மயிலாடுதுறையில் துபாஷ் அக்ரஹாரம் என்றொரு தெரு காவிரியின் வட கரையில் இருக்கிறது
அதென்ன துபாஷ் அக்ரஹாரம்? சுபாஷ் போல துபாஷும் ஒரு பெயரா? இல்லை! அது ஒரு தொழில்!
ஒரு காலத்தில் அது வளங் கொழிக்கும் தொழிலாகவும் இருந்திருக்கிறது! அதைச் செய்தவர்கள் பெருஞ் செல்வம் சேர்த்து அந்நாளிலேயே கோடீஸ்வரர்களாக இருந்திருக்கின்றனர்!
அப்படி என்ன தான் தொழில் அது?
மொழி பெயர்ப்பு தான்!
துபாஷ் என்றால் மொழி பெயர்ப்பாளர் என்று அர்த்தம்! அது ஒரு காரணப் பெயர்!
இவர்கள் இன்றைய மொழி பெயர்ப்பாளர்களைப் போல் புத்தகங்களை மொழி பெயர்க்கவில்லை! வணிகர்களுக்கான வியாபார மொழி பெயர்ப்பாளர்களாக இருந்திருக்கின்றனர்!
வியாபாரத்திற்காக இங்கே வந்த ஐரோப்பியர்களுக்கும், இங்கே இருந்த இந்தியர்களுக்குமிடையே மொழி பெயர்ப்பாளர்களாக இருந்திருக்கின்றனர். பின்னாளில் ஐரோப்பியர்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இவர்கள் சேவை தொடர்ந்திருக்கிறது!
இத் தொழிலில் பெருஞ்செல்வம் சேர்த்த பலரும், தங்கள் சொத்தின் பெரும்பகுதியை தான தர்மங்களுக்கும், சமூக, கல்வி வளர்ச்சிக்கும், இன்ன பிற நல்ல காரியங்களுக்கும் செலவு செய்து கொடை வள்ளலாகவும் திகழ்ந்திருக்கின்றனர்!
வள்ளல் திரு பச்சையப்ப முதலியார், திரு. பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர், சிந்தனைச் சிற்பி திரு. சிங்கார வேலர் போன்றோர் அக்காலத்தில் புகழ் பெற்ற துபாஷ்கள்!
ஃபிரஞ்சுக் காரர்களுக்கு துபாஷாக விளங்கி பெருஞ்செல்வம் சேர்த்தவர், புதுவையைச் சேர்ந்த திரு. ஆனந்தரங்கப் பிள்ளை! தொடர்ந்து பல ஆண்டுகள் இவர் எழுதிய டைரிக் குறிப்புகள், பிரஞ்சு அரசாங்கம், அவர்களது வணிகம், ஆட்சி முறை, அக்கால வாழ்வு பற்றி நாமறியக் கிடைக்கும் அரிய ஆவணமாகும்!
இவரது டைரிக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய நாவல்களில், வானம் வசப்படும் என்ற நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது!
அது சரி! துபாஷ் எப்படி காரணப் பெயர்?
உண்மையில் துபாஷ் என்பது த்விபாஷி என்ற சமஸ்கிருதச் சொல்லின் மருவு மொழி!
த்வி+பாஷி = த்விபாஷி.
த்வி என்றால் இரண்டு. இதிலிருந்து தான் த்வைதம் என்ற சொல் வந்தது. த்வைதம் என்றால் இரண்டானது என்று பொருள். இதன் எதிர்ச்சொல் அத்வைதம் = இரண்டற்றது!
பாஷை = மொழி, பாஷி = பேசுபவன் (ஆண் பால்), பாஷிணி = ( பெண் பால்)
த்விபாஷி = இரண்டு மொழிகள் பேசக் கூடியவன்!
இவர்கள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்ததால் த்விபாஷி மொழி பெயர்ப்பாளர் என்ற காரணப் பெயரானது!
த்விபாஷி, துபாஷி ஆகி நாளடைவில் துபாஷ் ஆக மருவியது!
#உலக_மொழி_பெயர்ப்பு_தினம்.
No comments:
Post a Comment