Tuesday, September 22, 2020

என் வாழ்வின் உச்சமும், பாதாளமும் பட்டென்றே மாறி மாறி நிகழும் அதிசயக் காலம்!



 ( 1978---ஆம் ஆண்டாக இருக்கலாம்!

மாதம்,தேதி கேட்கக் கூடாது! நினைவில்லை!

என் வாழ்வின் உச்சமும், பாதாளமும் பட்டென்றே மாறி மாறி நிகழும் அதிசயக் காலம்!

"மணி விளக்கு " மாதயிதழின் துணையாசிரியர்கள் ,நானும்,மச்சான் கவிஞன் இஜட்.ஜபருல்லாஹ்வும்!

சென்னை மரைக்காயர் லெப்பைத் தெரு, 

முஸ்லிம் லீக் அலுவலக மூன்றாம் மாடியில் எங்கள் குடியிருப்பு!

எனக்கு மணமாகவில்லை! 

நாலரைக் கழுதை வயதுதான்!

நாகூர்க் கவிஞன் குடும்பி!

லீக் ஆபீஸும் எங்கள்  கண்காணிப்பு! 

மூன்று மாடிக் கட்டிடத்தின் ஏகபோக ராஜாக்கள் நாங்கள்!

பசி,பட்டினி எங்கள் சகவாசிகள்!

கவிஞனுக்கு ஊரிலிருந்து அழைப்பு .அவசரம் . உடனே புறப்பட்டான்.

கையிலிருந்தது,கண்ணில் பட்டது,அத்தனைக் காசுகளையும் பிராண்டி எடுத்து ரயில் ஏற்றி விட்டேன்!

முதல்நாள் பட்டினி!

அடுத்த நாளும் அது தொடர்ந்தது!

மூன்றாம் நாளும் உணவுக்கு உத்தரவாதமில்லை!

இது மாதிரி காலங்களில் எங்கள் ஆபத்துப்பாந்தவர்கள்,ஆப்பனூர் 

காசிம் அண்ணன்,அவர் மாப்பிள்ளை பீரண்ணன்

இருவரும் சிங்கப்பூர்ப் போய்விட்டார்கள்!

கேட்டபோதெல்லாம் மறுமொழி பேசாமல் 

அள்ளித்தரும் கறவைப் பசு, தலைவர் சிராஜுல் மில்லத்!

அவர் அரபு நாடு சென்று விட்டார்!

கிருஷ்ணன் கோயில் தெரு,

கதிஜா ஹோட்டல் மூஸாக் காக்காவுக்கு அவர் உயரத்து மேல் கடனை அழுத்தி வைத்திருக்கிறோம்!

இது மாதிரி நேரங்களில் எனக்கு ஒரு பழக்கம்!

மெரீனா கடற்கரை மணலில் நடப்பது.

காலை,மதியம்,மாலை,இரவு 

எந்த நேரத்திலும்!

"வாக்கிங்"அல்ல!

மணலை எத்தி எத்தி நடப்பேன்!

எந்தப் புண்ணியவானாவது நூறு ரூபாயைத் தொலைச்சியிருக்க மாட்டானா?

யாரிதென்று தெரியாத பணம் என் சொத்துத்தான்!

நான்  தேடிய காலமெல்லாம் எந்த மானுடனும் பணத்தைத் தொலைக்கவே  யில்லை!

நானும் எடுத்ததே யில்லை! 

அப்படியொரு வேளையிலே எழுதிய கவிதை இது!

இன்று கைவசம் மாட்டியது.பதிந்துவிட்டேன்! )

யார்தான் வருவார்...?

முதல்நாள்  வரவு!   இதுநாள்   உறவு!

மறுநாள் முடிவு இதுவே மனித வாழ்க்கை

அதுவரை  மனிதன்  ஆயிரம்  கனவை

அள்ளித் திரியும் ஆசை திரண்ட குடுவை!

                                                  ( முதல்நாள்...)

எத்தனைப்  பாசம்!  எத்தனை  வேஷம்!

எத்தனை  இன்பம்!  எத்தனைத்  துன்பம்!

பெற்றதில்  மகிழ்ச்சி! விட்டதில் தவிப்பு!

அத்தனைச் செயலும் அவரவர் பொறுப்பு!

                                                  ( முதல்நாள்...)

விண்ணனை அளப்பான்! மண்ணைத்

                                                  துளைப்பான்!

பெண்ணை அணைப்பான்! பரம்பரை

                                                    தொடர்வான்!

கண்ணில் பட்டதை எண்ணிப் பிடிப்பான்! 

காலின்   கீழ்தான்     உலகம்      என்பான்!  

                                                  ( முதல்நாள்...)

கோபுரம்    கட்டி      உச்சியில்      நின்றே 

நாற்புறம்   எங்கும்     எனக்குச்   சொந்தம்! 

மேற்புறம்    வானம்       பயணத்     தூரம்!

ஆர்ப்ப   ரிப்பான்!  ஆணவம் கொள்வான்!

                                                 ( முதல்நாள்...)

எடுப்பான்! கொடுப்பான்!பிறரின் உரிமை

தடுப்பான்! மறுப்பான்! தா்மம் மறுப்பான்!

கெடுப்பான்! உறவை  முறிப்பான்!  சற்றே

படுப்பான்!துடிப்பான்! சரிவான் முடிவான்!

                                                  ( முதல்நாள்...)

மெல்லிதழ்ப் பூமுகம் விழிமொழி  வழியே

சொல்வரும்! இளமுயிர் தரைவிழும்!    

                                                           போதைக்

கள்ளில் சுகமிலை! இதழில் குறைவிலை

உள்ளில்    நினைக்க    நரையெழும் 

                                                      கூன்விழும்!

                                                  ( முதல்நாள்...)

கட்டுடல் காளைக்  கல்மலைத்  தோள்கள்

பட்டால்     பாறைகள்    தூள்தூள்   ஆகும்!

தொட்டால்    யானைகள்  துவண்டு வீழும்!

சட்டெனச்    சாய்வான்    சகலமும்    ஓயும்!

                                                  ( முதல்நாள்...)

பெற்றவள்  அழுவாள்!  மற்றவர்  நடிப்பார்!

உற்றவர்     ஓர்நாள்      துக்கம்     கலப்பார்

பித்துப்  பிடித்தே அலைந்தவன் வாழ்வில்

ஒத்துப்    போகவே     யார்தான்    வருவர்!

                                                  ( முதல்நாள்...)

மண்மேல்   நமக்கோ   கோடிக்  கனவுகள்!

கண்முன் கண்டவை  கடுகின்  அளவுகள்!

மண்கீழ்ப் படுக்கை  ஒருநாள் உறுதிதான்

என்செய?எதுபயன்? அதுவே இறுதிதான்!

                                                  ( முதல்நாள்...)




Hilal Musthafa

No comments: