Monday, December 9, 2019
அர்த்தமுள்ள இந்து மதம் – பாகம் 5
கண்ணதாசனின் ’அர்த்தமுள்ள இந்து மதம்’ அவருடைய உரைநடை மாஸ்டர் பீஸ் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.
அதிலும் குறிப்பாக ’ஞானம் பிறந்த கதை’ என்று உப தலைப்பிடப்பட்ட ஐந்தாம் பாகத்தை ’உரைநடைக்கவிதை’ என்றுதான் சொல்ல வேண்டும்.
படிக்கப் படிக்க அவ்வளவு அழகு. பட்டினத்தார், பத்ரகிரியார் ஆகியோரின் வரலாற்றைச் சொல்லும் அந்நூல் அவர்கள் இருவருக்கும் ஞானம் வந்த கதையைக் கூறுகிறது.
அவர் எழுதியதைப் படித்த பிறகு பட்டினத்தாரைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை எனக்குத் தூண்டியது. இன்னும் குறிப்பாக பட்டினத்தாரின் தாயார். ஆமாம். சில ஞானிகளின் அன்னையர் ஞானிகளை உருவாக்கும் ஞானிகளாக இருந்துள்ளதை அவர்களது வரலாறு காட்டுகிறது.
ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியாவின் தாயாரும் அப்படித்தான். சாப்பிட ஒன்றுமில்ல, இன்றும் நாம் கொலை பட்டினி என்பதை, ‘மகனே, இன்றும் நாம் அல்லாஹ்வின் விருந்தாளிகள்’ என்று சொல்வார்களாம்!
ஒவ்வொரு மாதமும் தாயின் பாதங்களைத் தொட்டு மரியாதை செலுத்துவார்கள் நிஜாமுத்தீன். அப்படி ஒருநாள் செய்தபோது, ‘அடுத்த மாதம் என்ன செய்வாய்?’ என்று கேட்டிருக்கிறார்கள். ஹஸ்ரத் நிஜாமுத்தீனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அடுத்த மாதம் அவர்கள் காலமாகிவிட்டார்கள்!
இறப்பதற்கு ஒரு சில கணங்களுக்கு முன் தன் கைகளை ஏந்தி, ‘யா அல்லாஹ், என் மகனை உன் பொறுப்பில் விட்டுச் செல்கிறேன்’ என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்களது உயிர் பிரிந்துவிட்டது!
பட்டினத்தார் துறவியாக முடிவெடுத்து அன்னையிடம் கூறுகிறார். அவர்களுக்கிடையில் நடந்த உரையாடல் இது:
’போய் வரட்டுமா ஆத்தா?’
’துறவி எங்காவது போய் வருவானா?’
அதிர்ந்த நிலையில், ‘ஆத்தா நான் போகிறேன்’ என்றேன்.
‘சுய தர்மத்தை முடிக்காதவன் எங்காவது போய்விடுவது உண்டா?’
’இன்னும் எனக்கென்ன சுய தர்மம்?’
’தாய், தந்தை ஒரு பிள்ளையிடம் எதிர்பார்ப்பது கடைசியாகக் கொள்ளி வைப்பதைத்தானே?’
’அப்படியானால் போய்வருகிறேன் என்று சொல்வதுதானே சரி?’
’இல்லை, வருகிறேன் என்று மட்டும் சொல்லவேண்டும். மகன் போகிறான் என்ற உணர்வு தாய்க்கு ஏற்படக் கூடாது. போய்வருகிறேன் என்றால் அது மனித வார்த்தை. வருகிறேன் என்றால், அது நினைத்தால் வருவேன் என்கிற ஈஸ்வரலயம்’.
ஈஸ்வர லயம் – அடடா, எவ்வளவு அழகான சொல்! சுத்தமான தமிழ்ச் சொல்லை யாராவது கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்!
பட்டினத்தார் கிளம்பு முன் அவரது துணியில் ஒரு முடிச்சைப் போட்டு அனுப்புகிறார் அவர் அம்மா. ஏன் என்று கேட்டதற்கு, அந்த முடிச்சு அவிழ்ந்து விழுந்தால், நான் இறக்கப் போகிறேன் என்று அர்த்தம். எங்கிருந்தாலும் வந்துவிடு – என்று கூறுகிறார் அம்மா.
அவர் சொன்னபடி முடிச்சு அவிழ்ந்து பட்டினத்தார் விரைந்து வந்து பார்த்தபோது அவர் உயிர் பிரிந்துகொண்டிருந்தது.
எப்போது இந்த உலக வாழ்வை முடிக்கப் போகிறோம் என்பது இறைநேசர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!
அதேபோல ஒரு நாள் முடிச்சு அவிழ்ந்து விழுந்தது. பட்டினத்தாரும் விரைந்து அம்மாவைப் பார்க்க வந்தார். அம்மாவின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது.
‘வந்துவிடுவேன் என்றபடி வந்துவிட்டேன்’ என்றேன்.
‘இனி நான் வெந்துவிடுவேன்’ என்றார்கள்.
வந்துவிடுவேன், வெந்துவிடுவேன் என்ற வார்த்தை லயத்தில் ஒரு கலாச்சாரத்தையே காட்டுகிறார்
கண்ணதாசன். அதன் பிறகு எழுதுகிறார்:
’என்னைப் பெற்றவள் போய்விட்டாள். நான் இனி பெற முடியாதவள் போய்விட்டாள்’.
‘பெறுதல்’ என்ற சொல்லின் இரண்டு பொருள்களும் இங்கே விளையாடுகின்றன.
பத்ரகிரியார் முதலில் உஜ்ஜைனி மன்னராக இருந்து, மனைவியின் துரோகத்தால் துறவியாகிறார். அது பற்றிக் கூறும்போது கண்ணதாசன்,
‘மேனி மயக்கத்தின் முடிவு, ஞான மயக்கமாகத்தானே இருக்க முடியும்?’ என்கிறார்.
’பிற உயிர்களின் அழுகை ஒலி, எப்போது உன் ஆன்மாவுக்குள் இருந்து நீ அழுவது போலவே கேட்கிறதோ, அப்போதுதான் நீ பக்குவம் பெற்ற ஞானியாகிவிட்டாய் என்று அர்த்தம்’
என்று ஓரிடத்தில் கூறுகிறார்.
கவிஞர் கண்ணதாசனுக்கும் ஞானம் வந்திருக்கும் என்றே தோன்றுகிறது!
Nagore Rumi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment