Friday, December 2, 2016

தங்கங்களே...

தங்கம் குறித்த சட்டத்தை கேலி செய்ய வேண்டாம், என்று இன்பாக்சில் ஆலோசனைகள் வருகின்றன. உங்களிடம் வருமானத்துக்கு அதிகமான தங்கம் இருக்கிறதா? இல்லை என்றால் பிறகென்ன கவலை என்று கேள்விகள் வருகின்றன.
என்னிடம் கவலைப்பட வேண்டிய அளவுக்கு ஏதும் கிடையாது. (வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதை மீட்க அரசு ஏதாவது உதவி செய்யுமானால் மகிழ்வேன்.) புழக்கத்திலிருக்க வேண்டிய பணத்தை தங்கமாக முதலீடு செய்வது பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்கிற தத்துவங்கள் எனக்கும் தெரியும். வாயைக் கட்டி சேமித்து வாங்கும் தங்கத்தை ஒரு ஃபால்பேக் ஆப்ஷனாகவே மக்கள் கருதுகிறார்கள் என்கிற நடப்பும் தெரியும்.
அவ்வளவு ஏன், என் மனைவிக்கு மாமானார் கொடுத்த 10 பவுன் தங்கத்தை விற்றுத்தான் சென்னையில் மனை வாங்கினேன். அந்த மனையை விற்றுத்தான் இப்போதைய தொழிலுக்கு முதல் லேசர் பிரின்டர் வாங்கினேன்.
அதுவல்ல இப்போதைய விஷயம்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அரசு தங்கத்துக்கு அளவு குறிக்காமலே நடவடிக்கை எடுக்க முடியும். அது தங்கமா வெள்ளியா பிளாட்டினமா என்பதல்ல, காட்டப்பட்ட வருமானத்துக்கு மேற்பட்டதா இல்லையா என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டுமே தவிர, கல்யாணமான பெண்ணுக்கு இவ்வளவு, கல்யாணமாகாத பெண்ணுக்கு இவ்வளவு என்றெல்லாம் சொல்வது அபத்தம். கல்யாணமாகி பிரிந்து வாழ்பவர்கள் இத்தனை கிராம் வைத்துக் கொள்ளலாம் என்று தனியாக விதிப்பார்களா தெரியவில்லை !
அது என்ன தங்கத்துக்கு மட்டுமே வரம்பு? கறுப்புப் பணத்தில் வாங்கப்பட்ட மற்ற சொத்துகளுக்கு வரம்பு கிடையாதா? எத்தனையோ பேர் பங்களாக்களை / அபார்ட்மென்ட்களை வாங்கிக் குவித்திருக்கிறார்களே, அதற்கு உச்சவரம்பு வராதா? அது ஏன் பாரம்பரியத் தங்கத்துக்கு விதிவிலக்கு? பாரம்பரியத் தங்கத்தை அழித்து புதிய நகை செய்திருந்தால் என்ன செய்வார்கள்? பாரம்பரிய நகைகள் யாரிடம் இருக்கும் என்பது தெரியும்தானே? பாரம்பரியமாக நகை வைத்திருக்க வாய்ப்பில்லாத ஒருவர் கைக்கு வேறொருவரின் பாரம்பரிய நகை வந்து சேர்ந்து விட்டால் என்ன செய்வார்கள்?
இப்படி கேள்விகளை எழுப்பிப் பார்த்தால், இது தங்கம் பற்றியது மட்டுமே அல்ல, அதற்கும் மேலே ஏதோ இருக்கிறது என்பது புரிய வேண்டும். குறிப்பிட்ட சிலர் விதி விலக்குப் பெற முடியும் என்பதும் புரிய வேண்டும். அதே சமயத்தில், இது கணக்கில் காட்டாத வருமானம் என்ற விஷயத்தை உள்ளடக்கியது என்பது புரிய வேண்டும். இதில் புதிதாக ஏதும் இல்லை, ஏற்கெனவே இருப்பதன் திருத்தம்தான் என்றால், இன்று இந்த அறிவிப்பு ஏன் என்பதுதான் கவனம் பெற வேண்டியது.
ஏடிஎம்கள் நிலைமையில் 15 நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏடிஎம்களின் ரீகாலிப்ரேஷன் குறித்து 15 நாட்களுக்கு முன் என்ன எழுதினோமோ அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. வங்கிகளின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. ஓய்வூதியம் பெற வேண்டிய முதியவர்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் நின்று பணமில்லாமல் திரும்பியிருக்கிறார்கள். மாத முதல்வாரத்தில் எல்லாருக்கும் பணத்தேவை இருக்கிறது. அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
அந்தப் பிரச்சினைகளிலிருந்தெல்லாம் ஒரே அடியில் திசை திருப்பிவிட்டது தங்க விவகாரம்.
பெரியவர்களாகச் சேர்ந்து நடத்தும் நாடகம் அல்லவா? நடக்கட்டும், பார்ப்போம்.

Shahjahan R

No comments: