"The Saint Of Nagore is the Divine Light of South East Asia"
( நாகூரின் ஞானக்கோமான் தென்கிழக்கு ஆசியாவின் தெய்வீக ஜோதி )
நாகூரில் வாழ்ந்த நம் இறைநேசர் ஆன்மீகம் போதித்ததோடு மட்டும் நின்று விடவில்லை:-
ஆன்மீகம் தவிர்த்து அவர்கள் தீர்த்து வைத்த சமூகப் பிரச்சினைகள் ஏராளம்.
அந்நிய நாட்டு சக்திகள் சோழமண்டல கடற்கரையோரங்களிலும், தென்மாவட்ட கடற்கரையோரங்களிலும்,
கேரளக் கடற்கரையோரங்களிலும் அத்துமீறி ஆக்கிரமிப்பு நடத்தியபோதெல்லாம்,
அரணாக இருந்து
தென்னிந்திய மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுத்தவர்,
நாகூர் இறைநேசர்
என்பது பெரும்பாலோருக்கு போய் எட்டாதச் செய்தி.
மதநல்லிணக்கத்திற்கு அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள் எனலாம்.
மக்களின் நல்வாழ்வுக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்தார்கள்.
இன்னும்
சொல்லப்போனால் போர்த்துகீசியர்கள்
தமிழக மண்ணில் அழுத்தமாக காலூன்ற முடியாமல் போனதற்கு, அவர்கள் காட்டிய கடும் எதிர்ப்பு
ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இல்லையென்றால்,
தமிழகத்தின்
இப்பகுதி
மற்றொரு கோவா மாநிலமாக
மாறியிருக்கும்.
நாகூர் ஆண்டகை போர்த்துகீசியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.
இறைநேசரின் உயிருக்குச் சேதம் விளைவிப்பதற்காக போர்த்துகீசியர்கள் பலவிதத்திலும்
முயன்று தோற்றுப் போனார்கள்.
குடகு தேசத்து ஆயுதம் தாங்கிய வீரர்கள் அவர்களை கொல்ல வந்தபோது, முயற்சி பலனளிக்காமல் தோற்றுப்போனதோடு மட்டுமின்றி மாண்டும் போனார்கள்.
இந்த விவரத்தை
“மதுரை தமிழ் சங்கத்து நான்காம் நக்கீரர்” என்று போற்றப்பட்ட நாகூர் குலாம் காதிறு நாவலர் எழுதிய நூலின் குறிப்பு சான்று பகர்கிறது.
குடகு தேசம் என்று அவர் குறிப்பிடுவது, போர்த்துகீசியர்களின் கோட்டையாக விளங்கிய இன்றைய கோவா மாநிலம்.
போர்த்துகீசியர்கள் முஸ்லீம்களின் மீது புரிந்த அடக்குமுறை,
அட்டூழியங்கள் குறித்து,
டான்வர், வைட்வே, ரோலாண்டு E.மில்லர், C.R.D.சில்வா,
மானா மக்கீன், ஓ.கே.நம்பியார்,
மஹதி போன்றவர்கள் நிறையவே எழுதியுள்ளனர்.
இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள் முற்றிலும் அழிந்து போனது போர்த்துகீசிய ஆக்கிரமிப்பின்போதுதான்.
ஆக, 17-ஆம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இஸ்லாமிய மார்க்க, தமிழிலக்கிய படைப்புகள் நம் கையில் கிடைக்காமல் போனதற்கு போர்த்துகீசியர்களின் அட்டகாசம் ஒரு தலையாய காரணம்
என்பதை வரலாற்று பதிவேடுகள் உறுதிபடுத்துகின்றன.
நாகூர் இறைநேசச் செல்வரின் அறிவுரையால் கவரப்பட்டு,
அவர்களின் தூண்டுதலின் பெயரில் போர்த்துகீசிய படையுடன்
எதிர்த்து போர் புரிந்தவர்களின் வரிசையில் பலரும் உண்டு.
கேரளத்து குஞ்சாலி மரைக்காயர்கள்,
சேரந்தீவின் (Serandib) சீதாவக்கை (sitawaka) பகுதியை அரசாண்ட அரசன் மாயதுன்னே (1501-1581) போன்ற பலர்.
அதுமட்டுமின்றி
நாகூரார் மீது பெரும் மதிப்பும்,
மரியாதையும் வைத்திருந்து அவர்கள் சொற்படி கீழ்ப்படிந்து நடந்த மன்னர்கள் பலர்.
சேவப்ப நாயக்கர் (1532-1560),
அச்சுதப்ப நாயக்கர் (1560-1600), மட்டுமின்றி,
அதற்குப்பின் வந்த பிரதாப்சிங்,
சரபோஜி,
இராமனாதபுரத்து சேதுபதிகள்
இப்படியாக இறைநேசரின் அபிமானிகள் பட்டியல் நீள்கிறது.
(முஸ்லிம் குரல் 15.02.1987)
விஜயநகர் பேரரசின் கிருஷ்ணதேவராயரையும் (1509-1529 ஆட்சி) நம் இறைநேசர் சந்தித்துப்பேசி,
போர்த்துகீசியர்களை எதிர்த்து போர்புரிய ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்கள்.
[இத்தகவல் தமிழ்நாடு வக்பு வாரியம் வெளியிட்ட ‘இஸ்மி’ என்ற சஞ்சிகையில், ஏப்ரல், 1981 பக்கம்25, காணக் கிடைக்கிறது].
குஞ்சாலி மரைக்காயர் போர்த்துகீசியர்களை எதிர்த்து போரிட்டது மலபார் கடற்கரையில்தானே?
நாகூருக்கும் கேரளத்து குஞ்சாலி மரைக்காயருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
என்ற
வினா பலருடைய மனதிலும் எழலாம்.
நாகூரார் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே,
தமிழக கடலோரப் பகுதிகளை போர்த்துகீசிய படைகளிடமிருந்து, காப்பாற்றுவதற்கு உறுதி பூண்டார் குஞ்சாலி மரைக்காயர்.
இதற்கு சீதாவக்கை அரசின் மாயதுன்னே முழு ஒத்துழைப்பும் நல்குவதற்கு முழுமனதுடன் முன்வந்தார்.
[ஆதாரம்: Portugese rule in Ceylon 1966 edition P:65 by Tikiri Abeya Singhe, University of Ceylon]
ஏற்கனவே
1536-ஆம் ஆண்டு நடந்த போரில் குஞ்சாலி மரைக்காயர்
போர்த்துகீசியர் கப்பல்களுக்கு பெரும் பொருட்சேதத்தை விளைவித்தார்.
அவர்களை வேதாளை எல்லையிலிருந்து தூத்துக்குடி எல்லை வரை விரட்டியடித்தார்.
மீண்டும்
கி.பி. 1538-ஆம் ஆண்டில் தூத்துக்குடி கடற்கரையோரங்களில் போர்த்துக்கீசியருக்கும்,
குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன.
இங்கும் போர்த்துக்கீசிய படையை குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார்.
குஞ்சாலி மரைக்காயர் கேரளத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும்,
நாகூர் கடலோரத்திலிருந்து
தூத்துக்குடி வரையிலும் அந்நிய சக்திகளை எதிர்த்து போராடி தமிழக மக்களுக்கு அரணாக இருந்து போர்புரிந்தது,
நாகூர் இறைநேசர் அவர்களின் உத்தரவின் பேரில்தான்.
"ஒரு மனிதரை சுதந்திர போராட்ட வீரராக கருதுவதற்கு அவர் வாளெடுத்து அந்நியர்களோடு போர் புரிய வேண்டும்"
என்ற அவசியமில்லை.
ஆயுதமேந்தி களம் காண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
போர் வீரர்களுக்கு கிரியாவூக்கியாகவும், தூண்டுதலாகவும் இருந்து அவர்களைச் செயல்படுத்த வைத்தார்களே,
"அதுவே நிறைவானச் செயல்"
இறைநேசர் சேரந்தீவு (சிலோன்) சென்று வந்ததற்கு சரித்திர ஆதாரங்கள் உள்ளதைக் கண்டோம்.
அவர்களுடன் பயணித்த சீடர்களில் ஒருவர்
செய்யது ஷிஹாபுத்தீன் வலியுல்லாஹ் என்ற புனிதர்.
அவருடைய சமாதி கண்டியில் உள்ள மீரா மக்காம் என்ற இடத்தில் உள்ளது.
பல கலைகளை கற்றுத் தேர்ந்திருந்த
நாகூர் இறைநேசர் கேரளத்து பொன்னானி பகுதிக்குச் சென்று, தங்கியிருந்தபோது,
குஞ்சாலி மரைக்காயரின் போர்வீரர்களுக்கு போர் பயிற்சியும் அளித்திருக்கிறார்கள்.
குஞ்சாலி மரைக்காயர், பச்சை மரைக்காயர்,
அலி இப்ராஹிம்,
இந்த மூன்று தளபதிகளும் நாகூர் இறைநேசரின் சிஷ்யக்கோடிகள்.
நாகூராரின் உத்தரவின் பேரிலேயே இவர்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்தன.
இறைநேசரின் தூண்டுதலும், அவர்களின் ஆலோசனைகள் அறிவுரைகளும் இந்த மூன்று தளபதிகளுக்கும் உந்துச் சக்தியாய்த் திகழ்ந்தன.
நாகூரார் அளித்த உற்சாகம் அவர்களுக்கு அளித்த போர்ப்பயிற்சி
ஆகியவை மனதளவில் அவர்களுக்கு
ஆற்றலையும், நம்பிக்கையையும் வளர்த்து வீர உணர்ச்சியை உரமேற்றியது.
அந்நிய சக்திகளுக்கு எதிராக உயிரை துச்சமாக மதித்து போராடி வீர தீர செயல்கள் புரிந்த
மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி
நாட்டுக்காக தன்னுயிர் ஈந்து வீரமரணம் எய்தினார்.
"ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்"
நாகூர் இறைநேசர் கொண்டிருந்த நாட்டுப்பற்றுக்கு,
அவர்கள் உதிர்த்த இந்த பொன்மொழியே தக்க சான்று பகரும்.
“உண்மையையும் பொய்யையும் பிரித்தறிவிக்கும்
பொருட்டு
இறைவன் என்னை இந்தியாவில் தோன்றச் செய்துள்ளான்.”
தான் இந்தியாவில் பிறந்ததை ஒரு பேறாக எண்ணியதை,
"அவர்கள் உதிர்த்த இவ்வாசகம்"
அவர்களின் உள்ளக்கிடக்கையை பறைசாற்றி நம் கூற்றை மெய்ப்பிக்கின்றது.
நன்றி:- அப்துல் ஹையூம் ( இணையம் )
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment