by நிஷா மன்சூர்
மம்மூட்டியின் அழகன் படம் வெளியான 1991-ல் நான் ஒரு ஜவுளிக்கடையின் சேல்ஸ்மேனாக பணியில் இருந்தேன்.பள்ளியிறுதி முடித்து உலகை தனியாகவும் சுதந்திரமாகவும் அணுகக்கிடைத்த அற்புதமான வாய்ப்பு அது.
இரவு ஒன்பதரை அல்லது பத்து மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு முதலாளிக்கு குட்நைட் சார் சொல்லிவிட்டு ஓட்டமாய் ஓடி நண்பர்களுடன் குழம்பு இல்லாமல் வெறும் பரோட்டா பார்சல் வாங்கிவிட்டு(அம்பிகா மெஸ்ஸில் பஞ்சுபோல சூப்பராக போட்டுக் கொடுப்பார்கள் அப்போது) ஓட்டமும் நடையுமாக செகண்ட் ஷோ சினிமாவுக்குச் சென்றுவிடுவோம்.வாரத்தில் மூன்றல்லது நான்கு படங்கள் கண்டிப்பாக பார்த்துவிடுவோம்.படம் பார்த்துக்கொண்டே பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு விசிலடித்துக் கூச்சலிட்டும் சமயங்களில் ஆட்டம்போட்டும் கிண்டலடித்தும் ஆர்ப்பாட்டமாக படம் பார்ப்போம்.அப்படித்தான் வாசன் தியேட்டரில் அழகன் படத்தையும் பார்த்தோம். வாசன் தியேட்டர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பூட்டப்பட்டுக் கிடக்கிறது. ஏதோ பங்குதாரர்களுக்கிடையே தகராறு என்று பேசிக்கொள்கின்றனர்.
அழகன் படத்தில் உண்மையிலேயே மம்மூட்டியை அழகாகக் காட்டியிருப்பார்கள்.அவரது அசால்ட்டான அணுகுமுறை மெல்லிய பூடகமான சிரிப்பு என்று அற்புதமாக நடித்திருப்பார்.பானுப்பிரியா அப்போதெல்லாம் எங்கள் கனவு நாயகியாக இருந்தார்.அந்தக் கண்களும் உதட்டுச் சுழிப்பும் வாளிப்பான உடல்வாகும் மிகுந்த பிரேமையை ஏற்படுத்தியிருந்தது அவர்பால். விஜயகாந்த்தின் மிகச்சுமாரான சத்ரியன் படத்தையே பானுப்பிரியாவுக்காகத்தான் நான்கைந்து தடவைகள் பார்த்திருப்போம் (அதில் திலகனின் வில்லத்தனத்தை ரசித்தது இன்னொரு சுவாரஸ்யமான சேதி) அழகனில் வரும் "சங்கீத ஸ்வரங்கள் ஏழேகணக்கா" பாடல் அந்தக் காலகட்டத்தின் நாகரீகக் காதலின் உச்சக்கட்ட அடையாளமாக இருந்தது.பாடல் வரிகளும் காட்சியமைப்பும் அத்தனை அற்புதமாக இருக்கும். தூர்தர்ஷனின் பிரத்யேகமான தீம் இசையை அழகாகப் பயன்படுத்தி இருப்பார் டைரக்டர்.
அந்த தீபாவளியில்தான் பிரிண்டெட் சர்ட்டிங் டிசைன்கள் அறிமுகமாயின.அதுவரை பிரிண்டிங் என்பவை பெண்களின் பாவாடைகளுக்கு மட்டுமே உரியவை என்கிற பொதுப்புத்தியை உடைத்து ஆண்களையும் அணிவிக்க ஒரு சினிமா செலிபிரடியின் பங்கும் உதவியாக இருந்தது.அழகனில் மம்மூட்டி அணிந்திருப்பதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில பிரிண்டட் சர்ட்டுகளை "அழகன்" சர்ட்டிங்ஸ் என்று அறிமுகப்படுத்தினேன்.அறிமுகம் என்றால் இப்போது செய்வதுபோல ஆர்ப்பாட்டமாக அல்ல.சர்ட் எடுக்க வரும் இளைஞர்களிடம் "சார் இது எடுத்துக்கோங்க சார்,அழகன் டிசைன்...அழகன் படத்துல மம்மூட்டி போட்டிருப்பார்.அதுதான் இப்போ ஃபேஷன்.
ஸ்டிச் பண்ணிப் போட்டீங்கன்னா சூப்பரா இருக்கும்.நீங்களும் மம்மூட்டி மாதிரித்தான் சார் இருக்கீங்க" என்று பேசிப்பேசித்தான். சீசனில் ஒரேநாளில் நான்கைந்து பீஸ்கள் வரை விற்றுத்தீர்த்து விடுவேன்.
கஸ்டமர்களும் நான் இருந்தால்தான் பர்ச்சேஸ் செய்வார்கள், சாப்பாட்டுக்கோ வெளியிலோ சென்றிருந்தால் "மன்சூர் வரட்டும்" என்று காத்திருப்பார்கள்.ஒருமுறை கஸ்டமர்கள் காத்துக்கொண்டிருந்ததைக் கண்ட முதலாளி ஏன் எதற்கென்று விசாரிக்க.... அந்த நேரத்தில் நான் மானசீகமாகக் காதலித்துக் கொண்டிருந்த ஒருத்தி நான் விற்பனை செய்யும் அழகைப்பற்றியும் கஸ்டமர்கள் என்மீது கொண்டிருக்கும் அன்பைப் பற்றியும் அழகாக விபரித்திருந்ததை சக சேல்ஸ்மேன் நாகராஜ் தேநீர் இடைவெளியில் கிண்டலடித்தவாறே சொன்னான்.அதன்பின்னர் அந்தத் தேன்மொழியின்மீதான என் காதல் பன்மடங்காகப் பிரவாகமெடுத்தோடியதையும் அதன் காரணமாக அவளது முறைமாப்பிள்ளைக்கும் எனக்கும் இரவு பதினோரு மணிக்கு ஆத்துப்பாலத்தில் கைகலப்பு நேர்ந்ததையும் இன்னொரு முறை சொல்கிறேன்.
இவ்வளவு விரைவாக விற்பதைப் பார்த்த முதலாளி மீண்டும் அந்த மூன்று டிசைன்களில் மட்டும் தனித்தனியாக ஒவ்வொரு பேல்கள் வரவழைத்தார்.புதுச் சரக்கு வரும்வரை காத்திருப்பார் பட்டியல் பத்துபேருக்கும் மேலாக ஆகிவிட்டது. அவை வந்தவுடன் ஒரே நாளில் ஒரு பேல் காலியாகி விட்டது.முதலாளி சர்ட்டிங் கவுண்ட்டர் அருகில் வரும்போதெல்லாம் என்னைப்பார்த்து சிரித்தபடியே "அழகன் பாய் " என்பார்.
தீபாவளிக்குப் பிறகு பாம்பேயிலிருந்து வந்த மில்லின் ரெப்ரசெண்டேடிவ்" அந்த பிரிண்டட் டிசைன் நீங்கதான் சார் நிறைய வித்திருகீங்க" என்று சொன்னதற்கு முதலாளி அவனை என்னிடம் அழைத்துவந்து
"அது வெறும் பிரிண்டட் டிசைன் இல்லங்க அது அழகன் டிசைன்...அந்த அழகன் டிசைனை வித்துத்தீர்த்த பேரழகன் நம்ம மன்சூர் பாய்தான்" என்று அறிமுகம் செய்து வைத்தார். சங்கீத ஸ்வரங்கள் இப்போது என்மீது பிரவாகமெடுத்து ஓட நானும் ஒரு உயிரை உருக்கும் இசையின் ஒலிக்குறிப்பாகவே மாறிவிட்டிருந்தேன்.
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment