'பெண்களுக்கு சம உரிமை வேண்டும்’ என்று நம் நாட்டில்
சில சமூக அமைப்புக்கள் போராடி வருகின்றன. இதில் சேலை கட்டிய ஆண்களும் பேண்ட் போட்ட பெண்களும்தான் அங்கம் வகிக்கின்றார்கள்.
சில அரசியல் இயக்கங்களும் அரசியல் ஆதாயத்துக்காக அவ்வப்பொழுது இதைக் கையில் எடுத்து கொண்டு ஆர்ப்பரித்து வருவதையும் காண்கிறோம்.
உண்மையில் சிந்தித்துப் பார்த்தால்,
நமது தேசத்தில் பெண்களுக்கு இயல்பாகவே தரப்படும் அன்பும் மரியாதையும் பாசமும் நேசமும் ஆண்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை விட அதிகம்.
பெண்களைத் தாயாகவும் சகோதரியாகவும்தான் நாமெல்லோரும் பார்க்கிறோம்;நினைக்கிறோம்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று பார்த்தால் அது நமது பாரம்பரியத்துக்கு விதிவிலக்குகள் என்றுதான் கருத வேண்டும்.
அது கூட சம்பந்தப் பட்ட பெண்களின் வரம்பு மீறிய ஆபாச உடைத் தோற்றம், மேலை நாட்டு நாகரீகப் பழக்கங்கள் முதலான நடத்தைகளின் பின்னணியினால்தான் அதிக பாலியல் குற்றங்கள் நடக்கக் காரணம் என்பதை உற்றுப் பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம்.
“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்றான் மாகவி பாரதி.
மாதர்கள் இழிவுபடுவதற்குக் காரணமான விஷயங்கள் ஆராயப்படுமானால் அவை நமது பாரம்பரியப் பண்புகளுக்கு எதிரான குணங்கள் என எளிதில் புரிய வரும்.
எனவே 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைத் தனமான நாகரீக மோகத்தைத்தான் பாரதி அவ்வாறு குறிப்பிடுகின்றான்' என்பேன்.
நமது தேசத்தில் பெண்களுக்குத் தரப்படும் உயர்மதிப்பும் கௌரவமும் போல் வேறு எந்த தேசத்திலும் தரப்படுவதில்லை.
இங்கே, 'உலக மயமாக்கல்' (Globalization) என்பது நமது பெண்களின் தரமான வாழ்விற்கு எதிரானது; அவர்களை இழிவுக்குள் தள்ளிவிடும் அபாயம் மிக்கது.
நமது பெண்களின் பாரம்பரியக் குணத்தையும் பாதுகாப்பு மிக்க அவர்களின் வாழ்க்கை முறைமையையும்
முழுமையாக ஆதரிப்பவன் நான்.
ஆனால் மடமைமிகும் மாதர்களிடம் இருக்கும் மன்னிக்க முடியாத உரிமை மீறல்களை யார் கண்டிப்பது?
இன்று இல்லறம் சிதைந்து நல்லறம் நாசமாக்கப்பட்ட கதைகளுக்குக் காரணமான பெண்களைப் பற்றிய உண்மைகள் தெரிய வரும்போது, இதே ‘மாதர்நலம் காக்கும் அமைப்புக்கள்’ அத்தகைய பெண்களைக் கண்டிக்கவும் சட்டத்தின் மூலம் தண்டிக்கவும் முன் வர வேண்டாமா?
பிறகு எப்படி சமத்துவம் வளர்க்கப்படும்; காக்கப்படும்?
என்னைப் பொறுத்தவரை.....
பெண்கள் தங்களுக்கே உரிய இயற்கைப் பண்புகளுடன் தங்களை வளர்த்துக் கொள்வார்களானால் இந்திய சமூகத்தில் அவர்கள் பெறுகின்ற மதிப்பும் மரியாதையும் சட்டக் கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் தாண்டிய மரியாதையைப் பெறுவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கு மாறாக-
நாகரீகம், புரட்சி, புதுமை, சமத்துவம் என்ற அறிவு மங்கிய கோஷங்களில் ஈர்க்கப்படுவார்கள் எனில் அவர்கள் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே மதிப்பை இழக்கிறார்கள்.
பிறகு 'மதிப்பிழந்தோர் சங்க மாதர்கள்' என்று ஒன்று உருவாகி, வீட்டை விட்டுத் தெருவில் வந்து கோஷம் போட்டு முழங்குவதில் எந்த ஒரு மாற்றமும் வரப் போவதில்லை.
பெண்ணீயம் பேசுகின்ற பேதைகளுக்கு இது புரிய வேண்டும்.
அதே சமயம் நாம் வாழும் மண்ணுக்கேற்பவும் மக்கள் சமுதாயத்தின் பண்புக்கேற்பவும் உருவான சித்தாந்தச் சிந்தனைகளைப் பெருமைப்படுத்துகிற புதுமையையும் புரட்சிகர எண்ணங்களையும் வார்த்தெடுப்போம்; அவ்வாறு சிந்திப்போரையும் வரவேற்போம்!
இவண்-
கிருஷ்ணன்பாலா
கிருஷ்ணன்பாலா
No comments:
Post a Comment