Thursday, March 31, 2016

ஆசைப்படு - அல்லல் படு

Vavar F Habibullah

சோர்ந்து கிடந்த உடலை பார்த்து மனம் சொன்னது...
இதோ பார்...நன்றாக கண்விழித்து பார்..
உனக்கு
பணம் உண்டு
பதவி உண்டு
புகழ் உண்டு
ஆனால்
எனக்கு.....
நிறைய ஆசைகள் உண்டு.
போதும் நிறுத்து.
நீ ஆசை கொள்வதால்
யாருக்கு என்ன பயன்?
உடல்
கோபத்துடன் கேட்டது.

என்னால் ஆசைப்பட மட்டுமே முடியும்
அநுபவிக்க இயலாது.
உன் உடம்பால் மட்டுமே அது முடியும்.
மனம் நொந்து போய் சொன்னது.
உன் ஆசைகளுக்கும்,
அசைவுகளுக்கும்,
இசைந்து கொடுத்தே
என் உடல் வளைந்து நெளிந்து விட்டது
உடல் அங்கலாய்த்தது.
மனம் தான் மனிதன் என்றால்
மனிதன் யார்?
நீயும் நானும் கலந்தால் வரும்
உருவம் தான் மனிதன்.
உடல் மனம் சேர்ந்தது தான் மனிதன்.
மனம் விளக்கம் தந்தது.
இப்போது என் கேள்விக்கு பதில் சொல்
உடலை பார்த்து மனம் கேட்டது.
பணத்தை சுமப்பது யார்!
பதவியை சுமப்பது யார்!
புகழை சுமப்பது யார்!
நீயா இல்லை நானா?
மனதை பார்த்து உடல் சொன்னது...
உன் நிலையை பார்த்தாயா!
உனக்கு ஆசைப்படத்தான் முடியும்,
ஆனால் அநுபவிக்க முடியாது.
உன் ஆசைகளை
என் மூலம் தீர்த்துக் கொள்கிறாய்.
உன் ஆசைகளை
சுமந்து திரிந்ததாலேயே
என் உடல் சீரழிந்து விட்டது.
என் நிலை அறிந்த பின்பும்
பண ஆசை
பதவி ஆசை
புகழ் ஆசை
இவற்றை மேலும் தூண்டி விட்டு
என்னை சீரழிக்கிறாய்.
உடலையே தூக்கி சுமக்க இயலாத
என் உடல் மீது, மேலும் சுமைகளை
சுமக்க ஆசை மூட்டுகிறாயே
இது உனக்கு சரியாக படுகிறதா!
ஆசைகளை தூண்டி விட்டு வேடிக்கை
காட்டும் உன்னை நினைத்தால் எனக்கு
கோபம் கோபமாக வருகிறது.
உன்னை என் உடலில் இருந்து தூக்கி
எறியும் நாளே நான் அமைதி கொள்ளும் நாள்.
உடல் உருக்கமாக சொன்னது.
நான் - இல்லை என்றால் உன் உடலால்
எந்த பயனும் இல்லை.
ஆசை இல்லை என்றால் எவனும்
மனிதன் இல்லை.
நீ நன்றாக இருந்தால்
ஆசைகளை விதைப்பேன்.
நீ சோர்ந்து விட்டால்
என் ஆசைகளை
உன் உடலில் புதைப்பேன்.
ஆசைகளை நிறைவேற்ற இயலாத
உன்உடலை பார்த்து சிரிப்பேன்
உன்னை நோயால் சிதைப்பேன்
சீரழிப்பேன், சீர் குலைப்பேன்.
மரணம் அணு அணுவாக உன்னை
கொல்லும் போது கூடவே இருந்து
உன் உடலை பார்த்து சிரிப்பேன்.
உன் அழிவில் தான்
என் விடுதலை அடங்கி இருக்கிறது.
மனம் பேசப்பேச உடல்
குலுங்கி குலுங்கி அழுதது.
சோர்ந்தது, தளர்ந்தது, விழுந்தது
அடங்கி - அமைதி கொண்டது.
கதையும் முடிந்தது.


Vavar F Habibullah

No comments: