நேற்று முன்தினம் திருவாரூரில் தொடங்கிய பயணம் நேற்றிரவு மும்பையில் முடிந்தது. திருவாரூரில் தொடங்கி மும்பை வரை இரண்டு மொபைல்களிலும் மாற்றி மாற்றி தமிழிலும் இந்தியிலுமாகப் பேசிக் கொண்டிருந்தார் மார்வாடி இளைஞர்.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச்சைத் தொடங்கினேன். ஆண், பெண், குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், சேலைகள் மற்றும் துணி வணிகம் செய்கிறாராம்.
திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகை பகுதிகளுக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து சப்ளை செய்கிறாராம். எவ்வகையான பொருள்கள் அதிகமாக விற்பனை ஆகின்றன எனப் பார்ப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்தப் பகுதிகளுக்கு வந்து செல்வாராம்.
ஐந்து ஆண்டுகளாகத் தமக்குத் தமிழகத்துடன் தொடர்பு உண்டு என்று கூறிய அவர் தமிழில் பேசுவதைக் கண்டு வியந்து போனேன். தமிழ்நாட்டுல எங்கேயாவது வேலை பார்த்தியா என்றேன். இல்லை என்றார். பிறகு எப்படி தமிழைக் கற்றுக் கொண்டாய் என்றேன்.
தொடக்கத்தில் சென்னை, கோவை, திருச்சி, நாகர்கோவில் போன்ற நகரங்களில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பொருள்களை அனுப்பிக் கொண்டிருந்தாராம். இந்த ஊர்களில் உள்ளோர் இந்தியை ஓரளவு புரிந்து கொள்வார்கள் என்றாலும் தமிழ் எனக்கு அவசியம் என்று தோன்றியது. தமிழைக் கற்றுக் கொள்வதற்காக புத்தகங்களை வாங்கியும் பயன் இல்லை. எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிக்கும் பயணம் செய்து, அவர்களின் முக பாவணைகளை வைத்து அவர்கள் பேசுவதை ஓரளவு புரிந்து கொள்ளத் தொடங்கினேன். இப்படி ஐந்தே மாதங்களில் தமிழைக் கற்றுக் கொண்டேன் என்றார் அந்த இளைஞர்.
மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவற்றுடன் அரபு மொழிகளை நானும் இப்படித்தான் கற்றுக் கொண்டேன் என்றாலும் ஒரு ராஜஸ்தானி தமிழ் கற்றுக் கொண்டது எனக்கு வியப்பாகவே இருந்தது.
சரி. எதுவரை படித்திருக்கிறாய் என்றேன். பத்தாவது வரை என்றார் அவர். அதற்குப் பிறகும் நான் படித்திருந்தால் வணிகத்துக்கு வந்திருக்க மாட்டேன். ஏதேனும் ஒரு நிறுவனத்தில் அல்லது அரசுப் பணியில் சேர்ந்திருப்பேன். படிக்காதது நல்லது என்றார் கறை நல்லது என்பதைப் போன்று.
பாக்கிஸ்தான் எல்லை அருகே உள்ள வரலாற்று நகரான ஜெய்சல்மீரைச் சேர்ந்த அந்த இளைஞரிடம் உனக்கு இப்ப என்ன வயசு எனக் கேட்டேன். 26 என்றார்.
தன்னுடைய 21ஆவது வயதிலேயே சுமார் 2,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரைக்கால் மற்றும் நாகையுடன் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட அந்த இளைஞரை எண்ணி நான் வியக்காமல் இருக்க முடியுமா?
அழகப்பன் அப்துல் கரீம்
No comments:
Post a Comment