தமிழை மதிக்கத் தெரியாத மடையர்கள்
தமிழை நீச மொழியென்று
சொல்லும் நீசர்கள்
தமிழின் அருமையை
செழுமையைத் தெரிந்து கொள்ள
இந்தக் கவிதை !
***
திசைகளுக்கும்
எல்லா மொழிகளுக்கும்
இறைவனே சொந்தக்காரன்!
அவனை அறிவதற்கும்
அழைப்பதற்கும்
சொல்லித் தருகின்ற
சத்தங்களின் சதைகளே
மொழிகள்!
கம்பனும் வள்ளுவனும்
கற்றுத்தந்த
கற்கண்டுத் தமிழைவிட
"கண்ணே" என முத்தமிட்ட
என் அன்னையின்
எச்சில் மொழி
தித்திப்பானது!
அதனால்தான் -
தமிழ்த் தாயைப் பாடுமுன்னால்
தாய்த் தமிழைப் பாடுகின்றேன்!
ஒரு பிள்ளைக்கொடியின்
உறவுக்காக
தொப்புள்கொடியில் - தன்
உயிரை ஊற்றி வளர்க்கும்
தளிர்க் கொடி
தாய்!
அவள் அதரத்தின் அசைவில்
குழந்தை - தன்
தாய்மொழியின்
அகரத்தை
அறிந்து கொள்கிறது!
அவள் அள்ளி அணைக்கும்போதுதான்
ஆகாரத்தை அருந்தி மகிழ்கிறது!
தாய்ப்பாலுக்கு முன்னரே
நாம் பருகிய
முதல் பால்
தமிழ்ப் பால்!
தாயின் காலடியில் சொர்க்கம்
என்று சொன்னவர்
தாயினும் மேலான எங்கள்
நபிகள் நாயகம்!
காலடியில்
சொர்க்கத்தை வைத்திருக்கும்
அந்தத் தாய் மடியின்
தாலாட்டில்தான்
பிள்ளைத்தமிழ்
"பிஸ்மில்லாஹ்" சொல்கிறது!
பாசத்தோடு நேசத்தை....
கருவிலேயே
தமிழ் சுவாசத்தை
ஊட்டி வளர்த்த
நம் தாய் தந்த தமிழ்
நமக்கெல்லாம்
உயர் மொழிதான்
உயிர் மொழிதான் !
என்றாலும்....
அகில உலகுக்கும் அதுதான்
#தந்தைமொழி!
அப்படித்தான் சொல்கிறது வரலாறு!
மழையின் எல்லாத் துளியும்
நதியாவதில்லை
உலகின் எல்லா மொழியும்
செம்மொழியாவதுமில்லை!
மொழி -
காலத்தோடு பிறக்க வேண்டும்
காலம் கடந்தும்
வாழ வேண்டும்!
ஆதம் -
இறைவனால் படைக்கப்பட்ட விந்தை!
மனிதகுலத்தின் தந்தை!
அவர் நடமாடியதும்
அவர் நாவாடியதும்
இந்தத் தமிழ் மண்ணில்தான்!
ஆதத்துக்கு மட்டுமல்ல...
ஆண்டவனுக்கும்
தமிழ் தெரியும்!
இறைவன்தான்
மொழிகளின் ஆசிரியன்
மொழியும் அவன்
மொழிபவனும் அவன்!
ஆரம்பமே இல்லாத அவனுக்கு
முடிவும் இல்லை
அவன் கற்றுத்தந்தத் தமிழுக்கு
சொர்க்கத்திலும் தடையில்லை!
தமிழ் -
தோண்டத் தோண்டக் குறையாத
பொக்கிஷப் புதையல்!
ஆதி மனிதன்முதல்
இன்று பிறக்கும்
பால்குடி பிள்ளை வரை
சேகரித்து வைத்திருக்கும்
செல்லரித்துப்போகாத
செப்புக் குவியல்!
உலக மக்களே விரைந்து வாருங்கள்!
சாகா வரம் பெற்ற
#எங்கள்
#செம்மொழிக்குருதியின்
#மரபணுவில்
#உங்கள்
#வம்சாவளியின்
#முகவரியைத்
#தெரிந்துகொள்ளுங்கள்!
மறக்காமல் - உங்கள்
உள்ளமும் உதடுகளும் சொல்லும்...
மனிதகுலத்தின்
#முதல்மொழி
#நம்செம்மொழி
#தமிழென்று !
@ 2004 இல் மயிலாடுதுறையில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கியத் தமிழ் மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் நான் பாடிய கவிதயின் சில பகுதிகள்.. !
-அபு ஹாஷிமா
--------------------------------------------
அந்த மாநாட்டில் எனது அண்ணன் நீடூர் வக்கீல் சயீது அவர்கள்
முகம்மது அலி
No comments:
Post a Comment