அழகு
ஓர் அழைப்பிதழ்...
முத்திரையிடு... முகவரியிடு!
அன்றேல் அதுவே
பொது அறிவெப்பென
கவனம் ஈர்க்கும்;
யாவரும் காண்பர்
கண்டவர் கிறங்குவர்!
அழகு
உள்நாட்டுக் கடிதமெனில்
அஞ்சலட்டை
அதன் நிர்வாண வடிவம்!
அழகு
பதிவுத் தபால்கள்;
நாடியவனையேத்
தேடிச்
சேர்ப்பிக்கப்பட வேண்டும்!
அழகு
தந்திச் செய்தி;
உரியவனுக்கேப் புரிய வேண்டும்
பிறருக்கென்றும் பூடகமே!
அழகு
குறுஞ்செய்தி யல்ல...
படித்ததும் அழித்துவிட
அரிதானாலும்
அழுத்தமாய்
நெஞ்சிற் பதியும் குறிஞ்சி!
அழகு
படைத்தவன் அருளிய
பொக்கிஷம்...
பத்திரப்படுத்தாவிடில்
உக்கிர விஷம்!
அழகு
ஒரு வர்ணஜாலம்...
மறைத்து வைக்காவிடில்
பச்சையாகப் பேசப்பட்டோ
மஞ்சளாக எழுதப்பட்டோ
நீலமாகப் பார்க்கப்பட்டோ
சிவப்பாக ஒளிரப்பட்டோ
வாழ்க்கை
கருப்பாக இருட்டிவிடும்;
வெளுப்பான விடிவு
ஒருபோதும் வாய்க்காது!
அழகு
பாதுகாக்கப்பட்டால் மட்டுமே
திருமண வாழ்த்துகள்
தாங்கிய தட்டி,
தவறினால்
கண்ணீர் அஞ்சலி
சுவரொட்டி!
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
No comments:
Post a Comment