’உன் நண்பன் யார் என்று சொல்.. நீ யாரென்று சொல்கிறேன்’ என்பது பழைய மொழி. நீ எதை விரும்பிச் சாப்பிடுகிறேன் என்று சொல்.. நீ யாரென்று சொல்கிறேன் என்பது ஆரோக்கியப் புதுமொழி. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து நம் மனதையும் உடல் நலத்தையும் ஓரளவு அனுமானிக்க முடியும். ”எனக்கு இனிப்பு பிடிக்கவே பிடிக்காதுப்பா..கசப்பா..? ஐய்யோ! நான் அந்த பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன்,” எனும் நம் விருப்பு வெறுப்புக்கள் எல்லாம் நம் உடலை எந்த நோயினை நோக்கி நகர்த்துகின்றன என்பதை நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைகள் மிக உறுதியாகச் சொல்லியிருக்கின்றன.
ஒவ்வொரு சுவைக்கும் சில மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சில நோய் உண்டாக்கும் தன்மைகள் உள்ளன. உணவுக்காகப் பக்குவமாகச் சமைக்கையில் ஒவ்வொரு தானியங்கள், காய், கனிகளின் சுவைகளின் கலவையால் வரும் கலப்பு சுவைகளிலும் தனித்துவ நப்பயனும், நோய்க் கூறும் உள்ளன. உணவு சமைக்கின்ற ஒவ்வொருவரும் இந்த சுவை குறித்த தெளிவான அறிவைப் பெற்றிருப்பது மிக மிக முக்கியம். உணவை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவருக்கும், ’இந்த டேஸ்ட் எனக்கு என்ன செய்யும்?’ என்ற அறிவைப் பெற்றிருப்பதும் ரொம்ப ரொம்ப அவசியம். இனிப்பு, உப்பு, புளிப்பு, கார்ப்பு(காரம்), கசப்பு, துவர்ப்பு- எனும் இந்த ஆறு சுவைக்குப் பின்னே உள்ள சுவையான நலவாழ்விற்கான விஷ்யங்களை இந்த வாரம் சுவைக்கலாம்.
ஆறு சுவை என்பன மனங்களிக்க உருவானதோ, உருவாக்கப்பட்டதோ அல்ல. ”ம்ம்...யம்மி..ம்ம்மி”- என குழந்தை சுவைப்பதால் மட்டும் ஒரு சுவையை நாம் ஏற்றாக வேண்டும் என்பதுமல்ல. . இனிப்பாக இருக்கும் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அதில் நீர் பூதமும் இருக்கிறதென்து இப்போது புரிகிறதா? அதைச் சாப்பிடுகையில் அந்த நீர் உன் நுரையீரலுக்குள்ளும் சென்று சளியாக மாறும் என்பதை தெரிந்து கொள்ளலாம். ”சார்!..ரொம்ப... வதைக்கிறீங்களே என பதற வேண்டாம்”. இது ரொம்ப முக்கியமான விஷயம். இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தமருத்துவமும் ஆயுர்வேதமும் இதனைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளன. சித்த வைத்தியரிடம் சென்றால் ’இதை சாப்பிடக் கூடாது; அதை சாப்பிடக் கூடாது’ என்று சொல்லும் போது,” மருந்து எழுத சொன்னால், மெனு கார்டெல்லாம் சொல்றாரே என இனி அங்கலாய்க்க வேண்டாம். சுவைகளின் அடிப்படையில் உங்களுடல் நலத்திற்கான சிறந்த தேர்வு தான் அவர் சொல்லும் பத்தியம்!
சரி இனி ஒவ்வொரு சுவையும் என்ன என்ன செய்யும் என்பதை கொஞ்சமாகப் பார்க்கலாம்.முதலில் இனிப்பு. ஏன் என்றால் அதுதான் முதல் சுவை. தாயின் சீம்பாலில் குழந்தை முதன் முதலில் அடையாளம் காணும் சுவை இனிப்பு. உடல் வளர்க்கும் அற்புத இந்த சுவையை விரும்பாத குழந்தையும் பெரியோரும் அரிது. உடலை ஊட்டப்படுத்தி வளர்த்து பருக்க வைக்கும் இந்த சுவை அளவிற்கு அதிகமானால் கபத்தை அதிகரிக்கும். செரிமனத்தை குறைத்துவிடும். பெரியோருக்கு மதுமேக நோயை வரவழைத்து விடும். ”மதுரமதிகமானால் மலியும் நிணமும் கபமும்தான்”-என்கிறது ஒரு மருத்துவப் பழம் பாடல்.
புளிப்பு சுவை இருந்தால், ஏதோ ஒரு அமிலம் அதில் இயற்கையாக உள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். எலுமிச்சையின் சிட்ரிக் அமிலமும், தக்காளியின் ஆக்ஸாலிக் அமிலமும் புளியின் டார்டாரிக் அமிலமும் தருவது தான் அதனதன் புளிப்பு சுவைகள். புளிப்பு சித்த மருத்துவம் சொன்னபடி, பித்தத்தைத் தூண்டி சீரணத்தை நெறிப்படுத்தும் என்ற கருத்தை, இன்றைய உணவு விஞ்ஞானம் இன்னும் கூடுதலாய், புளியில் ஊறவைத்து சமைப்பதனால், காய்கனிகளின் புரதமும், உயிர்ச்சத்துக்கலும் வெப்பத்தால் கேட்டையாமல் இருக்கும். அதுவே நல்லது; என்று சான்றளித்துள்ளது. அதுவே அளவிற்கு அதிகமானால், உடல் நரம்பு தசை தலரும் இரத்த சோகை வந்து விடும். தோலில் வறட்சியும் சீழ் கொப்புளங்கலையும் ஏற்படுத்தும். ஆதலால், வத்தக் குழம்பை விட்டு வாயில் எச்சில் ஊற சாப்பிடால், வாதம் வந்து சேரும்.தோல் நோய் அதிகரித்துவிடும். அதுவே லேசான புளிப்புடன் செய்யப்பட்டால் அந்த மிதமான புளிப்பான குழம்பில் மிதக்கும் முள்ளங்கியோ, மீனோ உடலுக்கு உறுதி தரும்.
”சிறுக அளவோடு சேர்த்துண்ண தேகத்து உறுப்பின் சுருக்க
ம் குறையும்” என்று உப்பின் பெருமையைச் சொன்னவர்கள், அதனையே அதிகமாகச் சாப்பிட்டால், உடல் வன்மை குறையும் என்றும் நம் மரபில் சொன்னார்கள். நவீன வாழ்வில், வயோதிகத்தில் உப்பு ரொம்பவும் தப்பான தேர்வு. இரத்தக் கொதிப்பு முதல் சிறுநீரகச் சீர்கேடு வரை அதிக உப்பு அதிக உடல் நலக் கேட்டைத் தரும்.
கசப்பு- இயல்பாக பெரும்பாலோனோர் விரும்பாத இந்த சுவை, பெரும்பாலான நோய்களுக்கு நல்லது. கசப்பு அதிகமிருப்பின், அதில் நிறைய தாவர நுண் மூலக்கூறுகள் உள்ளன என்று பொருள். SECONDARY METABOLITES எனும் தாவரம் சேமிக்கும் மருத்துவக் கூறுகளில் பல, கசப்பும் துவர்ப்பும், புளிப்பும் சுவை உடையன தான். பித்த நோய்கள், கப நோய்கள், உடலில் உள்ள விஷத் தனமை தீர கசப்பு அவசியம் வேண்டும். வேம்புக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரமும்,அந்தஸ்தும் அதன் கசப்பான நோய் நீக்கும் அற்புத குணத்தினால் தான். இனி யாரும் ”அது ஒரு கசப்பான அனுபவம்!” என உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைச் சொல்ல வேண்டாம். கசப்பு ஒரு மருந்து! அதே சமயம் கசப்பை அதிக அளவிலும் சாப்பிடுவது வாயுவைத் தோற்றுவிக்கும்.
அளவான காரம் செரிமனத்தை தூண்டும். கபத்தைப் போகும். உணர்ச்சியைக் கூட்டும். அதிகபட்ச காரம் உடல் வன்மையை, நரம்பை பாதிக்கும்.உடல் உறுப்புகளைத் தளர வைத்துவிடும்.
துவர்ப்பு- நாம் பெரும்பாலும் உணவில் அதிகம் சேர்க்காதது..ஆனால் மிகவும் உடலுக்கு நல்லதொரு சுவை துவர்ப்பு. புண்ணாற்றி, இரத்தத்தை சுத்தி செய்ய வைப்பதில் இருந்து, உடலை அழிவில் இருந்து காக்கும் anti oxidant தன்மையுடைய சிறந்த சுவை துவர்ப்புச் சுவை. வாழைப்பூவிலும் நெல்லிக்கனியிலும் நிறைந்து இருக்கும் இந்த சுவையை ஒரு மருத்துவச் சுவை என்றே சொல்லலாம்
பிரியாணியின் மணத்தைக் கூட்ட என்ன போடலாம்? இந்த டிஷ் –க்கு என்ன ட்ரெஸ்ஸிங் செய்து அசத்தலாம் என யோசிக்கவும் வாசிக்கவும் செய்யும் நாம், இந்த உணவின் சுவை வீசிங் உள்ள என் பொண்ணுக்கு ஏத்துக்குமா?..மூட்டுவலி உள்ள அப்பாவிற்கு சரியாக இருக்குமா? என்றும் யோசித்து சமைத்தால் உங்கள் வீட்டுக் கிச்சன்..ஹெல்த்தி கிச்சன்! அதற்கு சுவை குறித்த தெளிவான அறிவு மிக முக்கியம்!
நன்றி Source:http://siddhavaithiyan.blogspot.com
No comments:
Post a Comment