Saturday, November 21, 2020

வணிகமும் தமிழக இஸ்லாமிய சமூகமும்..! #நிஷா மன்சூர்

 வணிகமும் தமிழக இஸ்லாமிய சமூகமும்..!


#நிஷா மன்சூர்

இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே வணிகச் சமூகமாகத்தான் காலம்காலமாக இருந்து வந்திருக்கிறது.நபித்தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் இமாமுல் அஃலம் அபூஹனிஃபா ரஹிமஹுல்லாஹ் அவர்களையும் போன்ற முன்னுதாரன வணிகச் சான்றோர்கள் நடந்தவழியைப் பின்பற்றியே உலகளாவிய இஸ்லாமிய சமூகம் பீடுநடை போட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் விமானம் புழக்கத்துக்கு வராத காலத்திலேயே முஸ்லிம்கள் கடல்தாண்டி பற்பல நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்துவந்த சரித்திரத்தை நாம் அறிவோம். கீழக்கரையைச் சேர்ந்த அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இலங்கையில் பெருவணிகம் செய்து வந்தது மட்டுமல்லாமல் முதல் அரபுக்கல்லூரியை உருவாக்கியும் கிட்டத்தட்ட 350 பள்ளிகளை  நிர்மாணித்தும் பெரும்சேவை புரிந்து போர்த்துக்கீசிய மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகளில் உருவான மதக்குழப்பத்திலிருந்து இஸ்லாமிய சமூகத்தை மீட்டெடுத்து புதிய மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள்.

கடலோர மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் சென்று வணிகம் செய்தும் பணிபுரிந்தும் பொருளீட்டியபோது கோவை கரூர் மதுரை மற்றும் தென் மாவட்டங்களிலும் வட ஆற்காடு தென்னாற்காடு மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம்கள் முழுக்க முழுக்க உள்ளூர் வணிகத்தையே மேற்கொண்டு வருகிறார்கள். ஹோட்டல், ஜவுளி,காலணி மற்றும் அணிகலன் வணிகம்,இரும்பு மற்றும் காய்கறி,தோல் பதனிடுதல் மற்றும் காலணி உற்பத்தி ஏற்றுமதி, மளிகை நகைவணிகம் மரம் மற்றும் ஃபர்னிச்சர் ஆகிய சகல வணிகத்துறைகளிலும் முஸ்லிம்கள் தடம்பதித்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர்.

ஆனால் இஸ்லாமிய வணிகர்களின் நகர்வு என்பது ஏதோ ஒரு இடத்தில் தேக்கமடைந்து விடுவதாகவும் ஒரு கட்டத்துக்கு மேல்  பெரும் வளர்ச்சியை நோக்கி நகராமல் அப்படியே நின்று விடுவதாகவும் ஏன் இருக்கிறது என்கிற கேள்வி எனக்கு எப்போதுமே உண்டு.உதாரணமாக எண்பதுகளின் பிற்பகுதியில் சில்லரை வணிகத்தில் நுழைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போத்தீஸ்  நிறுவனம் இன்று 14 க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பல்லாயிரம் கோடிகள் வணிகம் செய்து வருகிறது. அதேபோல 87-ல் திருப்பூரில் துவக்கம் செய்யப்பட்ட குமரன் சில்க்ஸ்  நிறுவனம் இன்று சென்னை சில்க்ஸாக பொலிவடைந்து 25-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் ஜவுளியுடன் நகைகளையும் விற்பனை செய்து தமிழகத்தின் வால்மார்ட்டாகத் திகழ்கிறது.  நமக்கு ஒரு தஞ்சை மஹாராஜா குழுமமும் (கிட்டத்தட்ட ஆறு கிளைகள்) ஒரு சென்னை மதார்ஷா குழுமமும் (இரண்டு கிளைகள்) போதுமா ? சிறுநகரங்களில் அல்லது நடுத்தர நகரங்களில் வணிக தர்மத்தைப் பேணி சிறந்த முறையில் வணிகம் செய்து வரும் ஏகப்பட்ட நிறுவனங்கள் இருந்தபோதிலும் எல்லைகளைக் கடந்து விரிவடையாமல் நமக்குத் தடையாக இருப்பது எது ?

சென்னையில் புகழ்பெற்ற புஹாரி ஹோட்டல் நிறுவனம்கூட கடந்த சில வருடங்களுக்கு முன்னர்தான்

சிலிர்த்தெழுந்து தன்னை நவீனப் படுத்திக்கொண்டு நகரம் முழுதும் கிளைகளைத் திறந்துள்ளது. அதேபோலத்தான் ஆம்பூர் ஸ்டார் பிரியாணியும்.இப்போது பல நகரங்களில் அதன் கிளைகளைப் பார்க்க முடிகிறது.ஆனால் ஏனைய நகரங்களில் உள்ள அற்புதமான சுவையுடன் வணிகம் புரிந்துவரும் அசைவ உணவு நிறுவனங்கள் கடந்த இருபது வருடங்களாக எவ்வித மாற்றத்தையும் அடையாமல் அப்படியே இருக்கின்றன. இன்னொரு முக்கியமான விஷயம் வெளியே பயணிக்கும் முஸ்லிம்கள் பெரும்பாலும் சைவ உணவையே விரும்பு உண்ணுகிறார்கள். காரம், மசாலா குறைவாக இருப்பதால் வயிற்றுக்கு இதமாக இருப்பதோடு சர்க்கரை நோயை குடும்ப சொத்தாகவே பேணிவளர்க்கும் தமிழ் மக்களுக்கு இசைவாக இருப்பதும் சைவ உணவுதான்.

எத்தனையோ பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சரவணபவன் அண்ணாச்சியின் ஹோட்டலில் உண்ணுபவர்களில் கணிசமான ஆட்கள் முஸ்லீம்கள்தான்.தனிப்பட்ட ஒழுக்கப் பிறழ்வுகள் அவர்களது உணவின் தரத்தைக் குறைக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களின் தனிப்பட்ட வாழ்வின் பரிசுத்தம் ஏன் தொழிலில் பிரதிபலிக்கவில்லை ? அதேபோலத்தான் அடையாறு ஆனந்தபவன் ஹோட்டல். இன்று தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் விசாலமான கார் பார்க்கிங்கோடு குழந்தைகளுக்கு விளையாடும் பூங்காக்களோடு நேர்த்தியாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படும் கழிவறைகளோடு சுவையான உணவையும் வழங்கிக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம். முஸ்லிம்களால் ஏன் அதுமாதிரியான சிறந்த சங்கிலித்தொடர்  உணவு மற்றும் வணிக நிறுவனங்களை உருவாக்க முடியவில்லை ? நிர்வாகத்திறமை இல்லையா ? மனிதவளம் இல்லையா ? பொருளாதார நிர்வாகத்திறன் இல்லையா ?

#தொடரும்.....



#நிஷா மன்சூர்

No comments: