களிடம் ரசீதை தந்துவிட்டுப் போவார்.

கம்பெனியில் எனக்குத்தந்த 1150 ரியாலுடன் நான் வெளியே பார்ட் டைமாக பார்த்த வேலையில் 400 ரியால்

கிடைத்தது.

மொத்தம் 1550 ரியால்.

எங்கள் எல்லோருக்கும் ஓரளவு நல்ல சம்பளம் கிடைத்ததால் நல்ல ஆகாரங்கள் உண்ண ஆரம்பித்தோம்.

கொஞ்சம் தெம்போடும் நம்பிக்கையோடும் வாழ்க்கையை எதிர்கொண்டோம்.

1980 ல் அது நல்ல சம்பளம்.

#1980ஆம்_ஆண்டு_ஒருபவுன் #தங்கத்தின்_விலை

#ஆயிரம்_ரூபாய்க்கும்_கொஞ்சம்_குறைவு.

24 கேரட் 10கிராம் தங்கம் சராசரியாக 1,330 ரூபாய்க்கு விற்பனையானது.

நாங்கள் வேலைபார்த்த அதே காலகட்டத்தில் 300 ரியாலுக்கும்

400 ரியாலுக்கும் வந்து கஷ்டப்பட்டவர்கள் ஏராளம்பேர்.

வேலை அதிகம் . சம்பளம் சொற்பம் என்ற நிலையில் அவர்கள் பட்ட துன்பங்கள் சொல்லில் அடங்காது.

அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன் .

இன்ஷா அல்லாஹ் ...

தொட்டால் தொடரும்

#தொடரும்

#அபு_ஹாஷிமா

முதல் படத்தில் ...

ஹாஜிமுகம்மது ... தேரிழந்தூர்

அப்துல்லாசா .... திருப்பந்துருத்தி

அடுத்த படத்தில் ...

ஃபாரூக். ... கும்பகோணம்

செய்யது அலவி. ... மலப்புரம்

மஜீத்பாய் .... கொடிக்கால் பாளையம்







Abu Haashima



No comments: