Sunday, July 31, 2016

கற்றலும் நிற்றலும் ....!

காசு பணம் சம்பாதிப்பதற்காவே கல்வி கற்பது என்றாகிப்போன பொருள்சார் உலகில் எங்கிருந்து நிற்பது? எல்லாரும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
இயற்கையே மனிதனுக்கு நல்ல ஒரு ஆசான். காலையில் வீட்டினுள்ளே போடப்படும் செய்தித்தாளை அப்பாவிடம் கொண்டு கொடுக்கவும், காய்கறி விற்கும் பாட்டி வந்ததும் அம்மாவிடம் போய்ச்சொல்வதும் மழலையர் இயற்கையாக செய்கின்றனர். யாராவது சொல்லிக் கொடுத்தார்களா என்ன ?

இயற்கையாகவே பார்த்துப்படிக்கும் பண்பு மனிதனுக்கு இறைவன் அளித்த வரம். ஒவ்வொரு பருவத்திலும் தானாகவே படித்துக் கொள்ள வாய்ப்புகளுடனே இயற்கை வாழ்வு பின்னப்பட்டுள்ளது. அதன்படியே சென்று கற்றுக்கொள்ளுதல் இயற்கையான கல்வியை கற்றுத்தரும் மேலும் அதன் வழியே நிற்கவும் வழிவகைகளை கற்பித்தும் தரும். ஆனால், இயற்கையினூடான பின்னலைப் பிரித்து அதிவிரைவாக அத்தனையையும் கற்றுக்கொள்ள விழைவதே நாகரீக கற்றலின் தலையாய வழியாக வற்புறுத்தப் படுகிறது. வற்புறுத்தலினால் கற்கப்படும் பலவும் அதன்படி நிற்க கற்பிப்பதில்லை.
'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்பது காலாகாலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை, அழிவே இல்லாதது. ஆனால் அது எவ்வளவு பெரிய மந்திரம் என்பதை நாமெல்லோரும் உணர்ந்திருக்கிறோமா? தாய் தந்தை அல்லாது வேறெவரும் தனது சேய்க்கு நன்மை பயப்பதல்லாததை உணர்வுபூர்வமாக சொல்லித்தர முடியுமா என்றால் அது சந்தேகமே.
மாதா, பிதா, குரு என்று வரிசைப்படுத்தி இருப்பதிலிருந்தே கல்வி கற்கும் வரிசையும் அமைகிறது. குழந்தைகளுக்கு விபரம் தெரியவரும்வரை அத்தனையையும் கற்றுக்கொடுப்பது தாய் தந்தையின் கடமையாகும். அதன் பின்னரே குருவிடம் கற்கும் கல்வி பலன் தரும் மேலும் கற்றபடி நிற்கும் தகுதியையும் பெற்றுத்தரும்.
பால்குடி மாறும் முன்னரே மழலையரை பகல்நேர பள்ளியில் (Day Care Centre) சேர்த்துவிட்டு வேலைக்கு ஓடும் தாயும் தந்தையும் எந்த மந்திரத்தை எப்போது சொல்லித்தர முடியும்? உறக்கத்திலா?
உறங்கும்போதாவது தாயின் அரவணைப்பு இப்போது கிடைக்கிறது. வரும்காலங்களில் அதுவும்கூட எட்டாக்கனியாகிவிடுமோ !
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.


ராஜா வாவுபிள்ளை

No comments: