”கட்டிக் கொடுக்கும் சோறும்;
சொல்லிக் கொடுக்கும் பாடமும் – ஒருநாளும்
கரை சேர்க்காது.” எனும் சொலவடையினை எங்கள் ஆசிரியர் அடிக்கடி வகுப்பறையில் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அதாவது ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடத்தினை கேட்டால் மாத்திரம் போதாது, அதற்கும் மேலாக உனது முயற்சியும் உழைப்புமே
உன்னை உயர்த்தும் என்பது அதன் பொருள்.
சில வருடங்களுக்கு முன் சென்னையில் நான் வசித்த தெருவுக்கு அருகே முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ”தெருவை தூய்மைப்படுத்தும் பணி” எனும் துண்டு பிரசுரம் பார்த்து அங்கு நானு எனது நண்பரும் சென்றோம். அந்நிகழ்ச்சியின் அமைப்பாளரைச் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டோம். மகிழ்வுற்றார். எப்படி இந்நிகழ்ச்சியைத் தெரிந்து கொண்டீர்கள்? என்று கேட்டார். இந்நிகழ்ச்சி பற்றிய துண்டு பிரசுரம் என் வீட்டு வாயிலில் குப்பையாய் கிடந்தது என்று சொன்னவுடன் அதிர்ந்தார்.
உண்மை அதுதான். ஒரு நாள் அடையாளமாய் ஒன்றை செய்துவிட்டால் போதும். அதுவே பின்தொடரும் என்று நாம் நம்புகிறோம். அதனால் தானோ என்னவோ, எல்லாவற்றிற்கும் அடையாள நாள் ஒன்றினை வைத்து அன்று மட்டுமே அதை செய்து மகிழ்ந்து மறந்தும் விடுகிறோம்.
தூய்மையாய் இருத்தல் என்பது நம் உள்ளத்திலிருந்து வரவேண்டும். அதன் வெளிப்பாடாய் நம் புறச்செயல்கள் அனிச்சையாய் அமைய வேண்டும். என்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே தூய்மைப் பணிக்காக வந்திருந்த இளைஞர்கள் சிலர் சிற்றுண்டிக்காக தந்த வடையை தின்றுவிட்டு காகிதத்தை கசக்கி எறிந்தனர்.
பார்த்தீர்களா?, மாற்றங்கள் மனதோடு வரவேண்டும். உணர்வுப்பூர்வமாய் மாற்றங்கள் வராமல் எதுவும் சாத்தியமில்லை என்றவுடன்,
உண்மைதான் என்று அமைப்பாளர் ஆமோதித்தார். பிற்காலங்களில் பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது இந்த அமைப்பு.
சரி, காந்தி பிறந்தநாளில் தூய்மைப்படுத்துகிறோம் என்று நிற்கின்றனரே?
காந்தி சொன்ன தூய்மை, குற்றமற்று இருப்பது.
இம்முறை அதிகப்படியான குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனராம்.
இப்போது தேவை காந்தி சொன்ன தூய்மை.
செய்வீர்களா? நீங்கள் அந்தத் தூய்மையினை செய்வீர்களா?
Rafeeq Friend
No comments:
Post a Comment