Thursday, January 28, 2016

பெற்றோர்களை மதிப்போம் - இறை அருளைப் பெருவோம்


பெற்றோர்களை மதிப்போம் - இறை அருளைப் பெருவோம்

     ஹிஷாம் M.I.Sc (India)  

o பெற்றோர்களின் பராமரிப்பு.

o பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

o முதியோர் இல்லமும் பெற்றோர்களின் நிலையும்.

o பெற்றோர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும்: காரணம் என்ன?

o அல்லாஹ்வை வணங்குவதுடன் பெற்றோர்க்கு உபகாரம் செய்வது

o தொழுகையா? தாயா?

o இணை கற்பிக்கும் தாய்க்கும் உபகாரம் செய்தல்.



''தாய் - தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை 'சீ' என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக.'' (திருக்குர் ஆன் 17:23)

''எனக்கும் (அதாவது அல்லாஹ்வுக்கும்) உன்னுடைய தாய் தந்தையர்க்கும் நன்றி செலுத்தி வருவாயாக.'' (திருக்குர் ஆன் 31:14).

''நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கம் நலம்; செய்ய வேண்டியது) பற்றி அறிவுறுத்திக் கட்டளையிட்டுள்ளோம்.'' (திருக்குர்ஆன் 31:14)

பெற்றோர்களின் பராமரிப்பு:

ஒருவர் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியத்தைப் பெறவில்லை என்றால் அவர்படும் வேதனையை வரையருக்க முடியாது. குழந்தையைப் பெறுவதற்காக அவர் எவ்வளவு காசு வேண்டுமானாலும் செலவு செய்வார். காரணம் குழந்தை இருந்தால் பாச மழையைப் பொழிய முடியும் என்பது தான்.

தனக்கு குழந்தை உருவாகிறது என்ற செய்தி தெரிய வந்தால் அன்றிலிருந்து அந்தக் குழந்தையை சுமக்கும் தாயுடைய தியாகம் ஆரம்பமாகிறது.தன் குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்காக எத்தனையோ உணவு வகைகளைத் தியாகம் செய்கிறாள்.தான் விரும்பிய உணவை சாப்பிட முடியாத நிலை அவளுக்கு ஏற்படுகிறது.

குடும்பத்தில் அனைவரும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சுற்றுலா சென்றாலும் அந்த பயணத்தில் அவள் இடம் பெற மாட்டாள் இடம் பெறவும் முடியாது.

வயிற்றில் இருக்கும் தன் குழந்தைக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தால் அந்தக் குழந்தை மீது அவர்கள் காட்டும் பாசத்தின் அளவைத்தான் நாம் வர்ணிக்க முடியுமா?

தாய் தன் குழந்தைக்காக இரவு முழுவதும் தூக்கத்தை தியாகம் செய்கிறாள். இடி இடித்தாலும் சற்று கூட அசராது தூங்கும் தாய் தன் குழந்தை சற்று அசைந்தாலும் தூங்க மாட்டாள்.என் குழந்தைக்கு என்னவோ எதோ என்று உள்ளம் பதரி விடும்.

தான் பசி மறந்து தன் குழந்தையின் பசியைத் தீர்பாள். இவ்வாறு பல சிறமங்களுக்கு மத்தியில் குழந்தையை வளர்ப்பாள். தன் குழந்தை எதையும் ஆசைப்பட்டால் அதனை எவ்வளவு சிறமப்பட்டாவது வாங்கிக் கொடுப்பாள்.தன் குழந்தைக்கு ஏதும் நோய் எற்பட்டால் தன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து ஓடும்.

இவ்வளவு பாசமாக இருப்பாள் தாய் இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பகல் முழுவதும் குழந்தையின் எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டு உழைக்கிறார் தந்தை. குழந்தை எதிர்காலம் நல்லதாக அமைய வேண்டும் என்று எண்ணி தன்னுடைய மகிழ்ச்சியை தூக்கி எறிந்து விட்டு வெளிநாடு சென்று உழைக்கிறார். காரணம் இருவருமே தங்களுடைய குழந்தைதான் வாழ்கை என்று நினைத்து வாழ்கின்றனர்.

தங்களை விட்டால் தமது குழந்தையை கவனிக்க வேறு யாரும் இல்லை. என்று நினைத்து தங்களுடைய பாசத்தை முழுமையாக காட்டி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சிறுவயதிலிருந்து நம்மை பராமரிப்பதில் தான் அவர்களுடைய அதிகமாக காலம் கழிந்து இருக்கும்.அவர்கள் நம்மை எவ்வளவு பராமரித்து இருப்பார்கள் என்பதற்கு இந்த திருமறை வசனமே சான்றாக இருக்கும்.

சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! (திருக்குர்ஆன் 17:24)

இந்த துஆவை அல்லாஹ் நம் பெற்றோர்களுக்காக கேட்குமாறு நமக்கு கட்டளை இடுகிறான். இறைவனிடம் பிரார்த்திக்கும் போது பெற்றோர்கள் நம்மை சிறிய வயதில் எவ்வாறு கவணித்தார்களோ! என்று அவர்கள் பராமரித்ததை நாம் சுட்டிக்காட்டி அல்லாஹ்விடம் கேடக்க வேண்டும் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நம்மை பராமரித்துள்ளார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

அவர்களுடைய வாழ்கையில் திருமணம் என்று ஒன்று குறுக்கிடுகிறது. அதற்குப் பிறகு தான் தன் மகனுக்கு தான் இல்லாமல் வாழமுடியும் என்பதையே அவர்கள் உணருவார்கள்.

இந்த திருமணத்திற்குப் பிறகு தான் அதிகமான பெற்றறோர்களின் வாழ்கை தலைகீழாக மாறுகிறது.குழந்தை தான் வாழ்கை என்று வாழ்ந்து கொண்டு இருந்த பெற்றோர்களுக்கு மகன் செய்யும் நன்றிக் கடன் என்ன?? தன் மனைவி சொல்லைக் கேட்டு அவர்களைப் புறக்கனிப்பது. இல்லை என்றால் மாதாந்தம் வீட்டுக்கு வாடகை கொடுப்பதைப்போல் ஒரு குறிப்பிட்ட தொகையை தன் பெற்றோர்களுக்கு கொடுப்பார்கள். இதுதான் அவர்களை கண் கலங்காமல் கவனித்தற்கு பரிகாரமா??

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? அவர்களுடைய பணத்தையா?? இல்லை பாசத்தை. தன் மகன் ஒரு கோடி பணம் கொடுத்தாலும் ஒரு நிமிடம் அவர்களுடன் அமர்ந்து பாசமாக பேசுவதற்கு ஈடாகுமா?

தம் பெற்றோர்கள் தங்களுக்கு செய்த உபகாரத்திற்கு நாம் காசு கொடுத்து சரி செய்யலாம் என்று நினைத்தால் இது எந்த விதத்தில் சரியாகும்.

முதியோர் இல்லமும் பெற்றோர்களின் நிலையும்:

இஸ்லாமிய மார்க்கம் தான் மற்ற மதங்களை எல்லாம் விட அதிகமாக பெற்றோரை மதிக்குமாறு கட்டளை இடுகிறது.அப்படியிருந்தும் அதிகமானவர்கள் அவர்களை மதிக்காமல் இருப்பது தான் வருத்தப்படவேண்டிய விஹயமாக இருக்கிறது.

மகனின் திருமணத்திற்குப் பிறகு அதிகமான பெற்றோர்களின் வாழ்கை முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறது.

சிறு வயதில் அவர்கள் நம்மை நோய் அறியாமல் வளர்த்து இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு நோய்வரும் போது கவணிப்பதற்கு யாரும் இல்லை.

நம்மை பசி அறியாமல் வளர்த்து இருப்பார்கள் அனால் அவர்களது பசியை தீர்ப்பதற்கு யாரும் இல்லாத நிலைமை. நமக்கு பசிக்கும் போது எத்தனை தடவை நமக்கு ஊட்டி விட்டு இருப்பார்கள்! அவர்கள் முதுமை வயதை அடைந்த பின்பு ஒரு பிடி சோறு ஊட்டி விட்டால் அவர்கள் மகிழ்ச்சியின் உச்சகட்டத்தை அடைவார்கள்.

ஆனால் அவர்கள் முதிய வயதை அடைந்து சிறமப்படும் போது அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டியவர்கள் தாங்கள் வாயாலே இவர்கள் எங்களுக்கு தொல்லை தருகிறார்கள்! நிம்மதியாக இருக்க விடுவது இல்லை! என்று எல்லாம் கூறுகிறார்கள்.

பால் ஊட்டி சீராட்டி வளர்த்த தாயின் உள்ளம் எவ்வளவு சிறமப்படும்.இவ்வாரு கூறுவதைக் கேட்ட சில பெற்றோர்கள் தம் பிள்ளைகள் எங்களால் சிறமப்படக்கூடாது என்று எண்ணி தாங்களாகவே முதியோர் இல்லத்தை தேடுகிறார்கள்.

இன்னும் சில பெற்றோர்களை இவர்களாக முதியோர் இல்லத்தில் இணைத்து விடுகிறார்கள். காரணம் பெற்றோர்கள் இவர்களை நிம்மதியாக இருக்க விடுவது இல்லை என்பது தான். நாம் சிறுவயதிலிருந்து இப்போது வரைக்கும் நிம்மதியாக இருப்பதற்கு தம் பெற்றோர்கள் தான் காரணம் என்பதை மறந்து விடுகிறார்கள்.நீங்கள் சிறிய வயதில் இருந்ததிலிந்து பெரியவர் ஆகும் வரைக்கும் உங்களை சிரமம் என்று பெற்றோர்கள் எண்ணியதுண்டா?

உங்கள் மனைவி கூட சில காரயங்களை செய்வதற்கு மறுப்பார்கள் ஆனால் தாய் மறுப்பாளா? நீங்கள் வெளி ஊரி இருந்து வந்தால் அனைவரும் முன்னால் தன் தாய் வந்து நிற்பாள் தன் மகனின் முகத்தைப்பார்த்து நிம்மதி அடைவதற்காக.இவ்வளவு உங்கள் மீது பாசத்தை பொழியக்கூடிய தாயை நாம் திட்டுவது மிகப் பெரிய பாவமாகும்.

உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள் (திருக்குர்ஆன் 17:23)

அவர்கள் நமக்கு கோபம் ஊட்டக்கூடிய சில காரியங்களைச் செய்தால் நாம் சிறிய வயதில் இருக்கும் போது எவ்வாறு அவர்கள் பொறுத்துக்கொண்டார்களோ அதே போல் நாமும் பொருத்துக் கொள்ள வேண்டும். அதை எல்லாம் ஒரு சிரமமாக நிணைக்கக்கூடாது.நாம் அவர்களுக்கு கொடுத்த சிரமத்தின் பாதியைக் கூட நாம் அடைய மாட்டோம். எனவே எதுவாக இருந்தாலும் அதனைப் பொருத்துக் கொண்டு அவர்களை நம்முடன் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்பதற்கு காரணம் என்ன?

ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றேடுப்பதில் இருந்து ஏராலமான சிரமங்களை அடைகிறாள்.ஆனால் இஸ்லாமிய மார்க்கம் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யச் செல்வதற்கு காரணம் என்னவென்றாள் நம்மை சுமந்து பெற்று எடுத்தது தான். ஒரு தாய் குழந்தையை பெற்று எடுப்பதைப் போல் ஒரு சிறமம் உலகில் இருக்காது.ஏனெனில் அந்நேரத்தில் அவள் மரணத்தின் விழிம்பை அடைகிறாள்.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.(திருக்குர்ஆன் 31:14)

இந்த திருமறை வசனத்தில் தாய் குழந்தையை சிரமத்திற்கு மேல் சிறமப்பட்டு சுமக்கிறாள் என்று குறிப்பிட்டு விட்டு அதற்காக தாய்க்கு நன்றி செலுத்துங்கள் என்று குறிப்பிடுகிறான். கருவில் சுமந்தற்கே உபகாரம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் நம்மை பெற்று எடுத்த பிறகு சிரமம் பாராமல் நம்மை வளர்த்ததற்கு எவ்வளவு பணிவிடை செய்ய வேண்டும் சிந்தித்துப்பாருங்கள்!.

அல்லாஹ்வை மட்டும் வணங்குவதுடன் பெற்றோர்க்கு உபகாரம் செய்வது:

அதனால் தான் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வை மட்டும் வணங்க கட்டளை இடுவதுடன் பெற்றோர்களுக்கும் உபகாரம் செய்யுமாறும் கட்டளை இடுகிறது.

என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23)

அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காமல் இருப்பது எவ்வளவு அவசியமோ அதே போல் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்வதும் அவசியமாகும் என்பதை நாம் உணரலாம்.அல்லாஹ்விற்கு இணை கற்பிக்க கூடாது என்பதற்கு காட்டும் அக்கரையை எந்த தவ்ஹீத் வாதியும் பெற்றோரைப் பேணுவதில் காட்டுவது இல்லை. அதை அவர்கள் ஒரு பெரிய விஷயமாக கருதுவதும் இல்லை.

தொழுகையா? தாயா?

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஜுரைஜ் என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். 'நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா? என்று (மனத்திற்குள்) கூறினார்.

பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே என்று கூறினார். (ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார்.

அப்போது ஒரு பெண், நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன் என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள்.

அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன் என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர்.

ஜுரைஜ் உ@ச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), (இன்ன) இடையன் என்று கூறியது.

இதைச் செவியுற்ற மக்கள், உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம் என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ் இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும் என்று கூறிவிட்டார். (ஆதாரம் : புகாரி 2482 - அறிவிப்பவர்: அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)

இந்த செய்தியில் அடிப்படையில் நாம் சுன்னத்தான தொழுகைகள் தொழுது கொண்டு இருந்தாலும் தாயின் அழைப்புக்கு பதில் அழிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.இஸ்லாமிய மார்க்கம் தாயை எந்த அளவுக்கு மதிக்க சொல்கிறது என்பதை இந்த செய்தி அழகாக படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் நாம் அட்பமான விஷயத்திற்கெல்லாம் தாயுடைய அழைப்புக்கு பதில் அழிக்காமல் இருக்கின்றோம்.

இணை கற்பிக்கும் தாய்க்கும் உபகாரம் செய்தல்:

என்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள்.நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் என் தாயார் என்னிடம் அசையுடன் வந்துள்ளார். ஏன் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நாடந்து கொள்ளடுமா? என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன்."ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி 2620 )

இஸ்லாமிய மார்க்கம் இணை கற்பிக்கும் தாயாக இருந்தாலும் தன் தாய்க்கு உபகாரம் செய்யச் சொல்கிறது. தாய் நல்லவளா? கெட்டவாளா? என்று பார்க்கச் சொல்லவில்லை தன்னுடைய தாய் இணை கற்பிக்கக்கூடியவாளாக இருந்தாலும் அவர்களுக்கு செய்யும் உபகாரத்தில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று சொல்கிறது. இஸ்லாத்திற்கு முரணான காரியங்களில் மட்டும் நாம் அவர்களை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.குடும்பத்தில் இஸ்லாத்திற்கு முரனான வரதட்சனை திருமணங்கள் நிகழ்ந்தால் அதில் கலந்து கொள்ளக்கூடாது.ஆனால் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யும் மற்ற மற்ற காரியங்களில் அவர்களுக்கு எந்த குறையும் வைக்கக் கூடாது.

பேற்றோர்களின் உணர்வை புரிந்து அவர்களுக்கு உபகாரம் செய்யக்கூடிய நல்லவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!

Posted by RASMIN M.I.Sc (India)

source: http://www.rasminmisc.tk/
http://www.nidur.info

No comments: