Sunday, January 17, 2016

அலெக்ஸாண்டிரியா


Mohamed Salahudeen



அலெக்ஸாண்டிரியா நகரின் பெயரை வைத்தே இந்த நகரை தோற்றுவித்தவர் யார் என்பதை அறிந்துக்கொள்ளலாம், ஆம் மாவீரர் அலெக்சாண்டர் இந்தப் பகுதியை வெற்றிக்கொண்டப்பின் அவர் பெயராலேயே உருவாக்கப்பட்ட நகரம். மத்தியத் தரைக் கடலை ஆரத் தழுவி இருக்கும் அழகிய நகரம். பேரழகி கிளியோபாட்ரா ஆட்சி செய்த நகரம். உலகின் பேரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நகரம். இந்த நகரில் நிர்மாணிக்கப்பட்ட கலங்கரை விளக்கு அன்றையக் காலத்தில் உலகின் உயரமானக் கட்டிடங்களில் ஒன்றாம். அதன் மேற்பகுதியில் கண்ணாடிப் பொருத்தப்பட்டு இருந்ததாம், பகலில் சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்கும் வகையிலும் இரவில் நெருப்பைக் கொண்டு வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு இருந்ததாம்.
உலகில் இந்த நகரைப் போல் நீண்ட நெடிய வரலாறும் வனப்பும், வாணிபமும் செழித்து வளர்ந்த நகரம் மிக மிகக் குறைவு. மார்க்கோ போலோ இந்த நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது கி.பி. 1300 வாக்கில் அலெக்ஸாண்டிரியாத் துறைமுகமும் சீனாவின் கான்ஜோவ் துறைமுகமும் உலகில் மிகவும் பரப்பரப்பான வியாபாரப் போக்குவரத்து நடந்த துறைமுகம் எனக் குறிப்பிடுகிறார்.இன்றைக்கும் எகிப்தின் மிக முக்கியமானத் துறைமுகமாக அலெக்ஸாண்டிரியா இருக்கிறது
.

தாலமி 2 என்பவரால் இங்கே மிகப் பெரிய நூலகம் அமைக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் தங்களின் அறிவைப் பட்டைத்தீட்டிக்கொள்ளும் வண்ணம் இந்த நகருக்கு வருகைப் புரிந்துள்ளனர்.காலப்போக்கில் இந்த நூலகம் சிதைந்துப்போய்விட்டது.
.இன்றைக்கு பழைய நுலகம் இருந்த இடத்தில் பழைய நூலகத்தின் பெருமையைத் தொடரும்வண்ணம் மிக அழகான புதிய நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நூலகத்தில் 20 இலட்சம் புத்தகங்கள் உள்ளனவாம். 50 இலட்சம் புத்தகங்கள் வைப்பதற்கு வசதி உள்ளதாம். 2600 நபர்கள் அம்ர்ந்துப்படிக்க இட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகத்தின் மேற்கூரை பகல் முழுதும் சூரிய ஒளியை முழுதாக நூலகத்தின் உட்பகுதிக்குள் படரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு
.
நிறைய புத்தகங்கள் மின் புத்தகங்களாக மாற்றப்பட்டு இணைய வழியேப் படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பார்வையற்றோர் படிக்க வசதியாக நூலகத்தின் ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இது எகிப்து நாட்டின் பார்வையற்றப் புகழ்பெற்ற எழுத்தாளரின் பெயரில் இயங்குகிறது.
சிறுவர்களுக்கான புத்தகங்களும் தனியாக நூலகத்தின் ஒரு பகுதியில் இயங்குகிறது. நூலகத்தின் கீழ் தளத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.
அரிய புத்தகங்களுக்காக ஒரு சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே எகிப்திய பாரோ மன்னர்களின் உடலை இறந்தப்பின் எவ்வாறு அடக்கம் செய்யுமுன் செய்யவேண்டிய சடங்குகள் பற்றிய குறிப்பு The book of Dead – Papyrus scroll. இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு சுருள் மட்டுமே பழைய நூலகத்திலிருந்து மீட்கப்பட்டதாம். அலெக்ஸாண்டிரியா நூலகம் உலகின் 6 வது மிகப்பெரிய நூலகமாம்.
நூலகத்தைவிட்டு வெளியே வந்தால் மத்தியத் தரைக்கடல் கண்ணுக்கு விருந்தளிக்கிறது. கடற்கரையில் மம்லூக் அரசர்கள் கட்டியக் கோட்டை இன்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
இந்தக் கடற்கரைக் காட்சிகளைக் கண்டுக்களித்துக் கொண்டே மதிய உணவாக மத்தியத் தரைக் கடலிலிருந்து பிடிக்கப்பட்ட மீன் உணவையும் சாப்பிட்டோம்.இந்த நகரைப் பற்றி இன்னும் சொல்ல ஏராளமானச் செய்திகள் இருக்கின்றன. ஒரு கொசுறு செய்தி இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்படுவதற்கு முன் அதிகமான யூதர்கள் வசித்த நகரம் அலெக்சாண்டிரியா.
ஆண்டவர்கள் எல்லாம் ஆண்டவனிடம் போய் சேர்ந்துவிட்டார்கள்.
எல்லாப் பேரரசுகளின் எச்சமும் இந்த நகரத்து மண்ணில் இன்னும் கண்ணுக்கு சாட்சியாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

Mohamed Salahudeen

No comments: