Thursday, March 3, 2016

கப்பல் - விமானம் - பயணம் - திரைகடல் - திரவியம் - பாலை - துயர்

விமானம் மேலே மேலே
ஏறிக்கொண்டிருந்தது
மனசு கீழே கீழே
விழுந்துகொண்டிருந்தது

கைக்குழந்தையுடன்
விமான நிலையத்தில்
இன்னும் கையசைத்துக்
கொண்டிருக்கிறாள்
மனைவி

*


தமிழில் சங்க இலக்கியத்தில் தலைவன் தலைவின் பிரிவை பாடும் பாடல்களைப் பாலைத்திணை என்று அழைப்பார்கள். அது பாலைவனத்துக்கு நிகரான துயர் மிக்கவை.

இந்த உலகத்தில் முதன் முதலில் பாலைத்திணை பிரிவுத் துயரில் படாத பாடு பட்டவர்கள் இன்றும் படுபவர்கள் தமிழ்முஸ்லிம் பெண்கள்தாம் என்பேன்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் படித்தவர்களாய் அன்று இருக்கவில்லை. படித்துமுடித்து வெளிவந்தால் வேலை கிடைக்காத நிலையே அதிகம் தமிழ் முஸ்லிம்களுக்கு அன்று இருந்தது. அது இன்றும் நீடிக்கும் அரசியல் என்றாலும் அன்று அது கொடூரமாய் இருந்தது.

வேலைக்குச் சேரவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் சிபாரிசு தேவை, தமிழ் முஸ்லிம்களின் பணியிலிருப்போர் உறவுகள் தேவை. அது ஏற்கனவே பதவிகளில் இருந்த சமூகத்தினருக்குத்தான் அது பல்கிப் பெருகி இருந்தது.

தமிழ்முஸ்லிம்கள் பெரும்பாலும் மளிகைக்கடை வைத்திருப்பார்கள், கறிக்கடை வைத்திருப்பார்கள், மீன்கடைகளில் வேலை பார்ப்பார்கள்.

அவர்களுக்கு அன்று இருந்த ஒரே சம்பாதிக்கும் வழி திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதுதான்.

பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்று வள்ளுவன் சொன்னால் திரைகடல் ஓடித் திரவியம் தேடு என்று ஔவை சொன்னாள். அதை எந்தத் தமிழன் கேட்டானோ கேட்கவில்லையோ, தமிழ் முஸ்லிம்கள் உறுதியாக அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர் முதலில் கப்பல் ஏறினார்கள் இப்போது விமானம் ஏறுகிறார்கள்.

ஆரம்பத்தில் சிங்கப்பூர் மலேசியா சிலோன் பர்மா செய்கோன் என்று ஆண்கள் மட்டும் செல்வார்கள். சம்பாதித்து அவ்வப்போது வீட்டுக்குப் பணம் அனுப்புவார்கள். சில காலம் பணமே அனுப்பமாட்டார்கள். சில நேரம் அங்கேயே செத்தும் போயிருப்பார்கள்.

பெண்கள் என்னவோ கணவன் உடன் இல்லாத தனித்த துயர வாழ்க்கையையே எப்போதும் வாழ்வார்கள். அது இன்றும் இன்றும் நீடித்தவண்ணம்தான் இருக்கிறது.

இவர்களின் வெளிநாட்டுத் தனிமை வாழ்க்கையின் நீட்சி 70 களுக்குப் பிறகு அரபு நாடுகளில் பெருமளவுக்குக் படர்ந்தது. அமெரிக்கா கனடா என்றும் இன்று எல்லைகள் உலகலவில் விரிந்தன.

அதிராம்பட்டிணம் போன்ற ஊர்களுக்குச் சென்றால், அங்கே ஆண்களே தென்படமாட்டார்கள். அப்படித் தென்படுபவர்கள் எல்லோரும் ஒன்று எல்லாம் முடித்து ஓய்வில் உள்ளவர்களாய் இருப்பார்கள் அல்லது ஒரு மாத விடுப்பில் ஊர் வந்தவர்களாய் இருப்பார்கள் அல்லது ஊர் செல்வதற்கு ஆயத்த நிலையில் இருக்கும் இளைஞர்களாய் இருப்பார்கள்.

ஒரு நடுத்தர ஆண் ஊரில் இருந்தால் நாக்கைப் பிடிங்கிக்கொண்டு சாகும் அளவிற்கு மானக்கேடான விசயம் அம்மாதிரியான ஊர்களில்.

கட்டை விளக்கமாறாய் இருந்தாலும் எனக்குக் கப்பல் விளக்கமாறுதான் வேண்டும் என்று சொல்லும் அளவிற்குப் பெண்கள் அந்த வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டிருப்பார்கள்.

கப்பலுக்கு போன மச்சான்
கண் நிறைஞ்ச ஆசை மச்சான்
எப்பதான் வருவிங்க
எதிர் பார்க்குறேன்
நான் இரவும் பகலும்
தொழுது தொழுது கேக்குறேன்.

இந்தப்பாடலைக் கேட்டுக் குமுறிக் குமிறி அழுத தமிழ் முஸ்லிம் பெண்களின் துயரை எத்தனை கவிதைகளில் வடித்தாலும் அத்தனை கவிதைகளும் அதனுள்ளேயே கரைந்து மூழ்கிவிடும்.

திருமணமான பத்தாவது நாள் புறப்பட்டு துபாய் போனவன் மகனுக்கு நாலு வயதானபோது திரும்பி வருகிறான். இரவில் சேர்ந்து படுக்கப்போகும்போது அந்த நாலு வயது அழுது அடம்பிடித்துக் கத்தியது ‘இந்த மாமாவை வெளியே போகச்சொல்லு’

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழ்முஸ்லிம்களை உண்டியல் வியாபாரிகள் வளைத்துப் பிடித்தார்கள். அந்த தொழிலில் வெகுவாக தமிழ் முஸ்லிம்களை ஈடுபடுத்தினார்கள்.

சிலர் முறையாகப் பணமாற்றுச் சேவைகளைச் செய்து பெரிதாக வளர்ந்தார்கள், சிலர் உண்டியல் பணி செய்தார்கள், சிலர் குருவிகளாகவும் ஆக்கப்பட்டார்கள். ஆனால் வட்டிக்குப் பணம் தரும் சேவையை மட்டும் அவர்கள் செய்வதே இல்லை.

செய்கோன் பர்மா இந்தோநேசியா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் வைரக்கல் வியாபாரிகள் ஆனார்கள்.

தமிழ்முஸ்லிம்கள் எத்தனை ஏழையாய் இருந்தாலும் தன் வீட்டுப் பெண்களை மணமுடித்துக்கொடுக்க பெருமளவில் சீர்வரிசைகள் செய்ய வேண்டிய கலாச்சாரத்துக்குள் இருக்கிறார்கள்.

ஒரு பெண்ணை மணமுடித்துக்கொடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு குடும்பத்தையே அழித்துமுடிக்கும் அளவுக்குப் பொருள் தேவைப்படுகிற விசயமாகவே தமிழ்முஸ்லிம்கள் பலரிடமும் இருக்கின்றது.

இதன் காரணமாகவும் பதினைந்து வயதை எட்டிய சிறுவனை எப்படியாவது கப்பலேற்றிவிட குடும்பம் முழுவதும் முழுமூச்சாய் இயங்கும்.

நான் பம்பாயில் இரண்டு மாதங்கள் வெளிநாடு செல்வதற்காகத் தங்கி இருந்தேன். படித்துவிட்டு துயாய் சவுதி செல்பவர்களைவிட எதுவுமே படிக்காமல் புறப்பட்டவர்கள்தான் ஏராளம்.

சவுதியோ துபாயோ சென்று அங்கும் நல்ல நிலையில் இருக்கும் கல்வியோ அறிவோ அவ்வளவாக அவர்களுக்குக் கிடையாது.

பம்பாயில் ஒரு அதிரை இளைஞன் சொன்ன ஒரு சொல் இன்றும் என் நினைவில் இருக்கிறது. அவன் கற்றவன் இல்லை. எல்லோரும் வெளிநாடு சென்றுவிட்டதால் உடனே செல்ல வேண்டும் என்ற அவமானம் அவனைக் கொன்றுதின்றுகொண்டிருந்தது.

”அரபிக்குக் குண்டிகழுவியாவது நான் வூட்டுக்குப் பணம் அனுப்புவேன்”  என்றான். எனக்குக் கண்ணீர்ப் பெருக்கெடுத்துவிட்டது. இந்த அறியாமை நிலையிலிருந்து இவர்களைக் காப்பாற்று இறைவா என்று வேண்டிக்கொண்டேன்.

தமிழ்முஸ்லிம்களே தாராளமாக வெளிநாடுகளுக்குச் செல்லுங்கள், செல்வதற்கு முன் உங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நல்ல கல்வி, சுயவேலைத் திறன் என்று தேர்ச்சிபெற்றபின் செல்லுங்கள். அங்கே செல்லும் போது மனைவி மக்களையும் அழைத்துச் செல்லுங்கள்.

நாற்பதுநாள் மனைவியைப் பிரிவதையே இஸ்லாம் விரும்பவில்லை. நாலுமாதம் என்பது அதிகப்படியான பிரிவு நாட்களாக இருக்க வேண்டும் என்றும் அது சொல்கிறது. அதன்பின் எல்லாமே பிழைதான் - காரணங்களாக எதைச் சொன்னாலும்கூட அது பிழைதான்.

பிரயாணங்கள்
பிரிவுகள் மட்டுமல்ல
பிறவிகளும்

அன்புடன் புகாரி
 Source: http://anbudanbuhari.blogspot.in/

No comments: