1955-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் வெற்றிப் படங்களில் ஒன்றான “குலேபகவாலி” வெளிவந்தது. அரேபிய மண்ணின் வாசனையோடு படமாக்கப்பட்ட இச்சித்திரத்தில் வசனம் தஞ்சையா ராமதாஸ் என்று படத்தின் தொடக்கத்தில் ‘டைட்டில்’போட்டுக் காண்பிப்பார்கள்.
1957-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.நடித்த “மகாதேவி” படம் வெளியானது. அந்த படத்தில் வசனங்கள் அபாரமாக இருந்தது. ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தின் கூரையைப் பிய்த்தது. கதை-வசனம் கண்ணதாசன் என்று கொட்டை எழுத்தில் காண்பிப்பார்கள். ஆனால் வசனம் எழுதியது அவரல்ல.
1958-ஆம் ஆண்டு வெளிவந்த “நாடோடி மன்னன்” படத்திற்கு வசனம் யார் என்று பார்த்தால் “வசனம் : கண்ணதாசன்” என்று விளம்பரப் படுத்தியிருப்பார்கள். அத்தனை சுவரொட்டிகளிலும் “கதை: எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் கதை இலாகா” என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த கதை இலாகாவிற்குப் பின்னால் யாருடைய கைவண்ணம் இருந்ததென்று மக்களுக்குத் தெரியாமலே போனது. உண்மையில் அப்படத்தின் வசனத்தை எழுதியது யாரென்று மக்களுக்குத் தெரியப்படுத்தவே இல்லை.
