Wednesday, March 2, 2016

தலைத்துணி - ஹிஜாப் - பர்தா - அபாயா

அன்புடன் புகாரி
 பர்தா என்றால் பெர்சியன் மொழியில் திரைச்சீலை என்று பொருள். ஆனால் அதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதுதான் முஸ்லிம் பெண்கள் அணியும் மேலங்கி. அதையே அரபு நாட்டில் அபாயா என்றழைப்பார்கள்

பர்தா என்பது உடையல்ல உடைக்கு மேல் அணியும் ஓர் அங்கிதான்.

தமிழ் முஸ்லிம்கள் ஊருக்கு ஊர் வேறு மாதிரி இருந்தார்கள் இந்த பர்தா விசயத்தில்.

தஞ்சாவூரின் கடலோரப் பகுதிகளில் அத்தனை முஸ்லிம் பெண்களும் கண்டிப்பாக துப்பட்டி என்னும் வெள்ளை நிற மேலங்கியை அணிவார்கள். இதிலும் விரிதுப்பட்டி கூசாலி துப்பட்டி என்று இருவகை உண்டு.

விரி துப்பட்டி என்பது அளவில் சிறியது. மூட்டப்படாமல் ஒரு வேட்டியைப் போல விரிந்து இருக்கும். கூசாலி துப்பட்டி என்பது அளவிலும் பெரியது மூட்டப்பட்டும் இருக்கும்.

துப்பட்டியை இட்டுக்கொண்டால், கைகள் கிட்டத்தட்ட முடக்கப்பட்டுவிடும். வேறு எதையும் எடுத்துக்கொள்வது என்பது சற்று சிரமம். ஆனால் அப்படியே பழகி இருப்பார்கள் அவர்கள்.

இப்போது இருக்கும் பர்தா என்பது ஆடையாய்த் தைக்கப்பட்டது என்பதால் கைகள் விடுதலையடைந்திருக்கும். எளிதாக அவர்களுக்குப் பயணம் செய்ய முடியும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கோயம்புத்தூர் போன்ற ஊர்களில் துப்படியோ அல்லது பர்தாவோ அணியும் பழக்கம் அன்றெல்லாம் இல்லை. அவர்கள் சேலையை ஒழுங்காகத் தன்னை முழுவதும் மறைத்துக் கட்டிக்கொண்டுதான் செல்வார்கள்.

தஞ்சாவூர் முஸ்லிம் பெண்கள்கூட திருச்சியைத் தாண்டிவிட்டால், மெதுவாகத் துப்பட்டியை நீக்கும் பழக்கமும் கொண்டிருந்தார்கள்.

முஸ்லிம் பெண்கள் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் என்று கண்டிப்பான அடிப்படை மதவாதிகள் மற்றும் சில ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

குறைந்தது ஹிஜாப் (தலைத்துணி) அணியுங்கள் என்று அடுத்த நிலை ஆண்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.

கூடவே பெற்றோர்களும் தன் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆண்கள் இந்த பர்தாவையோ ஹிஜாபையோ அணிவதில்லை. அப்படி அணிவதுதான் அராபிய நடைமுறை வாழ்க்கைப் பழக்கம். காரணம், பாலைவனச் சூரியன் மற்றும் கொடு மணல் காற்று.

கண்களைமட்டும் விட்டுவிட்டு ஆண்களும் பெண்களும் உடல் முழுவதையும் பருத்தித் துணியால் கட்டிவிடுவார்கள். இல்லாவிட்டால் பாலைவன மண் முழுவதும் காது மூக்கு தலை என்று ஒரு இடம் விடாமல் நிறைத்துவிடும்.

பர்தாவின் உண்மை நோக்கம் அடுத்தவர் கவனத்தில் இருந்து பெண்ணை மறைப்பதற்கே என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இன்றைய காலத்தில், பெண்கள் மிகுந்த வேலைப்பாடு மிக்க பர்தா அணிகின்றனர். இது அடுத்தவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து, பர்தா அணியும் நோக்கத்தையே பாழ்படுத்தி விடுகின்றது.

அதோடு பர்தா அணிவதைச் சில பெண்கள் வசதியாக்கிக்கொண்டார்கள். இரவு உடை போன்ற எந்த உடை அணிந்திருந்தாலும், தலை வாரி இருந்தாலும் இருக்காவிட்டாலும், உடனே நினைத்தவுடன் வெளியே கிளம்ப பர்தாவைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பொதுவாக பெண்கள் வெளியே புறப்படுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், கணவன் மனைவி சண்டை புறப்படும்போதே தொடங்கிவிடுகிறது. இதிலிருந்தும் சில பெண்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

இது இப்படி இருக்க, பர்தா ஹிஜாப் அணிவதால் ஏற்படும் மருத்துவத் தொல்லை என்ன என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கனடா போன்ற குளிர் நாடுகளில், சூரிய ஒளி மிகவும் குறைவு. சூரிய ஒளி குறைவு என்பதால், விட்டமின் ’டி’ உடலில் குறையும்.

இதனால் மன அழுத்தம், மன உளைச்சல், அவசியமற்ற துக்கம், கண்ணீர் என்பவையெல்லாம் பீடிக்கும்.

கனடாவில் சுத்தமாகவே சூரிய ஒளி இல்லை என்று இல்லை, தமிழ்நாட்டை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 25 விழுக்காடு சூரிய ஒளி உண்டு.

ஆனால் அந்த சூரிய ஒளி உடம்பில் படவிடாமல், முஸ்லிம் பெண்கள் ஆடை அணிந்தால் என்னாகும்? விட்டமின் குறைவினால் பாதிக்கப்படுவார்கள்.

மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு, எரிச்சல், துக்கம், கண்ணீர் காரணமாக குடும்பத்தில் சண்டை வரும். பெண்கள் சிடுசிடுவென்றும், எதிர்ப்பு காட்டும் மனோ நிலையிலும், அன்பை இழந்தவர்களாகவும் காணப்படுவார்கள்.

இதனால் குடும்பப் பிரச்சினை விவாகரத்து வரை செல்லவும் வாய்ப்புகள் உண்டு.

எந்த உடை எங்கே சரியோ, அந்த உடையைத் தேர்வு செய்து அணிவதே அறிவுடைமை.

உலகில் பெரும்பாலானோர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவே ஆடை அணிவார்கள்.

கவனமாகப் பார்த்தால் தெரியும், முஸ்லிம் ஆண்கள் சீதோஷ்ண நிலைக்கு ஏற்பவே ஆடை அணிகிறார்கள்.

ஆனால் பாவம் முஸ்லிம் பெண்களுக்குத்தான் அந்த உரிமை கொடுக்கப் படுவதில்லை.

அவர்கள் இந்த மருத்துவக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். அதில் அவர்கள் மட்டுமே சிக்கலும் துக்கமும் படவில்லை, குழந்தைகள் கணவன் குடும்பம் என்று எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள்.

முன்பு கூறியதைப்போல, தமிழ்முஸ்லிம் பெண்களில் பெரும்பாலானவர்கள் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்வரை வெள்ளைத் துப்பட்டியைத்தான் அணிந்திருந்தார்கள். அது சூரியக் கதிர்களைப் பிரதிபளித்துவிடும் என்பதால் அதிக புழுக்கம் ஏற்படாது.

சவுதிக்குப் போன மச்சான் திரும்பி வந்தபோது அங்குள்ள கறுப்பு அங்கியைக் கொண்டு வந்துவிட்டான். அதனுள் அறிந்தும் அறியாமலும் ஆசைப்பட்டு ஏற்று புழுங்கும் பெண்கள் ஏராளம்.

இப்படி பெண்களைப் புழுக்கத்தில் இடுபவர்கள் மதத்தில் அது அவசியம் அதன் காரணமாகவே அப்படிச் செய்வதாக் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.

அதோடு பெண்ணுக்கு மட்டுமே உடைக்கட்டுப்பாடு என்பதுபோல பலரும் பேசுகிறார்கள். அதுவும் உண்மையல்ல.

முஸ்லிம் பெண்களின் ஆடைகளைப்பற்றிக் கூறும்முன் முஸ்லிம் ஆண்களின் ஆடைகளைப்பற்றித்தான் முதலில் குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது.

24:30. நபியே, நம்பிக்கையுடைய ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்;

பெண்களுக்கு குர்-ஆன் 24:31ல் கூறப்பட்டவையின் சாரம் கீழே:

பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்
வெட்கத் தலங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்
வெட்கத் தலங்கள் வெளித்தெரியும் பொருட்டு அலங்கரிக்கக் கூடாது
முந்தானைகளால் மார்பகங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்

ஆகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை விசயத்தில் ஒரே கருத்தைத்தான் குர்-ஆன் கூறுகிறது.

ஆணுக்கு வெட்கத்தலம் என்பது ஆணுறுப்புப்பகுதி, பெண்ணுக்கு பெண்ணுறுப்புப் பகுதிக்கும் கூடுதலாக மார்பகங்கள்.

இந்த வித்தியாசத்தைத் தவிர ஆண்களின் உடையிலும் பெண்களின் உடையில் வேறு மாற்றங்களை குர்-ஆன் கூறவில்லை.

நான் காமப்பொருள் இல்லை என்னைப் பெண்ணாய் மதி என்று ஒரு முஸ்லிம் பெண்ணும், நான் காமப்பொருள் இல்லை என்னை ஆணாய் மதி என்று ஒரு முஸ்லிம் ஆணும் சொல்லும் வகையில் அவர்கள் ஆடை அணிதல் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே போதும். மற்றபடி தொப்பி, தலைத்துணி என்பவையெல்லாம் அவசியம் இல்லை.

மேலும், அழகிய ஆடைகளை உடுத்தி மகிழ்ந்திருக்கும்படி குர்-ஆன் கூறுகிறது.

இரண்டு காரணங்களுக்காக ஆடை உடுத்துதல் வேண்டும் என்பதை குர்-ஆன் கூறுகிறது:

7:26 நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம்

தங்களின் வெட்கத் தலங்களை மறைத்துக்கொண்டு தங்களின் மானத்தைக் காக்கவும், தங்களை அழகாக அலங்கரித்துக்கொண்டு மகிழ்வாக இருக்கவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை தேவைப்படுகிறது. இது பெண்ணுக்கு மட்டும் கூறப்பட்டதல்ல, ஆணுக்கும்தான்.

இப்படி ஆடையணிந்து மகிழ்வதை எவரேனும் தடுத்தால், அதை குர்-ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது

7:32. நபியே, இறைவன் தன் மக்களுக்காக வெளிப்படுத்தியுள்ள ஆடை அலங்கார அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?

ஆகவே, முஸ்லிம் ஆண்கள் தங்கள் பெண்களைப் பாதுகாப்பதாய் எண்ணி முழுப்போர்வைக்குள் உன்னை மறைத்துக்கொண்டு இரு, அதுதான் பாதுகாப்பு என்று சொல்கிறார்கள்

ஆனால் அவர்களின் விருப்பம் குர்-ஆனின் பரிந்துரைகளோடு ஒத்துப்போகவில்லை.

இங்கே நாம் இன்னொரு விசயத்தையும் பார்க்க வேண்டும். ஊரின், உலகின் சில பகுதிகளில் ஓர் அழகான பெண் நடந்துசென்றால், அதுவும் அவள் வெள்ளைத் தோலாய் இருந்துவிட்டால், விசப் பார்வைகள் கோடிகோடியாய்க் குவிந்து குத்திக் கிழிப்பதைத் தவிர்க்க முடியாது.

எந்தப் பெண்ணும் அந்தப் பார்வையில் அஞ்சி நடுங்காமலும் அருவருப்புப்படாமலும் இருப்பதில்லை. அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பர்தா ஒரு நல்ல கவசமாக அவர்களுக்கு இருக்கிறது.

பார்வைகள் சாதாரணமானவையாக மாறும் இடங்களில் பெண் கண்ணியமான உடை உடுத்திச் சென்றாலே போதும் என்று அவள் நினைக்கிறாள். உதாரணமாக சேலை சுரிதார் போன்றவை.

*

சிலர் குர்-ஆனில் பெண்கள் பர்தா கட்டாயம் அணிய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றே கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப சொற்களுக்கான பொருளை மாற்றியமைத்துக்கொண்டும் அப்படிச் சொல்கிறார்கள்.

”பெண்கள் உடலின் அந்தரங்க பாகங்களை மறைத்துக்கொள்ளட்டும்,
அவர்களின் கவர்ச்சியான பகுதிகளை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டாம்
மார்பகங்களின் மீது (”கிமர்ஸ்” khimars) தாவணி இட்டுக்கொள்ளட்டும்”

இதுதான் குர்-ஆன் 24:31 வசனத்தின் பெண்களின் ஆடை பற்றிய குறிப்புகள். இது மார்மீது தாவணி இட்டுக்கொள்ளச் சொல்வதைத் தலைத்துணி என்று தவறாக போதிக்கிறார்கள் சிலர்.

ஒரு முக்கியமான குறிப்பு இந்த 24:31 எதுவெனில். இந்த வசனத்தில் எங்குமே ”தலைமுடி” ”தலை” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.

பெண்களே உங்கள் தலையை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் சிகையை மூடிக்கொள்ளுங்கள் என்று குர்-ஆனில் எங்கேனும் உள்ளதா என்றால் எங்குமே கிடையாது.

அராபிய கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு புராதன ஆய்வாளர்கள், தாவணியைத் தலைத்துணி என்று தவறாகச் சொல்கிறார்கள். அராபியர்களின் பழக்க வழக்கங்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் மீது திணிக்கப்பார்க்கிறார்கள் வகாபிகள்.

தலையையும் தலைமுடியையும் மறைப்பது முக்கியமென்றால் இறைவன் தன் வசனங்களில் அதைத் தெளிவாகவே சொல்லி இருப்பான். அவனோ மார்பங்களை மறைப்பது பற்றியே கூறுகிறான். மார்பகங்களை மறைப்பது தாவணிதானே தவிர தலைத்துணி அல்ல.

இந்தத் தலைத்துணி என்று தவறாகச் சொல்லப்படும் தாவணிக்கு குர்-ஆனில் உள்ள சொல் ”khimar - கிமர்”

khimar என்ற அரபிச் சொல்லுக்கு cover - மூடி என்றுதான் பொருள். இந்த கிமரைக்கொண்டு மார்பகங்களை மூடச் சொல்கிறது குர்-ஆன். அவ்வளவுதான்.

ஹிஜாப் என்ற சொல் குர்-ஆனில் பல இடங்களில் வருகிறது அந்த ஹிஜாபுக்கும் இந்தக் கிமருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வசனம் 7:46, 17:45, 19:17, 33:53, 38:32, 41:5, 42:51 களைப் பார்த்துக்கொள்ளலாம்.

இறைவன் உங்கள் தலைமுடியையும் மார்பங்களையும் கிமர் இட்டு மூடிக்கொள்ளுங்கள் என்றால் குழப்பமே இல்லை. ஆனால் இறைவன் சொல்வதோ, உங்கள் மார்பங்களை கிமர் இட்டு மூடிக்கொள்ளுங்கள் என்றுதான்.

முடியை ஏன் மூடவேண்டும்? அதுவா பெண்ணின் கவர்ச்சியான பகுதி? சற்றே சிந்திக்க வேண்டாமா?

இறைவன் சொல்லாததை மனிதர்கள், மனிதர்கள் மீது சுமத்துவது கண்டிப்பாகக் கூடவே கூடாது என்று இறைவனே சொல்கிறான்.

முஸ்லிம் பெண்கள் தங்கள் மார்பகங்களை மூடிக்கொண்டால், கவர்ச்சியான பகுதிகளை மூடிக்கொண்டால், இறைவனின் கட்டளையை ஏற்றவள் ஆகிவிடுகிறாள்.

தலையோ தலைமுடியோ கவர்ச்சியானவை என்று இறைவனும் சொல்லவில்லை, நாமும் அறிவோம்.

அன்பேவா படத்தில் சரோஜாதேவியின் அழகைக் கூட்டுவதற்கு ஒரு தலைத்துணியையும் கறுப்புக் கண்ணாடியையும்தான் பயன்படுத்தி இருப்பார்கள். வழமையைவிட அழகாகத் தெரிவார் சரோஜாதேவி. அப்படியென்றால் தலைத்துணி கவர்ச்சியைக் கூட்டுகிறதா குறைக்கிறதா?

பிரச்சினை பெண்ணிடம் இல்லை, அவளை நோக்கும் ஆண்களின் பார்வையில் இருக்கிறது, அவனின் நோக்கத்தில் இருக்கிறது, அவன் மனோநிலையில் இருக்கிறது,

இது இப்படி இருக்க, ஓர் ஆண் தன் விருப்பம்போல் உடையுடுத்துகிறான், வாலிபக் கட்டுடலை வசீகரமாகக் காட்டும் ஆடை அணிகிறான். தலையையும் தலைமுடியையும் நன்கு அலங்காரம் செய்து திறந்து வைத்திருக்கிறான். இவனைக் காணும் பெண்களுக்கு இச்சைகள் வராதா? பெண் என்ன இச்சைகள் அற்றவளா?

இச்சைகளை அடக்குவதுதான் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம். ஆகவேதான் இறைவன் இந்த வசனத்தின் முதல் அடியிலேயே, பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று ஆணுக்கும் பெண்ணுக்கு சேர்த்தே சொல்கிறான்.

பிழை இறைவனின் சொல்லில் இல்லை, சந்தேகத்தில் பெண்ணை முடக்கி வைக்கும் ஆணிடம்தான் உள்ளது.

முஸ்லிம் செய்யவேண்டியது இறைவன் சொல்வதைப்போல, மனிதன் நாகரிகம் பெறுவதுதானே தவிர உச்சிமுதல் கணுக்கால்வரை பெண்ணை மூடி வைப்பதல்ல என்று மிதவாதிகள் கூறுகிறார்கள்.

தலைத்துணி என்பது அரபு நாட்டின் இஸ்லாமியர்களுக்கானது இல்லை. யூதர்கள் தலைத்துணி இட்டார்கள். கிருத்துவர்கள் தலைத்துணி இட்டார்கள். இதெல்லாம் கடுமையான பாலைவனத்தின் தேவைகள்.

கிருத்தவர்களின் கன்னிகாப்பெண்களின் துறவு வாழ்க்கைக்கு தன்னை முழுவதும் மூடிக்கொள்ளும் ஆடை தேவைப்பட்டது. அழகிய வெண்ணிறத்தில் அவர்கள் உடல் முழுவதையும் மறைத்து கூடவே தலையையும் மறைத்து ஆடை உடுத்திக்கொண்டார்கள்.

இதெல்லாம் துறவே கூடாது என்று சொல்லும் இஸ்லாத்துக்கு ஏற்புடையன அல்ல என்பதை நாம் உணரத்தான் வேண்டும்!
 
 அன்புடன் புகாரி

No comments: