Sunday, October 12, 2014

எம்.ஜி.ஆரும் எங்களுர்க்காரரும் – (தொடர் 1)

1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான  “குலேபகவாலி” வெளிவந்தது.  அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில்   ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது.  அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது.  கதை-வசனம்  கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்”  படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும்  “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.
1960-ஆம் “பாக்தாத் திருடன்” படம் வெளிவந்தது. பாராசீக மண்ணின் வாசனை தமிழ்த் திரையுலகத்திற்கு புதுமை சேர்த்தது. திரைக்கதை-வசனம் இரண்டடையுமே எழுதியது எஸ்.எஸ்.முத்து என்று  காண்பிப்பார்கள். அதுவும் கடைந்தெடுத்த பொய்.

1966-ஆம் ஆண்டு “சந்திரோதயம்”  படத்திற்கு கதை வசனம் எழுதியது ஏ.கே.வில்வம் என்றுதான் இதுவரை  எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலிருந்த வில்லங்கம் யாருக்குமே தெரியாது.

1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் “அரசகட்டளை” படம் வெளிவந்தது. உண்மையில் இப்படத்தின் வசனத்தை எழுதியது யார் என்பதை மூடி மறைத்தார்கள். அரசகட்டளை உருவான கதையை பின்வரும் தொடரில் விலக்குகிறேன்.

1968-ஆம் ஆண்டு வெளிவந்த “அடிமைப் பெண்”  படத்திற்கு கதை எழுதியது எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும்  டைட்டிலில் காண்பிக்கப்படும்.

அதே 1968-ஆம் ஆண்டு “கணவன்” படம் வெளிவந்தது. எம்.ஜி.ஆர். முதன் முதலில் கதை எழுதியிருக்கிறார் என்று அத்தனை பத்திரிக்கைகளும் பாராட்டுக்களைக் குவித்தன.  எம்.ஜி.ஆருக்கு பின்னாலிருந்த அந்த Ghost Writer யார் என்று யாருக்குமே தெரியாமல் போனது.

1976-ஆம் ஆண்டு, கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த “உழைக்கும் கரங்கள்” படத்தில்  கதை-வசனம் எழுதியது நாஞ்சில் மனோகரனாம். நம் காதில் நன்றாக பூ சுற்றுவார்கள்.  ‘கேட்பவன் கேணயனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது’ என்பார்களே அதுபோலத்தான் இதுவும். இதுதான் சினிமா உலகத்தின் குரூரமான மறுபக்கம். இரவு, பகலாக விழித்திருந்து காதிதக் குவியலுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக வசனத்தை எழுதி தள்ளியது வேறொருவர்.

1973-ஆம் ஆண்டு “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்தது. கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா என்றும், வசனம் எழுதியது சொர்ணம் என்றும் விளம்பரப்படுத்தினார்கள். உண்மையில் இதன் திரைக்கதையை அமைத்தது யார் என்ற உண்மையை  ரசிகர்களுக்கு வெளிப்படுத்தவேயில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை படங்களுக்கும் வசனம் எழுதியது நாகூரைச் சேர்ந்த ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன் என்பவர்தான். கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது அல்லவா?

இதில் பெரும்பான்மையான  படங்களுக்கு வசனம் மாத்திரம் அல்ல மூலக்கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்துக் கொடுத்ததும் இந்த வாயில்லா பூச்சிதான்.

எழுதியது இவர். ஆனால் பேரையும் புகழையும் குவித்ததோ வேறொருவர். என்ன இது அநியாயமாக இருக்கிறது என்கிறீர்களா?  சந்தேகமேயின்றி இது பெரிய அநியாயமேதான். This is just a tip of the iceberg. இப்படி வெளிவராத உண்மைகள் எத்தனை எத்தனையோ..!!

‘காத்திருந்தவன் பொண்டாடியை நேத்து வந்தவன் தூக்கிட்டுப்போன கதை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்களே. அதுதான்  இது.

‘முழுபூசணிக்காயை சோற்றில் வைத்து மறைப்பது’  போன்று அவரது புகழை வெளியுலகத்திற்கு தெரியாதவாறு மறைத்தார்கள்’. கேட்டால் ‘சினிமா உலகில் இதெல்லாம் சகஜமப்பா’ என்பார்கள். மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பது வேறொருவன் என்ற கதை.

 படைப்பாளிகளை செதுக்கிய நாகூர்

இந்த காஜா மொய்தீன்தான் ரவீந்தர் என்ற புனைப்பெயரில் திரைப்பட உலகில் மகத்தான புரட்சி செய்தவர். அமைதியே உருவாக நின்று, கலைத்துறையில் அரிய பல சாதனைகள் புரிந்தவர். எந்தக் காலத்திலும் புகழுக்கு ஆசைப்படாத மனிதரிவர். தானுண்டு தன் பணியுண்டு என்ற சுபாவம்.  “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” என கிடைத்ததைக் கொண்டு திருப்தியுற்றவர். வேறொரு கோணத்தில் இவரை விமர்சிக்க வேண்டுமென்றால் “பிழைக்கத் தெரியாதவர்” என்று நாம் பட்டம் சூட்டிக் கொள்ளலாம்.

அல்வாவுக்கு பிரசித்தப்பெற்ற ஊர் நாகூர். நாகூர்க்காரரான இவருக்கு அல்வாவை அள்ளி அள்ளித் தந்தார்கள் சினிமாக்காரரர்கள். ‘குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டினால் போதும்’ என்ற வித்தையை இவருக்கு கற்றுத் தந்தது சினிமா உலகம். “வாங்குகிற சம்பளத்துக்கு வக்கனையாக வேலை பார்த்தால் போதும், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்ற பாடத்தை இவருக்கு போதித்தார்கள்.

நாகூரிலிருந்து திரையுலகை ஒரு கலக்கு கலக்க இரண்டு சூறாவளிகள் புறப்பட்டன. ஒன்று காஜா மொய்தீன் என்கிற “ரவீந்தர்”, மற்றொன்று  அக்பர் என்கிற “தூயவன்”.  (தூயவனைப் பற்றி பிற்பாடு விவரமான பதிவுகள் எழுத நினைக்கிறேன் – இன்ஷாஅல்லாஹ்)

நாகூர் தேசிய உயர்நிலை பள்ளி   –  இது எத்தனையோ படைப்பாளிகளை உருவாக்கிய கலாகேந்திரம். அன்றிலிருந்து இன்றுவரை பள்ளிக்கூடம் அதே தோற்றத்தில்தான்  இருக்கிறதே தவிர பலபேருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பள்ளி இது. நாகூரில் பிறந்த பெரும்பாலான பிரபலங்கள் இங்குதான் தங்களை செதுக்கிக் கொண்டார்கள். காஜா மொய்தீனுக்கு சிறுவயது முதலே எழுத்தாளன் ஆக வேண்டுமென்ற ஒரு பேரார்வம் மனதுக்குள் பொதிந்திருந்தது. அவருக்கு படிப்பில் இருந்த நாட்டத்தை விட கதை கட்டுரை, நாடகம் இதுபோன்ற இலக்கியத்துறையில்தான் ஆர்வம் மேலிட்டிருந்தது.

இன்பத்தமிழ் மணம் கமழும் இவ்வூரில் சுனாமி அலைகளைப்போன்று எளிதில் இளைஞர்கள் இலக்கியத் தாக்கத்திற்கு ஆளாகி விடுவார்கள் . ஏனெனில். இயல், இசை, நாடகம் இவை மூன்றும் பின்னிப் பிணைந்த ஊர் இது. ஆக்கமும் ஊக்கமும் அளிக்க அன்பர்கள் ஆர்வத்தோடு முன்வருவார்கள்.

1947-ஆம் ஆண்டு நாகூரில் இருந்துக்கொண்டே `பூ ஒளி` என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை நடத்துகிறார் ரவீந்தர்.  அவருடைய வீட்டில்  இதற்கு கடும் எதிர்ப்பு இருந்த போதிலும் நண்பர்கள் அவரை  மென்மேலும் ஊக்குவிக்கின்றனர். “இது தேவையில்லாத வேலை. உருப்படுவதற்குள்ள வேலயைப் பார்” என்று வீட்டார் அறிவுறுத்துகிறார்கள். அவருடைய எழுத்தாற்றலுக்கு நண்பர்களிடம் கிடைத்த பாராட்டுக்களில் திக்குமுக்காடிப் போன அவர் வாழ்க்கையில் ஏதெனும் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு தள்ளப்படுகிறார். எழுத்தார்வத்தால் தடைபட்டுப்போன தனது பள்ளிப்படிப்பை முடிக்க பிற்பாடு விடாமுயற்சியால் லண்டன் மெட்ரிக் பரிட்சை எழுதி தேர்ச்சியும் பெறுகிறார்.

“சமீபத்தில் நாடோடி மன்னன் படம் பார்த்து கொண்டிருந்த போது அதில் வசனம் என்று கவிஞர் கண்ணதாசனுடன் ரவீந்தர் என்ற பெயரைப் பார்த்தேன். யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை” என்று மனம் புழுங்குகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

நாடறிந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கே இந்த ஆச்சரியமென்றால் சராசரி பாமர மனிதன் ரவீந்தரை எங்கே தெரிந்து வைத்திருக்கப் போகிறான்?

“சொர்ணம்”, போன்றவர்களை அறிந்து வைத்திருக்கின்ற சினிமா ஆர்வலர்கள் ரவீந்தர் பெயரை அறிந்து வைத்திருக்கவில்லை, அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையில் திராவிட இயக்கத்தின் பிரபலங்களுக்கு தனியொரு முக்கியத்துவம் இருந்தது. மற்றவர்களுக்கு எத்தனை திறமை இருந்த போதிலும் அவர்களை இருட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆருடைய படங்களுக்கு, திராவிட இயக்கத்தின் பிரபலங்கள் கிட்டத்தட்ட 11 பேர் கதை-வசனம் எழுதினார்கள். அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன், இராம.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு, கே.சொர்ணம் ,ஏ.கே.விஸ்வம், முரசொலிமாறன், கே. காளிமுத்து, நாஞ்சில் கி.மனோகரன் முதலானோர். இவர்களுடைய பெயர்கள் பெரிதாக சுவரொட்டிகளிலும் பத்திரிக்கை விளம்பரங்களிலும் அலங்கரிக்கும். இந்த அதிர்ஷ்டம் ரவீந்தர் போன்ற படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை.

என் சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு நண்பரிடம்  “திரைப்படத்துறையில் ரவீந்தர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டுப்பார்த்தேன்.  “இதுகூடத் தெரியாதா.. என்ன? ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தாரே!” என்று ஒரு போடு போட்டார். நான் நொந்தே போனேன். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. சினிமா ஊடகங்கள் அவரை நினைத்தும் பார்க்கவில்லை. நினைவிலும் வைக்கவில்லை. அவர் மறைந்தபோதும் கூட ஊடகங்கள் அவரைக் கண்டுக்கொள்ளவில்லை.

பாடுபட்டு எழுதுவது ஒருவர். பெயரையும் புகழையும் தட்டிப் பறித்துக் கொண்டு போவது வேறொருவர். யார் இந்த கொடுமையை  தட்டிக் கேட்பது? தயாரிப்பாளர்கள் தங்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இது போன்ற Publicity Gimmicks கையாண்ட வண்ணம் இருந்தார்கள்.  பிரபலமானவர்களின் பெயர்கள் சுவரொட்டிகளில் இருந்தால் மட்டுமே படம் பெரிய அளவில் வெற்றி பெரும் என்ற எண்ணம் சினிமாக்காரர்களிடம் நிலை கொண்டிருந்தது. அதிகாரத்திற்கு முன்பு கலைத்திறமை கைகட்டி வேடிக்கை பார்த்தது என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.

முப்பத்திரண்டு திரைப்படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியவர் இந்த எழுத்துலக வேந்தர். ஆனால் இவர் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது சில படங்களுக்கு மாத்திரமே. பணத்தையும் பொருளையும் கொள்ளையடிப்பதை விட மிகக் கொடுமையானது பிறரின் திறமையை சூறையாடி அதில் ஆதாயம் தேடுவது. ரவீந்தர் இந்த சூழ்ச்சியில் பலிகடா ஆனது வருந்தத்தக்கது.

இப்பொழுதுதான் கதை வசனகர்த்தாவுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால் அன்றிருந்த சூழ்நிலை வேறு.  அக்காலத்தில்  வசனகர்த்தாக்களுக்கு இருந்த மரியாதையே தனி. படம் பார்க்க விழைபவர்கள் முதலில் வசனம் எழுதியது யார் என்றுதான் பார்ப்பார்கள்.. கதாநாயகனின் பெயரை டைட்டிலில் காண்பிப்பதற்கு முன்பாகவே மூலக்கதை அல்லது கதை-வசனம் எழுதியவரின் பெயரை பெரிய எழுத்தில் காண்பிப்பார்கள். வசனகர்த்தாக்களாக வந்து முதலமைச்சர் ஆனவர்களைப் பற்றி நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

கலைஞரின் பராசக்தி வசனம் காலத்தால் அழியாத ஒன்று.  அதில் இடம்பெற்ற வசனத்திற்காகவே படம் வெற்றிகரமாக ஓடியது. அறிஞர் அண்ணாவின் கைவண்ணத்தில் மிளிர்ந்த  “வேலைக்காரி”, மாபெரும் வெற்றிச்சித்திரமாக அமைந்தது. கே.ஆர்.ராமசாமி வக்கீலாக வந்து, “சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு” எமறு சொன்ன வசனம் நிலைபெற்று விட்டது.

ரவீந்தருக்கு எம்.ஜி.ஆரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது? அது ஒரு பெரிய கதை

டணால் தங்கவேலுவும் ரவீந்தரும்.

எம்.கே. ராதாவின் தந்தை கந்தசாமி முதலியாரின்  மதுரை  ட்ராமாட்டிக் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் ‘பதி பக்தி’போன்ற நாடகத்தில் 1935-ஆம் ஆண்டு முதலே எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். , என்.எஸ். கிருஷ்ணன், , எம்.ஜி.சக்ரபாணி, வீர்ராகவன் இவர்களோடு ஒன்றாக இணைந்து நடித்து வந்தவர் கே.ஏ.தங்கவேலு.

கலைஞர் கருணாநிதியை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரிடம் அறிமுகம் செய்த கா.மு.ஷெரீப்பை போன்று, எம்.ஜி.ஆரிடம் காஜா மொய்தீனை அறிமுகம் செய்து, அவருடைய எழுத்துலக வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் சிரிப்பு நடிகர் டணால் கே.ஏ.தங்கவேலு.  இது நடந்தது 1952 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்.

நாகூர் காஜா மொய்தீனுக்கு நோபல் பரிசுபெற்ற ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனை ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் எதார்த்தமாக சொல்லப்போக “ரவீந்தர்” என்ற அந்த பெயரையே அவருக்கு சூட்டி விட்டார். இந்த புனைப்பெயரே அவருக்கு இறுதிவரை நிலைத்தும் விட்டது. ரவீந்தருக்கு எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட அறிமுகம் ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்.

டணால்’ தங்கவேலுவின் சொந்த ஊர்  நாகூரை அடுத்த திருமலைராயன்பட்டினம். தங்கவேலுவுக்கும் ரவீந்தருக்குமிடையே நாடக ரீதியாகத்தான் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் இருவர்களுக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது,

டணால் கே.ஏ.தங்கவேலு சினிமா உலகில் நுழைந்து சிரிப்பு நடிகராக முத்திரை பதித்த நேரம் அது. “சிங்காரி”, “அமரகவி”, “கலியுகம்” , “பணம்” , “அன்பு” , “திரும்பிப்பார்”  போன்ற படங்களில் நடித்து பிரபல்யமாகியிருந்தார், “சிங்காரி” படத்தில் ‘டணால்’ ‘டணால்’ என்று கூறி நடித்ததினால் இவர் பெயர் ‘டணால் தங்கவேலு’ என்ற பெயர் ஏற்பட்டது.  சொந்த நாடகக்குழுவொன்றை ஏற்படுத்தி “மனைவியின் மாங்கல்யம்”, “விமலா”, “பம்பாய் மெயில்”, “லட்சுமிகாந்தன்” உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

ரவீந்தரின் திறமை எடுத்த எடுப்பிலேயே புரிந்துக் கொண்ட தங்கவேலு அவரை பயன் படுத்திக் கொண்டார். தன்னுடய நாடகத்திற்கு கதை-வசனம் எழுதும் பொறுப்பை அவருக்களித்தார். ரவீந்தரும் தன் பங்கைச் சரியாக செய்தார்..

தங்கவேலுவும்,  ‘நாம் இருவர்  படத்தின் மூலம் புகழ்ப்பெற்ற  சி.ஆர்..ஜெயலட்சுமியும்  இணைந்து  நடிக்க “மானேஜர்” என்ற மேடை நாடகம் அரங்கேறியது. கதை வசனம் யாவற்றிற்கும் ரவீந்தரே பொறுப்பேற்றிருந்தார்.  நாடகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரவீந்தரின் எழுத்தாற்றலில் மனதைப் பறிகொடுத்திருந்த தங்கவேலு அவரது திறமைக்கு தீனி போடும் வகையில் “உன்னை கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தில் நான் போய்ச் சேர்த்து விடுகிறேன்” என்று உறுதிபூண்டு எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் சென்று அவரை அறிமுகம் செய்தார்.

ரவீந்தருக்கு எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் கிடைத்தது இப்படித்தான்.

எம்.ஜி.ஆர். சினிமாத் துறையில் பெரிய அளவில் பிரபலமாகாத காலமது. அவர் தன்னை கலைத்துறையில் நிலைநாட்டிக் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்த நேரம். சொந்தமாக நாடகக் குழு அமைத்து நாடகங்கள் போட திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ‘கும்பிடப்போன தெயவம் குறுக்கே வந்தது போல’ ரவீந்தரின் எழுத்துத்திறமையை தங்கவேலு மூலம் தெரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர். பூரித்துப் போனார். ரவீந்தரை முறையாக பயன்படுத்தி கொண்டார்.

இவர் எம்.ஜி.ஆரோடு இணைந்த பிறகுதான் “எம்.ஜி.ஆர். நாடக மன்ற”மே உருவாகியது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திற்கு பொறுப்பாளராக ஆர்.எம்.வீரப்பன் வந்துச் சேர்ந்தார். ரவீந்தரை முன்னுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டதில் ஆர்.எம்.வீரப்பனுக்கு கணிசமான பங்கு உண்டு.  எம்.ஜி.ஆரிடம் தன்னைத் தவிர வேறு யாரும் நெருக்கமாகி விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். ரவீந்தரின் தலையில் யாரெல்லாம் மிளகாய் அரைத்தார்கள்; யாரெல்லாம் அவர் மீது குதிரைச் சவாரி செய்தார்கள்; அவரை எப்படி ஒப்புக்குச் சப்பாணியாக சேர்த்துக் கொண்டார்கள்;  எப்படியெல்லாம் அவர் ஓரம் கட்டப் பட்டார்;  என்பதை நாம் பின்னர் தெரிந்துக் கொள்ளலாம்.

பஞ்ச் டயலாக்

இப்போது வெளிவரும் படங்கள் அது ரஜினி படம் அல்லது  விஜய் படம் எதுவுமே ஆனாலும் அதில்  அதிரடி வசனங்கள் இருக்கவேண்டுமென ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். சண்டைக்காட்சிகள் இருக்குதோ இல்லையோ கண்டிப்பாக சூப்பர் ஹீரோக்களின் படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ இருந்தே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது.

இந்த பஞ்ச் டயலாக் Trend-யை சினிமாவுக்கு கொண்டு வந்த வசனகர்த்தாக்களில் ரவீந்தர் முன்னோடி வரிசையில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் வில்லன் நடிப்பில் முத்திரை பதித்து ரசிகர்களிடயே பெருத்த வரவேற்பை பெற்றவர்  பி.எஸ்.வீரப்பா. இப்போதுகூட யாராவது அட்டகாசமாகச் சிரித்தால் பி.எஸ்.வீரப்பாவின் நினைவுதான் சட்டென்று எல்லோருக்கும் வரும். ஒரு குரூரச் சிரிப்பைக்கூட ரசனையாக மாற்றியவர் அவர். காமெடிச் சிரிப்பால் வேண்டுமானால் குமரிமுத்து நம்மை கவர்ந்திருக்கலாம். அப்படியொரு வில்லத்தனமான சிரிப்பால் பி.எஸ்.வீரப்பாவிற்குப் பிறகுஎந்தவொரு வில்லனும் இதுவரை நம் மனதில் முத்திரை பதிக்கவில்லை,

1958-ஆம் ஆண்டு வெளிவந்த “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தில் பி.எஸ்.வீரப்பா பேசிய அந்த ஒரு வசனம் இன்றுவரை பரபரப்பாக பேசப்படுகிறது.  “சபாஷ்.. சரியான போட்டி” என்ற அவரது கணீர்க் குரல், ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்ற பாடலுக்கிடையே ஒலிக்கும். இப்படம் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம். ஆதலால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால், “வஞ்சிக்கோட்டை வாலிபன்” படம்  வெளிவருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே 1957-ஆம் வருடம்  “மகாதேவி” படம் வெளிவந்தது. மகாதேவியாக சாவித்திரியும், கதாநாயகனாக எம்.ஜி.ஆரும் நடித்திருப்பார்கள்.  பி.எஸ்.வீரப்பா அட்டகாச தொனியில் பேசிய “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்ற வசனம் திரைப்பட உலகில் ஒரு பிரளயத்தையே உண்டுபண்ணியது.  படம் வந்த புதிதில் எல்லோருடைய உதடுகளிலும் இந்த வசனம்தான் முணுமுணுக்கப்பட்டது. இன்றளவும் இது காலத்தால் அழியாத வசனமாக திரைப்பட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டது.

குறிப்பாக, காதல் வயப்பட்டு காதலியை கைப்பிடிக்க நினைக்கும் அத்தனை வாலிபர்களுக்கும் இந்த வசனம்தான் கைகொடுக்கும். பெரும்பாலோரின் தாரகமந்திரம். காதலர்களின் தேசிய கீதம். இப்படத்தில் இடம்பெறும் “வாள் பிடிக்கத்தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை ” என்ற வசனமும் மிகவும் பிரபலம் ஆனது.

 “மாப்பு..வச்சிட்டான்யா ஆப்பு” ,

“ஆணியைப் புடுங்க வேணாம்”,

“என்னை வச்சு எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே?”, 

“சரோஜா சாமான் நிக்காலோ !…”,

 ‘கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும் சிங்கம் சிங்களா தான் வரும்‘…

போன்ற இன்றைய வசனகர்த்தாக்கள் எழுதும் பஞ்ச் டயலாக்கையும், ரவீந்தர் அவர்கள் அன்று எழுதிய பஞ்ச் டயலாக்கையும் ஒருசேர ஒப்பிட்டு நோக்கினால் உண்மையான தரம் நமக்கு விளங்கவரும்..

ரவீந்தரின் கலைத்துறை வாழ்க்கையில் அவருக்கு  ஏற்பட்ட திருப்பங்கள், அவர் எப்படியெல்லாம் திரையுலகில் ஓரம் கட்டப்பட்டார் என்பதை இனிவரும் தொடர்களில் விவரமாகக் காண்போம்.


- நாகூர் அப்துல் கையூம்

(ரவீந்தர் அவர்களின் இளமைக்கால புகைப்படத்தை மிகுந்த பிரயாசத்துடன் அவரது குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தந்த முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுத்தீன் அவர்களுக்கு நன்றி)

- தொடரும்
நன்றி : http://nagoori.wordpress.com

No comments: