வணிகமும் தமிழக இஸ்லாமிய சமூகமும்(பகுதி-2)..!
#நிஷா மன்சூர்
“வாணிபஞ் செய்வார்க்கு
வாணிபம் பேணிப்
பிறவும் தமற்போற் செயின்”
வாணிபம் செய்பவர்கள்
வாணிபத்தின் தர்ம நியாயங்களை முறையாகப் பேணி நடப்பதுடன் தமது பொருட்களை எவ்வளவு பாதுகாப்பாகக் கையாள்கிறோமோ
அதேபோலப் பிறரது பொருட்களையும் பாதுகாப்பாகக் கையாள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
கடந்த பகுதியில் தமிழ் இஸ்லாமிய வணிகர்கள் மத்தியில் தற்பொழுது நிலவும் தேக்க நிலையைக் குறித்துப் பேசினோம். அந்தத் தேக்கநிலை உருவாகுவதன் காரணிகளையும் அதனைப் போக்குவதற்கான தீர்வுகளையும் குறித்து இப்போது பேசலாம்.
இஸ்லாமிய வணிக அறம் என்பது ஆழ்ந்த பொதுநோக்கையும் சமூகநீதியையும் கொண்டது.
உதாரணமாக நீங்கள் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கிறீர்கள். உங்கள் கடைக்கு எதிர்புறமாக இன்னொரு மளிகைக்கடை இருக்கிறது. உங்கள் கடையில் காலையில் கடைதிறந்தது முதல் மதியம் வரை கணிசமான வியாபாரம் நடந்திருக்கிறது. ஆனால் எதிர்புறக் கடையில் இன்னும் முதல் போணிகூட நடக்கவில்லை. இந்நிலையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் அடுத்து வரும் உங்கள் வாடிக்கையாளர் கேட்கும் பொருள் உங்களிடம் இருந்தாலும்கூட "அது இல்லையே அண்ணே,எதிர்த்த கடையில் இருக்கு நீங்க அங்க வாங்கிக்கங்கண்ணே" என்று அவரை எதிர்த்த கடைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இதுதான் இஸ்லாம் கூறும் வணிக தர்மம்.
இதுபோல நம்மில் எவரேனும் நடந்திருக்கிறோமா ?
குறைந்த பட்சம் நினைத்தாவது பார்த்திருக்கிறோமா ?
நிற்க,
"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து"
என்பதுபோன்ற பழமொழிகளைக்
கேட்டவாறே வளர்ந்த சமூகம் நம்முடையது. ஆனால் பெருவணிகச் சூத்திரமோ "அத்தனைக்கும்
ஆசைப்படு" என்கிறது.
அவ்வைப்பாட்டிகூட தன் ஆத்திச்சூடியில் "பெரிதினும் பெரிது கேள்" என்கிறாள்.
வணிகம் என்பது மாபெரும் கார்ப்பரேட் சூதாட்டமாக மாறிக்கொண்டு வரும் இந்நவீன காலகட்டத்தில் எளிய வெற்றிகளில்
திருப்தி கொண்டு விடும் மனோநிலை நிச்சயமாக தேக்கநிலையையே அதிகப்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் போட்டிகள் மலிந்த இந்நவீன யுகத்தில் கடந்த வருடத்தைவிட இரண்டு மடங்கு உழைத்தால்தான் கடந்தவருட லாபத்தையே ஈட்டமுடியும். ஆகவே ஒருவர் போதும் என்று எண்ணும்போது
அந்த வணிகம் தேய்மானம் அடைந்து குறையுமே அன்றி அதேநிலையில் ஒருக்காலும்
நீடிக்காது.
சொந்த ஊரில் வணிக வாய்ப்பு இல்லாத காரணத்தால் நாம் எங்கு வாய்ப்புகள் உள்ளனவோ அதனைத்தேடிச்
செல்கிறோம். ஒரு பதினைந்து இருபது வருடங்கள் கடுமையாக உழைத்து ஒரு நல்ல நிலைக்கு வந்து விடுகிறோம். ஓரளவு வசதி சொந்த பங்களா,கார்,உபரிச் சொத்துகள் என்றான பின்னர் ஊரில் மரியாதை மதிப்பு உயர்கிறது. விலகி நின்றிருந்த உறவினர்கள் மொய்க்கத் துவங்குகிறார்கள்.ஒரு திருமணத்திற்கு
மூன்று நாட்கள் ஊரில் தங்கிவிடுகிறோம்.காலைச்சாப்பாடு
அவர் அன்போடு அழைத்தார் எனில் மதியச் சாப்பாட்டுக்கு இவர் அடம்பிடித்து
அழைத்திருப்பார். சொந்த ஊர், சமூகமதிப்பு,உறவுசார் மதிப்பீடுகளில் ஏற்படும் மயக்கம் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக எல்லா சுகபோகங்களுக்கும் அடிமையாகி விடுகிறோம்.
நிறுவனமே கதி என்று கிடந்தவர்கள் ஊரே கதியென்று கிடக்கத் துவங்கிவிடுகிறோம். அதற்கு ஏற்றாற்போல்
"பசங்க தலையெடுத்துட்டாங்க இல்ல, இனி ஹஜ்ஜுக்குப் போனமா, வருஷாவருஷம்
ஒரு உம்ரா செஞ்சமா,அஞ்சு வேளை பள்ளில தொழுதமா,மாசத்துல மூணுநாள் தப்லீக் ஜமாத்துல போய் தாவத் செஞ்சமான்னு
ரிலாக்ஸா இருங்க பாய்" என்று ஒரு பால்யகால நண்பர் தாலாட்டு பாடுவாராக இருக்கும்.
ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்
செல்லக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அது மேம்பட்ட இறையியல் செயல்பாடாகவும்
தக்வாவை நோக்கி நம்மை நகர்த்துவதாகவும் இருக்கவேண்டுமே
அன்றி வெறுமனே பெருமையின் குறியீடாக ஆகிவிடக்கூடாது
என்று சொல்கிறேன். ஒரு நிறுவனத்தின் தலைவர் அல்லது மேலாண்மை இயக்குனர் என்பவர் ஒற்றைத் தனிமனிதர் அல்ல. அவர் ஒட்டுமொத்த நிறுவனத்தின் எஞ்சினாகவும்
எரிபொருளாகவும் இருக்கிறார்.
அவரது வேகமும் சமயோசித,ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையு எப்படி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருக்கிறதோ அதேபோல அவரது நிதானமும் செயலின்மையும் கவனச் சிதறலும் நிறுவனத்தின் வேகத்திற்குத்
தடையாக இருக்கும்.
இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய பின்னர் போதும் என்கிற மனோநிலை ஏற்படுவது சரியானதுதானே,எத்தனை காலம் வணிகம் அலைச்சல் என்று ஓடிக்கொண்டிருப்பது, பள்ளிவாசல் சமூகம் சார்ந்து வாழ்வை அமைத்துக் கொள்வதில் என்ன தவறு...... இதுபோன்ற கேள்விகள் எழுவது நியாயமானதுதான். ஆனால் அகில உலகத்துக்குமான உண்மை ஒன்று இருக்கிறது. அது மிக இலகுவான உண்மையும் கூட,
1. எத்தனை கார்கள் வைத்திருந்தாலும் நாம் ஒரு நேரத்தில் ஒருகாரில் மட்டும்தான்
பயணிக்க முடியும்.
2.எவ்வளவு பெரிய மாடமாளிகையில் நூறு படுக்கையறைகளை
அமைத்துக் கொண்டாலும் நாம் ஒரே நேரத்தில் ஒரு அறையில்/ஒரு படுக்கையறையில்தான்/ஒரு மெத்தையில்தான் படுத்துறங்க முடியும்.
3.உலகத்திலேயே மிகச்சிறந்த
உணவாக இருந்தாலும்
வயிறு கொள்ளும் அளவு மட்டும்தான் உண்ண முடியும்.
எனவே நான் எனும் ஒற்றைச் சிந்தனைகளைத்
தவிர்த்துவிட்டு நாம் என்று சமூகத்தை ஒன்றிணைத்துச்
சிந்திப்போமெனில் நம் எல்லைகள் விரிவடையும். இலக்குகள் தீவிரம் பெறும்.
ஒற்றை ஆளாகத் தேரிழுக்க முடியாது,ஊர்கூடித்தான்
தேர் இழுக்க வேண்டும்.
நம்மிடம் பணிபுரியும்
ஊழியர்களில் திறமை மிகுந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அனைவருக்கும்
பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்து அவர்களை கண்காணிப்பதோடு
அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் ஏற்பாடு செய்யலாம். நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைப் பலிகொடுக்காமலே ஒரே நேரத்தில் பல மட்டங்களிலும்
தொழிலை விரிவுபடுத்தலாம்.
திட்டங்களா இல்லை ???
#தொடரும்..
No comments:
Post a Comment