Monday, November 30, 2015

கோஷ்டி மனப்பான்மை

முஸ்லிம்  சமுதாயம்  பேச்சளவில்  ஒரே  உம்மத்  எனும்  சமுதாயத்தவராகவே  இருக்கிறார்கள். இத்தனை பெரிய சமுதாயம் உண்மையிலேயே ஒன்றுபட்டால் முழு ஒற்றுமையோடு இறைவனின் வார்த்தையை உயர்த்துவதற்கு வேலை செய்தால் கண்ணியமும், சிறப்பும் அவர்களின் காலடியில் விழ எந்த வினாடியும் தயாராக இருக்கும். ஆனால் இன்று பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. இப்படிப்பட்ட கோஷ்டி மனப்பான்மையால், தமது சமுதாயத்தையும், தமது பள்ளிவாசல்களையும் தனியாக்கிக் கொண்டார்கள். ஒருவன் மற்றவனை திட்டுகிறான். பள்ளிவாசலிருந்து அடித்து விரட்டப்படுகிறான்! வம்பும் வழக்கும் நடத்தப்படுகின்றன. இப்படி முஸ்லிம் சமுதாயத்தை துண்டு துண்டாக்கிப் போட்டுவிட்டார்கள்.

    சண்டை போடுகிற போட வைக்கின்றவர்களின் உள்ளம் இதிலும் அமைதி அடையாத போது, சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் ஒருவனை மற்றவன் காஃபிர் என்றும் பாவி என்றும் வழிகெட்டவன் என்றும் அழைக்க ஆரம்பிக்கிறான். கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து போகிறார்கள். தனிக்குழு அமைக்கிறார்கள். தமது தொழுகையையும், பள்ளிவாசல்களையும்  தனியாக்கிக் கொள்கிறார்கள். ஒரு சாரார்  மறுசாராருடன் கலந்து  பழகுவது, மற்ற  வகையில் தொடர்பு வைப்பது அனைத்தையும் தடை செய்து விடுகிறார்கள். தாம் தனிப்பட்டதொரு சமுதாயம் என்பதுபோல் அவர்கள் தமது மத்ஹபுக்கென்று வழிமுறைக்கென்று தனிக்குழு அமைத்துக் கொள்கிறார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை உங்களால் கணக்கிட முடியாது.

   ஆனால், உண்மையில் இப்படி கோஷ்டிகள் அமைந்த காரணத்தால் இந்தச் சமுதாயம் நூற்றுக்கணக்கான துண்டுகளாகி விட்டது; மேலும் சிதறிக் கொண்டிருக்கிறது. மிகக் கொடுமையான துன்பங்கள் சூழ்ந்திருக்கிற இந்த நேரத்தில் அவர்களால் ஒன்று சேர்ந்து நிற்க முடியவில்லை! ஒரு பிரிவில் இருக்கிற முஸ்லிம்கள் மற்றொரு  பிரிவினர் மீது  வெறுப்புக் கொள்கிறார்கள். இன்னும்  சொல்லப்போனால்  அதைவிட  அதிகமாகவே வெறுப்புக் கொள்கிறார்கள். ஒரு சாரார் மறு சாராரைத் தாழ்த்தும் எண்ணத்தினால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள்.

   இந்தச் சூழலில் முஸ்லிம்களைத் தாழ்ந்தவர்களாகவும், இழிந்தவர்களாகவும் நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அது அவர்கள் கைகளாலேயே சம்பாதித்துக் கொண்டதுதான்! இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு இருக்கின்ற தண்டனை அவர்கள் மீது இறங்கியிருக்கிறது.
  “உங்களை பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் ஆற்றலுள்ளவன்” (6:65)

மேற்குறிப்பிட்ட பிரிவினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை முஸ்லிம்கள் அனைவரும் அனுபவிக்கிற இந்தத்  தண்டனையிலிருந்து  விடுதலை  பெறவே முடியாது!  எனவே  நீங்கள் தாமதம் எதுவுமின்றி அந்தப் பிரிவினைகளை விட்டொழியுங்கள்! ஒருவருக்கொருவர் சகோதரராய் ஆகிவிடுங்கள்;  ஒரே சமுதாயமாய் ஆகி விடுங்கள். இறை மார்க்கத்தின் அடிப்படையில் அஹ்ல ஹதீஸ், ஜாக்ஹ், தவ்ஹீ ஜமாஅத், ஹனபி, ஷாபி, தேவ்பந்தீ, பரேலவி, ஷியா, ஸன்னி எனும் வகையில் தனிதனிக் குழுக்கள் உருவாக முடியாது. இந்தக் குழுக்கள் எல்லாம் அறியாமையினால் தோற்றுவிக்கப்பட்டவை. இறைவன் தனது உம்மத்தாக ‘இஸ்லாமிய சமுதாயம்’ என ஒரே ஒரு சமுதாயத்தைதான் அமைத்திருக்கிறான்.

    எனவே அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே இக்குழுக்களை நம்பி செயல்படுவதை கைவிடுங்கள். இந்த நிலையில் இந்திய நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் தக்க கவனம் செலுத்தி குர்ஆன், ஹதீதுகளின் போதனைகளை எடுத்து நடக்க முற்படாவிட்டால் இன்னும் பல தீய விளைவுகளை முஸ்லிம் சமுதாயம் சந்திக்க நேரிடும் என்ற கசப்பான உண்மையை நம்மால் மறைக்க முடியாது.
http://www.readislam.net/portal/archives/885

No comments: