Friday, February 8, 2019

அறியாமைக் காலத்தின் மீள் வரவு!

ஆக்கம்: இப்னு பஷீர் -

உலகளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பெருமளவில் குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கின்றன அண்மைய புள்ளிவிபரங்கள். இதில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் சீனாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 87 பெண் குழந்தைகள். இந்தியாவில் 1௦௦ ஆண் குழந்தைகளுக்கு 89 பெண் குழந்தைகள்.


இந்தச் சரிவு விகிதப் பட்டியலில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தென்னிந்திய மாநிலங்களே என்பது இன்னொரு அதிர்ச்சி! 2௦௦7-க்கும் 2௦16-க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இந்தச் சரிவு விகிதம் உச்சத்தை எட்டியிருக்கிறது. முதலிடத்தில் ஆந்திரா (1௦௦௦-த்திற்கு 168 குறைவு) இரண்டாமிடத்தில் கர்நாடகா (1௦8 குறைவு) மூன்றாமிடத்தில் தமிழ் நாடு (95 குறைவு).

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, “மனிதகுல ஆண் / பெண் பிறப்பு விகிதம் சிறிதளவு ஆணினம் பக்கம் சாய்ந்ததாகவே இருக்கிறது. இயற்கையான பிறப்பு விகிதம் 105 என்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பொருள் ஒவ்வொரு 100 பெண் குழந்தைகளுக்கும் 105 ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள் என்பதாகும்.

பிறப்பு விகிதத்தில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் விபத்து, வன்முறை, போர் போன்ற புறக்காரணிகளால் இள வயதில் இறக்கும் ஆண்களில் எண்ணிக்கையும் பெண்களைவிட அதிகமாக இருப்பதால் இயற்கையிலேயே ஒருவித சமநிலை ஏற்பட்டு விடுகிறது. இந்தச் சமநிலை விகிதம் அந்நாட்டின் மொத்த ஜனத்தொகை விகிதத்தில் பிரதிபலிக்க வேண்டும். அதாவது, மொத்த ஜனத்தொகையில் ஆண்-பெண் விகிதாசாரம் 105 ஆகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்க வேண்டும்.

எந்த ஒரு நாட்டில் இந்த விகிதாசாரம் 105-க்கும் மிக அதிகமாக இருக்கிறதென்றால், அதாவது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால், அந்தச் சமூகத்தின் குழந்தை பிறப்பு விகிதத்தில் மனிதத் தலையீடு இருப்பதாகவே பொருள். அதாவது, கருக்கலைப்பு, சிசுக்கொலை ஆகியவற்றின் மூலமாக பெண் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையை அச்சமூகம் மட்டுப்படுத்துகிறது என்று கருத வாய்ப்பு உண்டு.

இதே போன்றதொரு அறிக்கையை உலக வங்கியும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி இந்தியாவின் பிறப்பு விகிதம் 1962-ல் 106-ஆக இருந்தது. அதாவது இயற்கையான பிறப்பு விகிதமான 105-ஐ விட கொஞ்சம்தான் அதிகம். ஆனால் இந்த விகிதம் கிடுகிடுவென அதிகரித்து 2017-ல் 111 ஆனது. சீனாவிலும் இதே காலகட்டத்தில் 107 ஆக இருந்த பிறப்பு விகிதம் 115 ஆக அதிகரித்துள்ளது.

யூனிசெஃப் நிறுவனம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இந்தியப் பிறப்பு விகிதத்தில் ஏற்படும் இத்தகைய சரிவு, கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இப் புள்ளிவிவரங்களை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.

உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளான சீனாவிலும் இந்தியாவிலும் தான் இத்தகைய சமநிலையற்ற விகிதாச்சார்ரம் நிலவுகிறது. இந்த இரண்டு நாடுகளுமே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் தீவிரமாக அமுல் படுத்தியவை.

இந்த விகிதாச்சாரக் குறைவினால் என்ன பாதிப்பு ஏற்படும்?

திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மக்கள் தொகைப் பெருக்கத்தில் தேக்க நிலை ஏற்படும். ஆண் – பெண் விகிதாச்சாரம் மேலும் மோசமான நிலையை எட்டும். பாலியல் ரீதியிலான குற்றங்கள் அதிகரிக்கும்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முந்தைய அரபுக்களிடையே பெண் குழந்தைகளை வெறுக்கும் தன்மை இருந்ததைத் தெரிந்துகொள்ளலாம். தன்னுடைய பெண் குழந்தையை உயிரோடு மண்ணில் புதைக்கக்கூட காட்டுமிராண்டிகளான அன்றைய அரபு மக்கள் தயங்கவில்லை. அப்படி இருந்தவர்களை இஸ்லாம் முற்றாகத் திருத்தி, பெண் மக்களைக் கொண்டாடுபவர்களாக மாற்றியது.

இன்றைய புள்ளிவிபரங்களைப் பார்த்தால் அன்றையை காட்டுமிராண்டி கலாச்சாரம் மீண்டும் திரும்புகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது!

http://www.satyamargam.com/

No comments: