நாற்பதுகளை நெருங்குகையில்
நீ மிகுந்த பதட்டத்துடன் உன் உடலை
மீண்டும் மீண்டும் பரிசோதித்துக் கொள்கிறாய்
உன் பால்யகால தோழிகளை
விசேஷ வீடுகளில் சந்திக்க நேர்கையில்
புத்தம்புதிய நோய்களை அறிந்து கொள்கிறாய்
அந்நோய்கள் உன் படுக்கையறைக்குள் பதுங்கியிருந்து
தாக்குவதாகக் கனவுகண்டு
திடுக்கிட்டெழுந்து வியர்த்து விதிவிதிர்க்கிறாய்
இன்னும் முதுமையின் நிழல் படியாத கணவனின்
வேகத்துக்கு ஒத்துழைக்க முடியாத இயலாமை உறுத்த
அவன் வேறுயாரோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும்
திருமணம் செய்துகொள்வதாகவும்
மதியச் சிற்றுறக்கத்தில் பகல்கனவு கண்டு நிம்மதி தொலைக்கிறாய்
இப்போதெல்லாம் படியேற முடிவதில்லை
மூச்சிரைக்கிறது.
அடிக்கடி கோபம் வருகிறது.
சொல்பேச்சு கேட்பதில்லையென பிள்ளைகள் மீது
தன்னை கவனிப்பதில்லையென கணவன் மீது
முரண்டு பிடிக்கிறார்களென பணியாளர்கள் மீது
ஒத்துழைப்பதில்லையென அம்மா மீது
நரைமுடிக்கு ஆலோசனை சொல்கிறார்களென உறவுக்காரர்கள் மீது
பருவகாலப் புகைப்படங்களில் ததும்பி நிற்கும் தன் யௌவனத்தின் மினுமினுப்பு
இன்று கணவனின் பளபளப்பிலும்
குழந்தைகளின் தளதளப்பிலும் தென்படுவது கண்டு பதைபதைக்கிறாய்
இனிச் செல்லவே முடியாத இளமையின் ஜொலிப்புக்குள்
ஒரு மின்னலாய் வெட்டிப்புகும் வரம்வேண்டி
நெக்குருகப் பிரார்த்திக்க ஆரம்பிக்கிறாய்.
பதிவர்:
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment