Thursday, September 24, 2020

டாக்டர். மான்சப் முஹம்மத் சலோவி (Moncef Mohamed Slaoui) - கொரானா வைரஸ்சிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க...

கட்டுரை எழுதியவர் Aashiq Ahamed




 டாக்டர். மான்சப் முஹம்மத் சலோவி (Moncef Mohamed Slaoui) - கொரானா வைரஸ்சிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்க அரசு நியமித்த குழுவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்ட போது பல ஊடகங்களும் ஆச்சர்யம் தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-பின் இஸ்லாமோபோபியா பேச்சுக்கள் எல்லாரும் நன்கு அறிந்த ஒன்று தான். அப்படியான ஒருவர் ஒரு முஸ்லிம் அமெரிக்க விஞ்ஞானியை நியமித்ததற்கு காரணம் என்னவென்று விவாதத்தை முன்வைத்தன அமெரிக்க ஊடகங்கள். 

ஏன் முஹம்மத் இந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கு, அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் அலெக்ஸ் அஜார் கூறிய விளக்கம் போதுமானது. "இன்றைய தேதியில், இத்துறையில் அதிக அனுபவமும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் வெற்றியாளராகவும் வலம் வருபவர் என்பதாலேயே இப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்று முஹம்மத்தை புகழ்ந்தார் அலெக்ஸ். 

அப்படி என்ன சாதனைகளை செய்திருக்கிறார் இவர்? பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான Glaxo Smith Kline-னில் 30 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள முஹம்மத், அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவராகவும் பணியாற்றியவர். தன் 27 ஆண்டுகால கடின உழைப்பின் பலனாக மலேரியாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இதுமட்டுமல்லாமல் கர்ப்பப்பை புற்றுநோய், எபோலா வைரஸ், சிறுவர்களுக்கு ஏற்படும் இரைப்பைக் குடலழற்சி பிரச்சனை ஆகியவற்றிற்கும் தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர் முஹம்மத் சலோவி.  

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குழுவை தலைமையேற்று நடத்த முஹம்மத் சலோவியுடன் இன்னும் இரண்டு பேரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தது அமெரிக்க அரசு. அந்த இருவரில் ஒருவரும் முஸ்லிம் தான். டாக்டர் இலியாஸ் ஜெர்ஹூனி (Elias Zerhouni) தான் அவர். பெரும் மதிப்பிற்குரிய அரசு நிறுவனமாக கருதப்படும் அமெரிக்க தேசிய சுகாதார மையத்தின் தலைவராக செயலாற்றியவர் இந்த முஸ்லிம் அமெரிக்க விஞ்ஞானி. இது மட்டுமல்லாமல், பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான Sanofi-யின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் என பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்திருக்கிறார் டாக்டர்.இலியாஸ்.      

தன்னுடைய வளர்ச்சி குறித்து கூறும் போது, 'கல்வியறிவை பெறுவதின் மூலம் முன்னேற்றம் அடையலாம் என ஊக்கப்படுத்துகிறது குர்ஆன். என்னுடைய மருத்துவ ஆய்வுகள் மற்றும் முன்னேற்றத்திற்கு நான் இஸ்லாம் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே காரணம்' என பதிவு செய்திருக்கிறார் இலியாஸ். 

இவர் போன்றவர்கள் இப்படியான எண்ணங்களை வெளிப்படுத்துவது புதிதல்ல. அமெரிக்க மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 1% தான் என்ற போதிலும் அமெரிக்க மருத்துவதுறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5% ஆகும். 2012-டில் இவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், அறுதிப்பெரும்பான்மையான முஸ்லிம் மருத்துவர்கள், இஸ்லாம் தங்கள் வாழ்வில் இன்றியமையாததாக திகழ்கிறது என குறிப்பிட்டிருக்கின்றனர்.  

ஆக, ட்ரம்ப் போன்றவர்கள் வாக்குகளுக்காக இஸ்லாம் மீது வெறுப்பை உமிழலாம். ஆனால் தேவை என வரும் போது முஸ்லிம்கள் தான் நினைவுக்கு வந்திருக்கிறார்கள். இங்கே, ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களை அரவணைத்து சென்றால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம். இது புரியாத எவரும் உருப்பட வாய்ப்பே இல்லை.

படம் 1: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் டாக்டர்.மான்சப் முஹம்மத் சலோவி

படம் 2: அபுதாபியில் நடந்த கடந்துரையாடல் நிகழ்வில் டாக்டர். இலியாஸ் ஜெர்ஹூனி. அருகில் இருப்பவர் டாக்டர். ஒமியாத் முஹம்மத் அல் ஹஜரி.  

செய்தி சேகரிக்க உதவிய தளங்கள்:

1. Institute for Social Policy and Understanding (ISPU)

2. The Journal of the American Medical Association (JAMA)

3. Notable Biographies website

4. Various American News sites

5. Wikipedia



Aashiq Ahamed

No comments: