Friday, December 30, 2016

உலகத்தை நினச்சேன்....சிரிச்சேன்

Dr.Vavar F Habibullah
வாரிசு விவகாரத்தில்... கிரேக்க, ரோம
சாம்ராஜ்யம் தொட்டு அனைத்து உலக அரசியல்
கோபுரங்களும் தலைகீழாக புரண்ட வரலாறுகள் சிந்திக்க தூண்டுகிறதோ இல்லையோ நம்மை வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறது.
மகன், மகா அலக்சாண்டரை பதவியில் அமர்த்த கணவன்.. மன்னன் பிலிப்பை மகாராணியார் ஒலிம்பியா கொன்றாராம்.இளம் வயதிலேயே மாண்டு போன மகனின் வாரிசுகள் எதுவும் அலக்சாண்டரைப் போல் கிரேக்கத்தை கட்டியாள முடியவில்லை.மகாராணியாரை நாட்டு மக்களே கல்லால் அடித்து கொன்றது தான் கிரேக்க சாம்ராஜ்ய வரலாறு.
ரோமில், ஜூலியஸ் சீசர் மன்னனாக முடி சூட பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.நண்பர்களை கொன்றே பதவிக்கு வந்த சீசர்... நண்பன்,
புரூட்டஸ் கரங்களால் கொல்லப்பட்டது தான் வேடிக்கை.சீசருக்கும் அவன் காதலி எகிப்திய பேரழகி கிளியோபாட்ராவுக்கும் பிறந்த மகன் ரோமை அரசாள்வான் என்று பார்த்தால்... அவனை கொன்றொழித்து ஆட்சியை கை
பற்றுவதில் குறியாக இருந்தான் சீசரின்
மருமகன் அகஸ்டஸ். கிளியோபாட்ரா தற்கொலை செய்தது வேறு விஷயம்.
ரஷயாவின், ஜார் மன்னனை விட்டார்களா அவனது எதிரிகள். இல்லை... அவனது
வாரிசுகளைத்தான் விட்டு வைத்தார்களா...

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த லெனின் சொன்னதை யார் கேட்டார்கள். லெனின் சற்றும் விரும்பாத ஜோசப் ஸ்டாலின் கரங்களில் தானே ஆட்சி வந்து வீழ்ந்தது.சரி... ஸ்டாலினின் வாரிசுகளால் ரஷியாவில் ஆட்சி கட்டிலில் அமர முடிந்ததா.. இயலவில்லை. குருஷேவின் கைகளில் தான் ஆட்சி அதிகாரம் வந்து வீழ்ந்தது.ஸ்டாலினின் எல்லா நினைவு சின்னங்களையும் அழித்தொழிப்பதிலேயே குருஷேவ் தீவிரம் காட்டினார்.
பிரான்சின், நெநப்போலியனை நீண்ட நாள் விட்டார்களா அவன் எதிரிகள்.இல்லை அவன் ஒரே மகனையாவது ஆட்சி கட்டிலில் அமர வைத்தார்களா அவன் நாட்டு மக்கள்.
உலகையே பயமுறுத்திய ஜெரமனியின் ஹிட்லர் தற்கொலை செய்வான் என்று
சர்ச்சில் கூட எண்ணவில்லை.இத்தாலியின்
முசோலினியை தலைகீழாக தொங்க விட்டு கல்லால் அடித்து துவைத்த மக்கள், அவன் பிள்ளைகளையாவது ஆட்சி கட்டிலில் அமர வைத்தார்களா.
சதாமுக்கும் சரி, கடாபிக்கும் சரி.. தீர்ப்பு
ஒன்றாகத்தான் இருந்தது. அமெரிக்க அதிபர்களில் கூட, ஜார்ஜ் புஷ் குடும்பத்தை தவிர மற்றவர்களின் வாரிசுகள் அதிபர்கள்
ஆன வரலாறு இல்லை.
நமது திருநாடும் இதற்கு விதி விலக்கல்ல.
அக்பர் பாதுஷா கூட மகன் ஜஹாங்கீரை கண்டு பயந்து அவருக்கு முடி சூடினார். ஜஹாங்கீரின் மகன் ஷாஜஹானை பதவிக்கு வரவிடாமல் மன்னரின் அந்தப்புரமே சதி வேலைகளில் இறங்கியது. அனைத்து சதிகளையும் முறியடித்துத் தான் ஷாஜஹானால் பதவியில் அமர முடிந்தது. ஷாஜஹானின் மகன் அவுரங்கசீப் சரியான போக்கிரி. தந்தை என்றும் பாராமல் கைது செய்து சிறையில் தள்ளி...
8 வருடங்கள் தண்டனை பெற வைத்தார் அருமை மகன் அவுரங்கசீப். தந்தையின் பெயரால் நினைவு சின்னம் அமைக்கவும் தடை விதித்தார்.
நம்ம காந்தி தாத்தா ஒரு அரசியல் துறவி.
நமது காமராஜர் மாதிரி அந்த நாள் கிங்
மேக்கர்.நேருவை பிரதமராக்கினார்.சம்பந்தி ராஜாஜியை இந்தியாவின் முதல் கவர்னர்
ஜெனரல் ஆக்கினார்.ஆனால் தன் பிள்ளைகளை அரசியலுக்கு அழைத்து வரவில்லை.
தமிழ் நாட்டில் முதல்வர் பதவியை தூக்கி எறிந்த பெருமை காமராஜரைச் சாரும்.பின்னர் நம் மக்களும் அவர் சார்ந்த கட்சியை தூக்கி எறிந்து விட்டனர்.
தந்தை பெரியாருக்கு வாரிசுகள் இல்லை.அண்ணா வளர்ப்பு பிள்ளைகளை அரசியலுக்கு அழைத்து வரவில்லை.எம்ஜிஆர் அரசியல் வாரிசாக எவரையும் கடைசி நேரத்தில் நியமனம் செய்யவில்லை.ஜானகி ஜெயா வாரிசுரிமை போரில் ஜெயலலிதா வென்றார்.அரசியலில் வாகை சூடினார்.அவரும் தனக்குப் பின் வாரிசு இவர் என்று எவரையும் அறிவித்து செல்லவில்லை.
அவரது தோழி சசிகலா தான் அவரது அரசியல் வாரிசு என்று அதிமுக தொண்டர்கள் முழுமனதோடு ஏற்றுக் கொண்டது வியப்பை தருகிறது. அவரது அரசியல் பேச்சுக்களை தமிழக மக்கள் இதுவரை கேட்டதில்லை.அவரது அரசியல் ஆளுமைத் திறன் பற்றி தமிழக மக்கள் இனிமேல் தான் தெரிந்து கொள்ள முடியும்.
கட்துரோட் தமிழக அரசியலில் ஒரு பெரிய ஆளும் கட்சியின் சர்வ அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளராக அவர் கட்சியால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஒரு சாதனை என்றே இப்போது சொல்ல முடிகிறது.
நடிகர்கள் தலைமையில் செயல்பட்ட ஒரு கட்சி கவர்ச்சி அரசியலில் இருந்து விடுபட்டு
நடிகர் அல்லாதவர்களால் தலைமை ஏற்று நடத்தப்படுவது தமிழக அரசியலில் ஒரு மாற்றம் என்று சொல்லலாம்.இது இந்த கால கட்டத்தில் விரும்பியோ - விரும்பாமலோ
மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாகவே படுகிறது.
எந்தவித உட்கட்சி போட்டியோ - பூசலோ இல்லாமல் கட்சியின் தலைமை இடத்திற்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் ஒருபுதுமை.
இவரை எதிர்த்து போட்டியிடும் தகுதி பெற்றவர் எவரும் இப்போது அந்த கட்சியில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.எம்.பிக்களும் எம்எல்ஏக் களும் அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட தன் மூலம் அவர் முதல்வராவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம்.
தமிழகத்தில் முதல்வராக வரத் துடிக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இவரது அரசியல் பிரவேசம் ஒரு அதிரடி திருப்பு முனை தான்.அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரை வாழ்த்தி வரவேற்போம்.


Vavar F Habibullah

No comments: