Friday, April 5, 2019

ஆலிம்களின் அதிகார எல்லைகளும் தண்ணீர் கலக்காத கெட்டிக்கஞ்சியும்..!

#நிஷாமன்சூர்

ஆலிம்களுக்கு அரசியல் தெரியாது கொஞ்சம் சும்மா இருங்க என்று சிலர் கூறியதாக முன்னணி ஆலிம்கள் குறைபட்டுக் கொண்டார்கள். எனக்கு அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. ஆலிம்கள் அறியாத அரசியலே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் அவர்களது அரசியல் என்பதும் சாதுர்யம் என்பதும் பள்ளிவாசல் செகரட்ரரிகளை சரிக்கட்டவே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு பலவீனமாக்கப் படுகிறது என்பது துயரகரமான விஷயமாகும்.

ஹஜ்ரத்மார்களோடு பழக்கம் வெச்சுக்கிட்டா மார்க்க விஷயங்களில் தெளிவு கிடைக்கும் என்று நண்பன் ஒருவன் சிறுவயதில் சொன்னது நினைவில் இருக்கிறது. பலத்த பீடிகையோடு சிலர் கொஞ்சம் விளக்கம் கொடுப்பார்கள்.ஏனையவர்கள் டீ சொல்லுங்க தம்பி என்று சொல்லிவிட்டு வழக்கம்போல ஊர்ஃபித்னாக்களை நோண்டவே விருப்பம் கொள்வார்கள்.


ஆனால் நோன்பு காலங்களில் தண்ணிக் கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள ஒருதுளி சட்னி கொடுக்கக்கூட ஹஜ்ரத்மார்களுக்கு ஏலாது என்பது உண்மை. தண்ணீர் கலக்காத கெட்டிக்கஞ்சி வேண்டுமெனில் உங்களுக்கு மோதினாரின் அசிஸ்டண்ட்டைத் தெரிந்திருக்க வேண்டும். அந்த அசிஸ்டண்ட்டுக்கும் ஒரு எடுபிடி இருப்பார்.அவரைக் கரெக்ட் செய்துவிட்டால் உங்களுக்கு கெட்டி சட்னியுடன் கூடுதலாக இரண்டு வடைகளும் கிடைக்கும். மற்றபடி மோதினாருடன் சுமுக உறவு இருந்தால் போதும், மத்தியான வெய்யிலில் நீங்கள் தொழுதுகொண்டிருக்கும் போது உங்களுக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும் ஃபேனை ஆஃப் செய்யாமல் கருணை காட்டுவார். ஹஜ்ரத்மார்களை நம்பினால் அதோகதிதான், கண்டும் காணாததுபோல கம்பீரமாக வெளியேறி விடுவார்கள்.

இப்படித்தான் ஒருமுறை தென்மூலை நகரமொன்றிற்கு நோன்பு காலத்தில் சென்றபோது அங்குள்ள நண்பரைத் தொடர்பு கொண்டேன்.தற்செயலாக அவர் மதுரை சென்றிருந்ததால் அவர் கடைவீதி மஹல்லாவிலுள்ள தலைமை இமாமிடம் சொல்லிவிட்டதாகவும் அவரோடு சென்று நோன்பு திறக்குமாறும் அன்பாகக் கூறினார். நானும் வியாபார நண்பர்கள் இருவர் தம்முடன் நோன்பு திறக்கச் சொல்லி வற்புறுத்தியதையும் புறக்கணித்துவிட்டு அந்தப் பள்ளிக்குச் சென்று அஸர் தொழுதுவிட்டு மிஹ்ராப் அருகில் ஏகாந்தமாக அமர்ந்திருந்த தலைமை இமாமிடம் கைலாகு கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்டதும் "ஆமாமாம் தம்பி போன் பண்ணினார்,நீங்க இருங்க நம்ம சேந்து நோன்பு திறப்போம்" என்றார்.

நோன்பு திறக்கும் நேரம் வந்ததும், அருகில் அழைத்து அமரச் சொன்னவர் மைக் சகிதம் துவா ஓத ஆயத்தமானார். இரண்டு குவளைகளில் கஞ்சி கொண்டுவந்து வைக்கப்பட்டது.வேறு ஒன்றும் இல்லை.
என்பக்கம் மெல்லக் குனிந்த ஹஜ்ரத்"நான் மஃரிப் தொழுகை முடிச்சதும் நாஷ்டா சாப்பிட்டுடுவேன்.அதனால வெறும் கஞ்சி மட்டும்தான் குடிப்பேன்.நீங்க ஃப்ரியா நோன்பு திறக்கணும்னா மேலகூட போய்க்கலாம்" என்றார். ஆலிம்ஷா அவாய்ட் பண்றார் என்று தெரிந்ததும் "சரிங்க மெளலானா,நான் பாத்துக்கறேன்" என்றுவிட்டு மேலே நோன்பு திறக்க அமர்ந்திருந்த அவாம்களுடன் அவாமாக அமர்ந்து கஞ்சி பேரிச்சம்பழம் வடைகளுடன் சட்னி சகிதம் திவ்யமாக நோன்பு திறந்தேன்.

அதன்பிறகு வணிக நண்பரின் நிறுவனத்திற்குச் சென்றபோது "என்னங்க நீங்க,நம்ம சேர்ந்து நோன்பு திறந்திருக்கலாம்" என்று வெகுவாக வருத்தப்பட்டதுடன் சுடச்சுட பாயசம்,சாம்பார் வடை,காராபூந்தி தூவிய தயிர்வடை எல்லாவற்றையும் எடுத்துவைத்திருந்து உபசரித்தார்.

இதேபோல இன்னொரு சம்பவம்,நன்கு பழக்கமான நண்பர் ஒருவரின் மகன் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பள்ளியில் இமாமாகப் பணிபுரிவதாக போன் செய்து சொன்னான்.நான் பார்க்கப் பிறந்த பையன்.ஆனால் ஓதத் துவங்கியதும் மாமா என்று அழைத்துக் கொண்டிருந்தவனை "அண்ணான்னு சொல்லுய்யா ஆலிம்ஷா" என்று மடைமாற்றி விட்டிருந்தேன்.(நம்ம சூதானம் நமக்கு) இப்போது திருமணமாகி தாடி ஜுப்பாவுடன் சிறப்பானதொரு தொப்பையையும் தாங்கியிருக்கிறான். சில மாதங்களுக்கு பிறகு அந்த நெடுஞ்சாலையில் பயணிக்க நேர்ந்தபோது அவனை அழைத்து "தம்பி அந்த வழியாத்தான் வந்துட்டிருக்கேன்.நோன்பு திறக்க உன் பள்ளிக்கு வந்தர்லாமா" என்று கேட்டதற்கு"அண்ணா வாங்கண்ணா,நான் பள்ளிலதான் இருக்கேங்ணா" என்று கனிவுடன் அழைத்தான்.

பள்ளிக்குச் சென்று அஸர் தொழுதுவிட்டு கொஞ்சம் ஓதலாம் என்று குர்ஆனை எடுத்து அமர்ந்தபோது அருகில் வந்த ஆலிம்ஷா தம்பி"அண்ணா நாங்க தூவால்லாம் ஓதிட்டு செகரட்ரரிகூட ரூம்ல நோன்பு திறக்கறோம்.உங்களுக்கு அன் ஈஸியா இருக்கும்னா மேல மோதினார் கூட அனுப்பறேன்.அங்ககூட ஏற்பாடு நல்லாருக்கும்" என்று இழுத்தான்."சரிம்மா நான் பாத்துக்கறேன்" என்றுவிட்டு ஓதுதலைத் தொடர்ந்தேன்.

நேரம் நெருங்கியதும் ஒரு வயசாளி வந்து "வாங்கஜி நோன்பு திறக்கலாம்" என்று அழைத்தார். மேலே சென்று வரிசையில் அமரவைத்தவர் அப்போதுதான் கஞ்சி தேக்ஸாவை கவனித்ததைப்போல "அடடே கஞ்சி தீந்துருச்சு போல இருக்கே" என்று உச்சுக் கொட்டினார்.
உண்மையாகவே கஞ்சி தீர்ந்து விட்டிருந்தது. அப்போது "காக்கா காக்கா" என்று பழகிய குரல் கேட்டது. பார்த்தால் எனக்கு காரோட்டிய முன்னாள் டிரைவர் என்னைக் கண்டு அழைத்துக் கொண்டிருந்தான்.அவனோடு சென்று அமர்ந்தபோது,"நீங்க ஒழு செஞ்சுட்டிருக்கும்போது பாத்தேன் காக்கா,எப்படியும் மேல வருவீங்கன்னு கஞ்சி எடுத்து வெச்சுருந்தேன்" என்றான் புன்னகையுடன்.
எப்படியோ முன்னாள் டிரைவர் புண்ணியத்தில் கஞ்சியுடன் பழங்கள் இரண்டுவகையான வடைகள் மற்றும் சட்னியுடன் திவ்யமாக நோன்பு திறந்தோம். ஏதோ ஒரு பக்கம் என்னை செட்டில் ஆக்கிவிட நிம்மதியில் அந்த மோதினார் காணாமல் போயிருந்தார்.

மஃரிப் தொழுதுவிட்டு விரைவாக வெளியேறிச் சென்றுவிட்டேன்.(முன்னாள் டிரைவர் டீ குடிக்கலாம் காக்கா என்று அன்போடு அழைத்ததையும் மறுத்துவிட்டு) சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த தம்பி ஆலிம்ஷாவிடமிருந்து அழைப்பு வந்தது"அண்ணா நோன்பு திறந்துட்டு சொல்லாமலே போய்ட்டீங்கண்ணா,வீட்டுக்குக் கூட்டிட்டுப்போய் நாஷ்டா சாப்பிட வைக்கணும்னு நினைச்சுட்டிருந்தேன்னா." என்று அன்பொழுகக் கூறினான்.
"இல்லம்மா,எனக்கு அவசரமா திருச்சி போகவேண்டிய வேலை,அதான் கிளம்பிட்டேன்.பரவால்ல இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை சாப்பிட்டாப் போச்சு" என்றேன்.
"இல்லண்ணா எங்க செகரட்ரரி ஒரு மாதிரி. அவர் இருந்ததனால உங்களை கவனிக்க முடியலை. அதான் மோதினார் ஷாப்கூட அனுப்பி வெச்சேன் தப்பா நெனச்சுக்காதீங்க" என்றான்.
"பரவால்லம்மா மோதினார் சிறப்பா கவனிச்சார்.நல்ல மனுஷன்,ஆனா பாவம் கஞ்சி கொட்ரா எங்கிருக்குன்னுதான் அவருக்குத் தெரியலை" என்று விடைபெற்றேன்.

இப்படியாக இருக்கும்போது நேற்று மாலைத் தொழுகையை நிறைவேற்ற பள்ளிக்குச் சென்றிருந்தேன். கூட்டுத் தொழுகைக்குப் பிறகு கொஞ்சம் உபரி தொழுகைகள் தொழுது கொண்டிருந்தேன்.பத்து நிமிடம் கழித்து எல்லா ஃபேன்களையும் அமர்த்திய இமாம் என் தலைக்கு மேல் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த ஃபேனைச் சுழலவிட்டார்.
காற்றோடு இமாமின் அக்கறையும் என்னை ஆக்கிரமித்துச் சிலிர்க்க வைத்துவிட்டது. தொழுகை முடித்து ஃபேனை ஆஃப் செய்துவிட்டு வெளியே வந்தபோது வாசலருகே மேதகு இமாம் அமர்ந்திருந்தார்"வாங்க வாங்க ஆலி ஜனாப்,ரமலான் பிறை பிறந்தாத்தான் உங்க பெளர்ணமி முகத்தை தரிசிக்க முடியும் போலிருக்கே" என்றவாறு கைலாகு கொடுக்கவந்தார்.

எனக்கோ பலத்த அதிர்ச்சி.
என்னவொரு மொழி வளம்,என்னவொரு புகழாரம். பள்ளிவாசல் செகரட்ரரிகளுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம் இன்று எனக்குமா என்று அதிசயித்தபடி கைகொடுத்து வழக்கமான விசாரணைகள், பேச்சு உபசரணைக்குப் பின்னர் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.அந்தக் கோரிக்கையும் அதன் விபரங்களும் சபைக் குறிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ஆனால் அந்த விளிப்பும் எதிர்கொள்ளலும் மொழியாளுமையும் இங்கு மிக முக்கியம்.

ஆக,ஆலிம்ஷாக்களுக்கு அரசியலும் தெரியும் ஆன்மீகமும் தெரியும் உலகமும் தெரியும். துரதிர்ஷ்டவசமாக அவர்களது திறமைகள் செகரட்ரரிகளை திருப்திப் படுத்துவதிலும் எளிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலுமே வீணடிக்கப் படுகின்றன என்பது சமூகத்தின் மாபெரும் குறை.

நிஷாமன்சூர்

No comments: